Home>>அரசியல்>>அதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தம்: நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்!
திரு. தி.வேல்முருகன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

அதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தம்: நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்!

அகில இந்திய பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணியல் எடுத்துக்கொள்வதற்கு மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றிய பணிக்கு எடுத்துக்கொள்வதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை ரத்து செய்யவும் மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தற்போது 1954 ஐஏஎஸ் விதிகளில் 6வது விதியின்கீழ் மாநில அரசுகளில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, ஒன்றிய பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவர் பணிபுரியும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்திடலாமா என ஒன்றிய அரசு கேட்டுள்ளது.

அதாவது, மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசே பணி அமர்த்தும் என்றும் அதிகாரிகளை பணியமர்த்துவதில் இனி மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது தான் அக்கடிதத்தின் சராம்சமாகும்.

2016ஆம் ஆண்டு மட்டும் 676 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 4,000 மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளாக நாடு முழுவதும் பணியாற்றி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இப்புகாரை உறுதிப்படுத்தும் விதமாக, மோடி அரசின் கடிதம் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கடிதத்தை தமிழ்நாட்டோடு மட்டும் நாம் பொருத்தி பார்த்தோமானால், தமிழ்நாட்டில் தமிழே தெரியாத பிற மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு துறைகளின் செயலாளராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இருப்பார்கள்.

ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசின் கொத்தடிமைகளாக மாற்றப்படுவதோடு, மாநில அரசு மற்றும் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே புதிய விதிகளை நிறைவேற்றுவார்கள்.

முக்கியமாக, கிந்தி பேசாத, பாசக அரசு இல்லாத மாநிலங்களில், ஆட்சியாளர்களையும், மக்களையும் அடக்கி ஒடுக்கி, மாநிலங்களின் உரிமைகளையும், மக்களின் நலன்களையும் பறிக்கவே, மோடியும், அமித்சா வகையாறக்களும் கனவு காண்கின்றனர்.

சான்றாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தனக்கு தெரியாது என்று அப்போதையை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறினார். பின்னர், அமித்ஷாவின் உத்தரவின்படி தான், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

கடந்த 2 முறை ஆட்சியில் இருக்கும் மோடியும், அவர்களது கூட்டாளிகளும் வரும் 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும், ஆட்சியை பிடித்து விடலாம் என துடித்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு சாதகமாக பணியாற்ற, அரசுப்பணிகள் முதல் ஆளுநர் பதவி வரை, தமக்கு நெருக்கமானவார்கள் பணியமர்த்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் தங்களின் பக்கம் வைத்துக்கொள்ளவே, அதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தத்தை கொண்டு வர மோடி அரசு முடிவு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, மாநில அரசுகளின் அதிகாரித்தை பறிப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ள அதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இதற்காக, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அச்சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயலுமானால், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply