முதல் அறிவிப்பு! தங்களின் மேலான கவனத்திற்கு…
கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்கக்கூடாது.
இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் கழிவுகளையும் பத்திரமாக நிரந்தரமாகப் புதைப்பதற்கான ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) எங்கே, எப்போது அமைக்கப்படும் என்பதை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
ஆழ்நிலக் கருவூல அறிவிப்புக்குப் பின்னரே, ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) அமைப்பைக் கட்டுவது குறித்த மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
அணுக்கழிவுப் பிரச்சினையில் தெளிவு ஏற்படும் வரை கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளில் விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.
கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதலிரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள், முறைகேடுகள், ஆபத்துக்கள் பற்றிய சார்பற்ற விசாரணையும், வெள்ளை அறிக்கையும் வேண்டும்,
எனும் ஐந்து கோரிக்கைகளுடன் சனவரி 4, 2022, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றம் அருகே நடத்துவதென்று தீர்மானித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார்கள்.
காவல்துறை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறோம். பல்வேறு ஊர்களைச் சார்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அணியமாய் இருக்கின்றனர்.
சனவரி 4, செவ்வாய்க்கிழமை, நாளை இந்த போராட்டத்திற்கென ஒதுக்கிவைத்து, தாங்களும், தங்கள் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
—
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
பூவுலகின் நண்பர்கள்,
அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
மற்றும் ஆதரவு இயக்கங்கள்.
டிசம்பர் 18, 2021.