Home>>அரசியல்>>நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி!
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி!

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.


நீட் விலக்கு சட்டத் தீர்மானத்தை மீண்டும் இரண்டாவது முறையாக சட்டமன்ற மீளாய்வுக்காக அவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். இரவி திரும்ப அனுப்பியிருக்கிறார்.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்ட உறுப்பு 200இன் கீழ் நீட் விலக்கு சட்ட முன்வடிவை சட்டமன்றத்தின் மீளாய்வுக்கு சில வினாக்களோடும் கருத்துகளோடும் திரும்ப அனுப்பியிருந்தார். அதற்கே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் அவர் எடுத்துக் கொண்டது பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பைக் கிளப்பியது.

ஆளுநர் அமைச்சரவையின் முடிவின் மீதோ, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவின் மீதோ இவ்வளவு காலத்திற்குள் கையெழுத்திட வேண்டும் என்ற கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையை, மிகத் தவறான முறையில் ஆளுநர் ஆர்.என். இரவி தனது தமிழின ஒதுக்கல் நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆயினும், இதன் மீதும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து அதன் முடிவின்படி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 200, இவ்வாறு மசோதாக்களைத் திரும்ப அனுப்புவது குறித்துத் தெளிவாக வரையறுக்கிறது:

”ஒரு சட்ட முன்வடிவு, ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப் பட்டதன்மேல் அல்லது சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அந்த மாநிலச் சட்டமன்ற ஈரவைகளினாலும் நிறைவேற்றப்பட்டதன்மேல், அது ஆளுநரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்; ஆளுநர், தாம் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ அச்சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவரின் ஓர்வுக்காக நிறுத்தி வைப்பதாகவோ விளம்புவார்.

வரம்புரையாக: ஆளுநர், தம்மிடம் ஏற்பிசைவுக்காக ஒரு சட்டமுன்வடிவு முன்னிடப்பட்ட பின்பு, இயன்றளவு விரைவில், அது ஒரு பணச் சட்டமுன்வடிவாக இல்லாதிருப்பின், அச்சட்ட முன்வடிவையோ அதில் குறித்துரைக்கப்பட்ட வகையங்கள் எவற்றையுமோ அந்த அவை அல்லது அவைகள் மறுஆய்வு செய்யுமாறும், குறிப்பாக, தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்பத்தகுந்ததா என்பதைப் பற்றிக் கருதுமாறும் கேட்டுக் கொள்கின்ற செய்தியுரையுடன் அச்சட்ட முன்வடிவை அந்த அவைக்கு அல்லது அவைகளுக்குத் திருப்பியனுப்பலாம்; அவ்வாறு ஒரு சட்ட முன்வடிவு திருப்பியனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவை அல்லது அவைகள் அதன்படியே அச்சட்ட முன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்; மேலும் அந்த அவையினால் அல்லது அவைகளினால் அச்சட்டமுன்வடிவு திருத்தத்துடனோ திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவளிக்க மறுத்தல் ஆகாது;

மேலும் வரம்புரையாக: சட்டமுன்வடிவு எதுவும் சட்டமாகிவிட்டால், உயர் நீதிமன்றத்திற்கு அமைந்திருக்க வேண்டும் என்று இந்த அரசமைப்பில் வரைந்தமைக்கப்பட்ட தகுநிலைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்த நீதிமன்றத்தின் அதிகாரங்களை அது திறக்குறைவு செய்யும் என ஆளுநர் கருதுவாராயின், அச்சட்டமுன்முடிவு எதற்கும் ஆளுநர் ஏற்பிசைவு அளித்தல் ஆகாது; அதனைக் குடியரசுத் தலைவரின் ஓர்வுக்காக நிறத்தி வைத்தல் வேண்டும்”.

சட்டமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு ஒப்புகைக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் சட்ட முன்வடிவில் கையெழுத்திடுவதை ஆளுநர் ஒருமுறை ஒத்தி வைக்கலாம். அதன்மீது வினாக்களையும், தன்னுடைய கருத்துகளையும் இணைத்து சட்டமன்றத்தின் மீளாய்வுக்கு அனுப்பலாம். அவ்வாறான மீளாய்வுக்குப் பிறகு ஆளுநர் குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்றோ, ஏற்காமல் பழைய தீர்மானத்தை அப்படியேவோ மீண்டும் அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழியில்லை! ஒருவேளை, இது ஒத்திசைவு பட்டியலைச் சேர்ந்த செய்தியாக இருந்தால், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்தே ஆக வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்ட உறுப்பு 200 கூறுகிற ஆளுநரின் பணி!

நீட் விலக்கு மசோதா குறித்து, ஆளுநர் ஆர்.என். இரவி தெரிவித்த எதிர்க்கருத்துகளுக்கு தெளிவான விளக்கமளித்து, சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. கல்வி என்பது, தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்குமான ஒத்திசைவு அதிகாரப் பட்டியலில் வருவதால் ஆளுநர் கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தே ஆக வேண்டும்.

இதிலும், ஆளுநர்களின் நன்னடத்தை, சட்டத்தின் ஆட்சியின் மீது இருக்கிற மதிப்பு குறித்து நம்பிக்கை வைத்ததால் அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் காலவரம்பு எதையும் வைக்கவில்லை.

திருப்பி மீண்டும் அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீதும் முடிவெடுக்காமல், ஆர்.என். இரவி காலம் கடத்தினார். அரசமைப்புச் சட்டம் ஆளுநர் மீது வைத்திருக்கிற நன்னம்பிக்கைக்கு எதிராகவே அவர் நடந்து கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்து உடனடியாக நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார்.

அதன்பிறகும், காலங்கடத்தியதால் ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த அழுத்தங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 168இன்படி நீட் விலக்கு சட்ட முன்வடிவை சட்டமன்றத்தின் மீளாய்வுக்காக மீண்டும் அனுப்பி வைத்திருப்பதாக பி.பி.சி. தமிழ் ஊடகத்திற்கு 04.04.2022 அன்று அளித்த நேர்காணலில் ஆர்.என். இரவி தெரிவித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 168இன்படி, ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த உறுப்பு ஆவார். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான், இப்போது மீண்டும் சட்டமன்ற மீளாய்வுக்காகத் திருப்பி அனுப்பியிருப்பதாக ஆளுநர் ஆர்.என். இரவி கூறுகிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 168 கூறுவதாவது:
”(1). ஒவ்வொரு மாநிலத்திற்குமென சட்டமன்றம் ஒன்று இருக்கும்; அது ஆளுநரையும் –
(அ). பீகார், மகாராட்டிரம், கர்நாடகம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அவைகளையும்,
(ஆ). பிற மாநிலங்களில் ஓர் அவையினையும் கொண்டதாக இருக்கும்.
(2). ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்குமிடத்து, ஒன்று சட்டமன்ற மேலவை என்றும், மற்றொன்று சட்டமன்றப் பேரவை என்றும் வழங்கப்பெறும்; ஓரவை மட்டுமே இருக்குமிடத்து, அது சட்டமன்றப் பேரவை என்று வழங்கப்பெறும்”.

இந்த உறுப்பு 168 கூறும், தனது அதிகார வரம்பை தெளிவாகத் தெரிந்த பின்புதான் வேண்டுமென்றே ஆர்.என். இரவி நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியுள்ளார்.

ஏனென்றால், “சட்டமன்றம் ஆளுநரையும் கொண்டது” என்று கூறப்பட்டிருந்தாலும், ஆளுநர் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லாதவர் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் யாரும் இருக்க முடியாது. இது சட்டத்தின் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் செய்கிற அடாவடியாகும்.

ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 158(1) – ”ஆளுநர், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலுமோ முதலாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாநிலம் ஒன்றன் சட்டமன்ற அவை ஒன்றிலோ உறுப்பினராக இருத்தல் ஆகாது” என்று உறுதியாகக் கூறுகிறது.

அரசமைப்பு உறுப்பு 168 குறித்து விவாதிக்கும் பீகார் மாநில அரசு – எதிர் – மகாராஜராஜா சர் காமேசுவர் சிங் வழக்கில் (1975 AIR 1083), உச்ச நீதிமன்றம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 173ம் கூட, “சட்டமன்றம்” என்ற வரையறுப்பில் ஆளுநர் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்ற உண்மையையும் இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

இதன் பிறகு, 1979 மே 1ஆம் நாள் உரைக்கப்பட்ட தீர்ப்பிலும் (இந்திய ஒன்றிய அரசு – எதிர் – வல்லூரி பசவையா சௌத்திரி – 1979 SCR (3), 802) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து மிக விரிவாக ஆய்வு செய்கிறது.

அன்றைய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பி.என். பகவதி, வி.ஆர். கிருஷ்ணய்யர், துர்சாபுல்கர் மற்றும் ஏ.பி. சென் ஆகியோர் கொண்ட அரசமைப்பு ஆயத்தின் இத்தீர்ப்பு ஆளுநர் குறித்த எல்லா விவாதங்களிலும் எடுத்துக் காட்டப்படும் முக்கியமான தீர்ப்பாகும்.

”ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் அரசமைப்புத் தலைவராவார். ஆயினும், அவர் அம்மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார். சட்டமன்றத்தின் ஒரு உறுப்பு என்ற வகையில், அவர் ஒவ்வொரு ஆண்டின் தொடக்க அமர்வில் உரையாற்ற உரிமை படைத்தவர் ஆவார். ஆயினும், அந்த உரை அவரது சொந்த உரை அல்ல. அமைச்சரவையின் கொள்கை முடிவுகளின் அறிவிப்பாகும். அதே உரிமையில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 175 மற்றும் 176இன்படி சட்டமன்றக் கூட்டத் தொடரை அவர் நிறுத்தி வைக்கலாம். சட்டமன்றத்தை அதற்கான ஆயுட்கால முடிவிலோ, அல்லது அதற்கான சூழல் ஏற்பட்டாலோ கலைத்து அறிவிக்கலாம். அரசமைப்புச் சட்ட உறுப்பு 174இன்படி சட்டமன்றத்தைக் கூட்டுமாறு அவர் அறிவுறுத்தலாம்.
ஆனால், இவை அனைத்தும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 163இன்படி நடக்க வேண்டும்.

உறுப்பு 163 என்ன கூறுகிறது? ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்பதுதான் 163இன் சாரம்!

உறுப்பு 163 குறித்து, வெவ்வேறு பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயங்கள் பலமுறை தெளிவுபடுத்திவிட்டன.

அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தின் அரசமைப்புத் தலைவராக ஆளுநர் இருந்தாலும், அவருக்கென்று எந்த விருப்பு அதிகாரமும் கிடையாது. அவர் முற்றிலும் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஒரேயொரு வாய்ப்பில்தான், அவருக்கான விருப்பு அதிகாரம் வரம்புக்கு உட்பட்டு செயல்பட முடியும். பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ள ஒருவரை அமைச்சரவை அமைக்குமாறு அழைக்கும் அதிகாரமே அது! அதுவும்கூட, சட்டமன்றத்தில் பெரும்பான்மை மெய்ப்பிக்கப்படுவதற்கு உட்பட்டது. அந்த இடத்திலும் தன் விருப்பம் போல், ஆளுநர் செயல்பட முடியாது.

இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியில், ஆளுநர் மீண்டும் மீண்டும் தவறான முறையில் இந்திய ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிகள் பலமறை கலைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து முக்கியமானதொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
”எஸ்.ஆர். பொம்மை – எதிர் – இந்திய ஒன்றிய அரசு” என்ற புகழ்பெற்ற அந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட முழு அரசமைப்பு ஆயம், ஆளுநரின் அதிகாரம் எவ்வாறு மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது. சட்டத்தின் ஆட்சியை ஆளுநர்கள் மதித்து நடக்க வேண்டும் – தங்கள் அதிகார வரம்பைப் புரிந்து நடக்க வேண்டும் என்பவை குறித்து அத்தீர்ப்பு விரிவாகப் பேசுகிறது.

அரசியல் ஆர்வமுள்ள – அதிகாரப் பணியிலுள்ள யாரும் இத்தீர்ப்பு குறித்து தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. இதுவுமன்றி ஆளுநருக்கு சட்ட ஆலோசனை வழங்க ஆயிரம் ஏற்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். இரவி, தனது அதிகார வரம்பு தெரியாமல் நடந்து கொள்வதாகக் கருத இடமில்லை!
”திருப்பி அனுப்பி வைப்போம். மீண்டும் ஒரு சுற்று வருவதற்கு காலம் பிடிக்கும். அல்லது தமிழ்நாடு அரசு வழக்கிற்குப் போகட்டும். அப்போதும் காலம் கடக்கும்” என்ற உள்நோக்கத்தில் இரவி செயல்பட்டிருக்கலாம்.
ஆளுநர் என்பவருக்கு அடிப்படையில், மூன்று பணிகள் தான் உள்ளன. 1. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கிக் கையெழுத்திடுவது, 2. அரசமைப்பு உறுப்பு 200இன்படி பண மசோதா தவிர பிறவற்றிற்கு ஒருமுறை ஒப்புதல் வழங்குவதை நிறுத்திவைத்து, தாம் கருதும் திருத்தத்தையும், தான் பெற விரும்பும் விளக்கத்தையும் தெரிவித்து சட்டமன்றத்தின் மீளாய்வுக்குத் திரும்ப அனுப்பலாம், 3. அமைச்சரவையின் அறிவுரைப்படி ஒரு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பது.

