சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்ததோடு, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த நிகழ்வுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முக்கிய பங்காற்றி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02.05.2016 -ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில், அரசமைப்புச் சாசனத்தின் படி, மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலச் சட்டப்பேரவைக்கு உண்டு என்றும் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது எனவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், மாணவர்கள் மீது நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்து விட்டு, அதனை நியாயப்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் நியாயமற்ற அணுகுமுறையால், அனிதா தொடங்கி இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணித்துள்ளனர். ஆனாலும், இதனை பொருட்படுத்தாத ஒன்றிய அரசு, மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில், நீட் தேர்விற்கு வக்காலத்து வாங்கி வருகிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவோ, தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவோ ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சரான அமித்சா, தமிழ்நாட்டு எம்பிக்களை சந்திக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
இச்சூழலில், நீட்’ தேர்வு தொடர்பாக, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறகிறது.
இக்கூட்டத்தின் வாயிலாக, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.