மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் பயிலும் வேளாண் கல்லூரிகளில் இளங்கலை பயின்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு, மறுத்தேர்விற்கான எழுத்துத்தேர்வு கடந்த சூலை மாதமும், செய்முறைத்தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.
கொரோனா முடக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக நடைபெற்ற இத்தேர்வில், சுமார் 4, 300 மாணவர்கள், இணைய வழியில் தேர்வு எழுதியுள்ளனர். இம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக் கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டுள்ளது.
இதில், 90 விழுக்காடு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
கண்காணிப்புடன் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகம் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தாலும் கூட, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மட்டும் தேர்ச்சி பெறவில்லை என அறிவித்திருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒட்டு மொத்தமாக மாணவர்களை தேர்ச்சி பெறவில்லை எனக்கூறுவது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் நேர்மையை சந்தேகிக்க தோன்றுகிறது.
குறிப்பாக, மாணவர்களின் விடைத்தாளை திருத்தியதற்கான மதிப்பெண்களை குறிப்பிடப்படாமல், தேர்ச்சி பெறவில்லை என்று பொத்தம் பொதுவாக அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பல்கலைக்கழகத்தின் இத்தகையை நடவடிக்கையால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே கொரோனா முடக்கத்தால், இரண்டாண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் மறுத்தேர்வை எழுதியுள்ள நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் செய்த குளறுபடியால், மாணவர்களை தேர்ச்சி பெறவில்லை என அறிவித்து, அவர்களை மீண்டும் மறுத்தேர்வு எழுத சொல்வது வேதனையளிக்கிறது.
எனவே, மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மறுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்து விட்டு, மாணவர்களின் மதிப்பீடு அடிப்படையில், மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.