இவற்றைத் தவிர வேறு எந்த அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது என்று அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.
இதைத்தான் எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பும் அடித்துக் கூறுகிறது.

ஆனாலும், இந்திய அரசும், அதன் முகவரான ஆளுநரும் மீண்டும் மீண்டும் அரசமைப்புச் சட்ட மீறலில் இறங்கியே வருகிறார்கள்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 155இன்படி, குடியரசுத் தலைவர் ஆளுநரை அமர்த்துகிறார். ஆயினும் இது குடியரசுத் தலைவரின் விருப்பு அதிகாரம் கிடையாது. இந்தியத் தலைமையமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரைக்குக் குடியரசுத் தலைவர் முற்றிலும் கட்டுப்பட்டவர்.

அந்த வகையில், ஆளுநர் என்பவர் உண்மையில் இந்திய ஒன்றிய அமைச்சரவையினால் குடியரசுத் தலைவரின் கையொப்பம் பெற்று அமர்த்தப்படுகிறார். அதேபோல், ஆளுநர் குடியரசுத் தலைவரின் மனநிறைவுக் காலம் வரை (during the pleasure of the President) பதவியில் இருக்கலாம் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 156 வரையறுக்கிறது. இங்கும் குடியரசுத் தலைவரின் மனநிறைவு என்பது ஒன்றிய அமைச்சரவைின் மனநிறைவைத் தான் குறிக்கும்.

இந்த நிலை இருப்பதால். ஆளுநர்கள் எப்போதுமே தன்னை அமர்த்திய ஒன்றிய அமைச்சரவைக்கு அதிலும் குறிப்பாக இந்திய ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதையே பொதுப்போக்காகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய ஆளும்கட்சிக்குப் பணியாற்றுவதற்காக எந்த சட்டமீறலிலும் இறங்குவதற்கு ஆளுநர்கள் தயங்குவதில்லை. அண்மையில், மிக அப்பட்டமான குதிரைபேரம் நடத்தி அருணாச்சலப்பிரதேசத்தில் பா.ச.க.வுக்கு செயற்கையான பெரும்பான்மையை வரவழைத்து, அங்கிருந்த காங்கிரசு ஆட்சியை ஆளுநர் கவிழ்த்தபோது, அதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

”நபாம் ரபியா – எதிர் – அருணாச்சலப் பிரதேச அவை துணைத் தலைவர்” என்ற இந்த வழக்கில், 2016 சூலை 13 அன்று தீர்ப்புரைத்த உச்ச நீதிமன்றம் தலையில் அடித்தாற்போல, ஆளுநரின் அதிகார வரம்பை இடித்துரைத்து கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் நிறுவுவதாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது.
தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி லோக்கூர், பின்னாக்கி சந்திரபோஸ் மற்றும் என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அரசமைப்பு ஆயம் ஆளுநரின் அதிகாரம் குறித்து எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் விரிவாகப் பேசுகிறது.

அரசமைப்பு உறுப்பு 155இன்படி, இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் சட்டமன்றத்தை விட மேலதிகாரம் படைத்தவர் அல்லர் எனச் சுட்டிக்காட்டும் அத்தீர்ப்பு, சட்டமன்றம் கூடாத காலங்களில் ஆளுநர் பெயரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டங்கள் கூட மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் பிறப்பிக்கப்படுகிறதே தவிர, ஆளுநரின் விருப்பப்படி அறிவிக்கப்படுவதல்ல என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

உறுப்பு 168இன்படி, மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் கொண்டது எனக் கூறப்பட்டாலும், ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் அமர்த்தப்படுகிறவர் – எந்த அவையிலும் உறுப்பினராக இருக்க முடியாதவர் என்ற வரம்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என இத்தீர்ப்பு அறுதியிட்டுக் கூறுகிறது.

எவ்வளவு இருந்தாலும், ஆர்.என். இரவி மட்டுமல்ல, இப்போது பல்வேறு மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் மாநில ஆட்சி இயல்பாக நடைபெறுவதற்கு பல குறுக்கீடுகள் செய்து வருவதைத் தொடர்ந்து பார்க்கிறோம்.

