Home>>இந்தியா>>வெள்ள நிவாரண நிதி:தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசு!
திரு. தி.வேல்முருகன்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வெள்ள நிவாரண நிதி:தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசு!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால், விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற காவிரிப்படுகை மாவட்டங்களில், சம்பா அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து வீணாகின. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களும் பெரும் இழப்பை சந்தித்தன.

ஏற்கெனவே, அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் சாலையோரங்களில் மழையில் நனைந்தபடி குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக, நகை கடன், வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள், என்ன செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
முக்கியமாக, கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் மழை விவசாயிகளுக்கு பெருந்துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பொங்கல் விழா கொண்டாடும் இந்நேரத்தில், இந்த துயர நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது மேலும் வேதனையளிக்கிறது.

இந்த வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில், காவிரிப்படுகை மாவட்டங்களில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதே போன்று, ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினரும், தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தது. அப்போது, தமிழ்நாட்டிற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்க முன்வராத ஒன்றிய அரசு, வெள்ளம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியாக ரூ.3,063.21 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உயா்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது, டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு ரூ.1,133.35 கோடியும், ‘யாஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ.586.59 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கா்நாடகத்துக்கு ரூ.504.06 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.600.50 கோடி, உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ 187.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பெரும் வருவாயை ஈட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நிதி வழங்கும் மோடி அரசு, மற்ற மாநிலங்களின் மக்களைப் பற்றியும், பாதிப்பை பற்றியும் எந்த கவலையும் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையுடன் செயல்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

எனவே, விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வுத்தொழிலையும் மீட்கும் வகையில், தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண நிதியை பெறுவதற்கு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply