சென்னையில் தமிழ் கல்வெட்டுகள் அலுவலகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தல்!
தமிழ் கல்வெட்டுகளின் நகல்களையும் (மைப்படிகள்), அதோடு தொடர்புடைய தமிழ் ஆவணங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்க தற்போது சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென்பகுதி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் “தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்” என மாற்றப்படுவதாக புதுல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை (ASI) தலைமை அலுவலகத்தின் துணை இயக்குநர் வெளியிட்ட உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.
தமிழ் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் மைசூர் மத்திய தொல்லியல்துறை மண்டல அலுவலகத்தில் பராமரிப்பின்றியும், படியெடுத்து பாதுகாக்கப்படாமலும் இருந்ததால், தமிழக ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதனை பாதுகாத்து டிஜிட்டல்மயமாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ் கல்வெட்டுக்களை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டுமென தகுந்த உத்தரவை ஏற்கனவே பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என மாற்றப்படுவதால் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கு எளிதில் சான்றுகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும். தனியாக தமிழ் அலுவலகம் உருவாக்கியுள்ளதால் தனியாக கல்வெட்டு பணிகள் புதிதாக உருவாக்கப்படும். தமிழர் தங்கள் சான்றுகள் மீது உண்மையான பற்றுதல் கொண்டு செயல்படுவார்கள். தமிழர் கையில் தமிழ் சான்றுகள் இருப்பதால் உண்மை வரலாறுகள் உறுதிப்படுத்த வழிவகுக்கும். அனைத்தையும் நல்ல நிலையில் செயல்படுத்த முடியும். மேலும், தமிழக ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் மைசூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையும் மாற்றப்பட்டுள்ளது.
எனவே, மைசூர் மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திலிருந்து தமிழ்கல்வெட்டுகள், படிகள் மற்றும் அதன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், இப்பிரிவு அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்கள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து, தமிழ் கல்வெட்டுக்களின் படிகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.