மோடி ஆட்சியில் மட்டுமின்றி, இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிக்கு எதிராக ஆளுநர்கள் பயன்டுத்தப்பட்டதே வரலாறு.

காநதியடிகள் தலைமையில் காங்கிரசுக் கட்சி, இந்திய விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, சட்டமன்றங்களை அமைத்து அதற்கு தேர்தலையும் வெள்ளை அரசாங்கம் அறிவித்தது. அப்போது, சவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைவரும் காந்தியின் அறிவுரைப்படி “இது இரட்டையாட்சி! உண்மை அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. எனவே இத்தேர்தல்களில் பங்குபெற முடியாது. ஆளுநர் பதவி ஒழிக்கப்பட்டால்தான், மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறிவந்தார்கள். ஆனால், வெள்ளைக்காரர்களிடமிருந்து ஆட்சி அதிகாரம் தங்களது கைகளுக்கு வந்தவுடன், இவை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டார்கள்.

இராசேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிர்ணய அவை, அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழுவின் வரைவு நிலையிலிருந்தே ஆளுநர் பதவி இருக்கும் என்பதை அறிவித்துவிட்டார்கள்.
அரசமைப்புச் சட்ட வரைவின்போது, பல்வேறு உறுப்பினர்கள் நடைமுறையில் ஆளுநருக்கு மேலதிகாரம் வந்துவிடும் என்று சுட்டிக்காட்டிய போது, காங்கிரசுத் தலைவர்கள் அவ்வாறெல்லாம் நிகழாது என வாக்குறுதி வழங்கினார்கள்.

ஆயினும் நேரு காலத்திலிருந்தே ஆளுநர்கள் இந்திய அரசின் முகவராகவே மாநிலங்களின் மீது பயன்படுத்தப்பட்டார்கள்.

இந்திரா காந்தி ஆட்சிக்குப் பிறகு, இந்தப் போக்கு தீவிரம்பெற்றது. இப்போது மோடி ஆட்சியில் இக்கொடுமை தலைவிரி கோலமாக நடந்து கொண்டிருக்கிறது. பெயரளவில் உள்ள மிகமிக வரம்புக்குட்பட்ட கூட்டாட்சி முறைமை கூட ஆளுநரை வைத்து, ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகிறது. நடைமுறையில் ஒற்றையாட்சி நடைபெறுவதை உறுதி செய்கிறது.

நீட் விலக்கு மசோதாவில் மட்டுமின்றி, பல்வேறு நிலைகளிலும் ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். மண்டபமாக பயன்படுத்தி வரும் ஆர்.என். இரவி நீக்கப்பட வேண்டியவர் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை!
ஆனால், அதைவிட ஆளுநர் பதவி தொடர்வது அவர் யார் ஆளுநராக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் இடையூறானதாகும்!

தேசிய இன மாநிலங்கள் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன – காலனியாக நசுக்கப்படுகின்றன என்பதற்கான வெளிப்படையான சான்றுதான் ஆளுநர் பதவி! தி.மு.க. வசனம் பேசுவதுபோல் ஆளுநர் என்பது வெறும் ஆட்டுக்குத் தாடி அல்ல – தேசிய இனங்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பாறாங்கல் ஆகும்!
சட்டமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கையொப்பமிட வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கோருவது ஒன்றுக்கும் ஆகாத முயற்சியாகும்.

தில்லியில் தங்களது கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய மு.க. ஸ்டாலின், இந்திய அளவில் மாற்று அரசியல் அணிவகுப்பை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கம் போல அந்நிகழ்ச்சியைப் பேசியதெல்லாம் வெறும் வாண வேடிக்கை. உண்மையில்., தேசிய இன மாநிலங்களின் உரிமையில் அக்கறை இருக்குமானால், ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, பல்வேறு மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைப்பு முயற்சியில் மு.க. ஸ்டாலின் இறங்கியிருக்க வேண்டும்.

அரசியல் விழிப்புணர்வுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஆர்.என். இரவியை ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோடு நிற்காமல் “ஆளுநர் பதவியே கூடாது! அது தேசிய இனங்களை ஆதிக்கம் செய்யும் கருவியாகும்!” என்ற அரசியல் முழக்கத்தை முன்வைக்க வேண்டும்!

இந்திய அரசே, ஆளுநர் ஆர்.என். இரவியை திரும்பப் பெறு!
ஆளுநர் பதவியை ஒழித்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து!


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply