Home>>இந்தியா>>கட்டாய தடுப்பூசிக்கு எதிராக சீர்காழியில் மக்கள் போராட்டம்!
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுநாகப்பட்டினம்மருத்துவம்மாவட்டங்கள்

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக சீர்காழியில் மக்கள் போராட்டம்!

தமிழ்நாடு அரசு கொரானா தடுப்பூசியை கட்டாயமாக்குவதைக் கண்டித்து – இன்று (29/12/2021) மதியம் சீர்காழியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் – தமிழ்நாடு அரசின் கட்டாய தடுப்பூசி கூடாது என்றும் விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்னிறுத்தி
இன்று மதியம் 2.30 மணியளவில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் அணிவகுத்து நின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் இதில் பங்கேற்க வந்த 30 தோழர்களை காவல்துறையினர் கைதுசெய்து கொண்டு சென்றனர். இதனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு தோழர் சுதாகர், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சீர்காழி நகரச் செயலாளர் தோழர் அரவிந்தன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். ததேபே தலைமை செயற்குழு உறுப்பினர் – செந்தமிழ் இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் தோழர் க. முருகன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்.

நிகழ்வில் சித்த மருத்துவர் திரு தணிகாசலம், தமிழ்ப் பேரரசுக் கட்சித் இயக்குனர் திரு கௌதமன், மருத்துவர் கோ. பிரேமா, சுதந்திர தமிழகம் இயக்க மருத்துவர் ரோஸ், மெய்ஞ்ஞான குடில் வாழ்வியல் மைய ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஞான சுந்தரபாண்டியன், கிட்டு ஐயா மரபு வாழ்வியல் பொறுப்பாளர் திரு கி காசிராமன், தமிழர் வணிகக்களம் மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெண்ணாடம் மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், சிதம்பரம் நகரச் செயலாளர் எல்லாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவின் பறையாட்டம் நடைபெற்றது.

அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும் சட்டத்துக்கு முரணான ஒற்றை மருத்துவ முறை திணிப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர். அனைவரும் கைதுக்கு உட்பட அணியமான நிலையில் நிலையில் ஏற்கனவே கைது செய்த தோழர்களை தங்களது வாகனத்தில் அழைத்து வந்து காவல் துறையினர் போராட்டக்களத்தில் விட்ட பொழுது ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்தது.
சட்டத்திற்கு முரணான கட்டாய தடுப்பூசி தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் மக்கள் திரள் போராட்டங்கள் வலுப்படும் என்று உறுதி ஏற்பட்டது.


செய்தி உதவி:
திரு. தமிழ் வேள்.

Leave a Reply