சென்னையில் கட்டாயத் தடுப்பூசித் திணிப்புக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான – தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமான – ஒற்றை ஆங்கில மருத்துவத் திணிப்புப் பாசிச முயற்சியில் இறங்கியுள்ளது!
கடந்த 29.11.2021 அன்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கபடவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த 01.12.2021 அன்று தில்லியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். இந்திய ஒன்றிய நலவாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை” என்று கூறியுள்ளார்.
கடந்த 23.06.2021 அன்று மேகாலயா உயர் நீதிமன்றம் Registrar General, High Court of Meghalaya v. State of Meghalaya வழக்கில் (PIL No. 6/2021) தீர்ப்பளித்து, தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல் எனக் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கும், செலுத்திக் கொள்ளாதவருக்கும் இடையில் பாகுபாடு காட்டும் அரசாணைகளை கவுகாத்தி உயர் நீதிமன்றம் (வழக்கு எண். PIL 13/2021, தீர்ப்பு நாள் – 19.07.2021) நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், இவற்றுக்கு நேர்மாறாக தமிழ்நாடு அரசு தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்தும் பல்வேறு தனித்தனி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகின்றது. இது ஆங்கில அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா – ஆயுர்வேதா – யுனானி எனப் பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டு வரும் மக்களை ஒற்றை அலோபதி மருத்துவத்தின்கீழ் கொண்டு செல்லும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
எனவே, தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தி பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு நம் எதிர்ப்பினை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சனநாயக வழியில் ஒன்றுகூடித் தெரிவிக்கவும், அரசின் தடுப்பூசி விழிப்புணர்வால் உந்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளோருக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரியும் வரும் 11.01.2022 – செவ்வாய் மாலை 4 மணியளவில் – சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பல்வேறு தோழமை அமைப்பினர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது!
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
மருத்துவர் கோ. பிரேமா M.D(Hom), (மக்கள் அறிவியல் இயக்கம்), மருத்துவர் வீ. புகழேந்தி M.B.B.S., (மக்கள் அறிவியல் இயக்கம்), மருத்துவர் பி. ஹரி சங்கர் M.B.B.S., (மக்கள் அறிவியல் இயக்கம்), மூத்த ஊடகவியலாளர் திரு. சாவித்திரி கண்ணன், அக்குஹீலர் அ. உமர்பாரூக் M.Acu., M.Sc (Psy)., (Ph.D(Psy))., அக்கு ஹீலர் ம. அருள்ராஜ் B.Sc., (Acu), மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் திருமதி. மாதவி கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி ஒருங்கிணைக்கிறார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறுகிறார்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்க மக்கள் நலவாழ்விலும், சனநாயகத்திலும் அக்கறையுள்ள அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
—
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்