தமிழ்நாட்டில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக, நெல் கொள்முதல் செய்யப்படுவது இனிவரும் காலங்களில் தொடருமா என விவசாயிகள் மத்தியில் பெருங்கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக, நெல் சாகுபடியை மட்டுமே பிரதானமாக நம்பியிக்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உணவுக் கழகம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய உணவு கழகத்தின் முகவராக, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு இங்குள்ள நெல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, விற்பனை செய்ய தனியார் வியாபாரிகளையோ, இடைத்தரகர்களையோ, முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய அவலநிலை இல்லாமல் இருந்து வருகிறது. அவர்களிடம் தங்களது நெல்லை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையும் ஏற்படாமல் இருக்கிறது.
மத்திய அரசு இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்யுமா என்ற விடைதெரியா கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. ஆனால் இது திறக்கப்படாமல் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கூப்பாட்சிக்கோட்டை ,துலசேந்திரபுரம் , வேப்பங்குளம் , உள்ளிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வார்கள்.
தற்போது, இப்பகுதிகளில் நெல்அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்பகுதிகளை சேர்ந்த கிராம விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையம் முன் குவியலாக வைத்து விற்பனைக்கு காத்து நிற்கிறனர். ஆனால் பரவாக்கோட்டை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கலை எதிர்கொள்ள பெருந்தொற்று காலத்து இன்னலின் ஊடாக பயிர் செய்து கொண்டுவந்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பரவாக்கோட்டை நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
உண்மை நிலையைத் தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தமிழக அரசு தடை இன்றி கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கிட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தி கொள்முதலில் ஏற்பட்ட பாதிப்பு தொடராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மேற்கொள்ள முன் வர வேண்டும்.
“பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.”
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர். -மு. வரதராசன்
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.-சாலமன் பாப்பையா
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் -மு. கருணாநிதி
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
பரவாக்கோட்டை