தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தோ, ஏற்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை தமிழக அரசு இன்னும் தள்ளுபடி செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அரியலூர் மாவட்டத்தின் 10 இடங்களில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்காக கிணறுகள் தோண்டுவது உட்பட தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து கைட்ரோகார்பன் திட்டங்கள் அல்லது எண்ணெய் வளத்தைக் கண்டறியும் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யுமா? என்று வினா எழுப்பியிருந்தேன். இந்தத் திட்டங்களுக்கு ஏற்பளித்தோ, ஏற்பளிக்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து ஏதேனும் பதில் வந்திருக்கிறதா? என்றும் கேட்டிருந்தேன்.
மாநிலங்களவையில் எனது வினாவுக்கு விடையளித்த பெட்ரோலியத்துறை இணையமைச்சர் இராமேஸ்வர் தேலீ,‘‘ எந்த ஒரு கைட்ரோகார்பன் திட்டமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து உரிய அனுமதிகளை பெற்ற பிறகு தான் செயல்படுத்தத் தொடங்குவோம். அரியலூரில் 10 இடங்களில் எண்ணெய் வளத்தை கண்டறிவதற்கான கிணறுகள் அமைக்கப்படவுள்ள இடங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு வெளியில் தான் உள்ளன் என்பதால், அவற்றுக்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இத்திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக, ஏற்க மறுப்பதாகவோ தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை’’ என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படக்கூடாது என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஏராளமான கைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 7264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டங்களில் பெரும்பாலானாவை காவிரி பாசன மாவட்டங்களைக் கடந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை நீண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி இத்திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தத் திட்டங்களை தமிழக அரசு இன்று வரை எதிர்க்காததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அதேபோல், நடப்பாண்டின் மத்தியில் கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும் எண்ணெய் வளத்தை கண்டறிவதற்காக கிணறுகள் தோண்டி ஆய்வு செய்ய ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது. ஆனால், அவற்றில் கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான ஓ.என்.ஜி.சி அமைப்பின் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான விண்ணப்பத்தை இன்று வரை தள்ளுபடி செய்யவில்லை என்று தெரிகிறது. அதனால் அரியலூர் மாவட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் ஆபத்து உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் அரியலூர் மாவட்டம் மோசமான பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் கைட்ரோ கார்பன் திட்டங்களை எந்த வடிவிலும் செயல்படுத்தக்கூடாது என்பது தான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடும் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலின் பயனாக காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்ட போது கூட, அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. அத்தகைய சூழலில் அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு இன்னும் தள்ளுபடி செய்யாதது ஏன்?, ஒருவேளை தள்ளுபடி செய்திருந்தால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடாதது ஏன்? என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு கைட்ரோ கார்பன் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவெடுத்து அதை மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.