Home>>கல்வி>>முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா?
சீமான்
கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் பணிசெய்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பி ரஹீமை முகக்கவசம் அணியாத ஒற்றைக் காரணத்திற்காக, கடுமையாகத் தாக்கி வதைத்திருப்பதும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அடக்குமுறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மக்களைக் காக்கும் காப்பரண்களாக இருக்க வேண்டிய காவல்துறையினர் இன்றைக்கு மக்களே கண்டு அஞ்சி ஒதுங்குமளவுக்கு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதும், அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி அடித்தட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதும் காவல்துறை எனும் கட்டமைப்பு எந்தளவுக்கு பாழ்பட்டு நிற்கிறது என்பதற்கான நிகழ்காலச் சான்றுகளாகும். ஆகவே, காவல்துறையை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியதும், காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் அதிகார அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கான சேவையை உறுதிசெய்ய வேண்டியதும் காவல்துறையைத் தன்வசம் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.

ஆகவே, தம்பி அப்துல் ரஹீம் மீது பொய்யாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய காவல்துறையினர் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தம்பி ரஹீமுக்கான மருத்துவச்சிகிச்சைக்குரிய செலவுகளை ஏற்று, அவருக்குரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply