ஒருமுறை குன்னியூர் சாம்பசிவ ஐயருக்கு சொந்தமான பண்ணை கிராமமான ஆலாத்தூரில் தமிழ் வருடபிறப்பு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் மூன்று நாளே உள்ள நிலையில் 17 விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ஆண்டு ஊதியமான 7 கல நெல்லை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் இந்த குடும்பங்கள் பசி பட்டினியோடு வாடுவதாக அந்த ஊர் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கோட்டூர் பகுதி பொருப்பாளருமான களப்பால் அ.குப்புசாமி அவர்களுக்கு தகவல் அனுப்பினர்.
இதனை அடுத்து தோழர்கள் களப்பால் குப்புசாமி, வாலிஓடை ராஜகோபாலன், கோட்டூர் ராஜூ உள்ளிட்டோர் ஆலாத்தூருக்கு சென்று குன்னியூர் பண்ணையின் மேலாளரை சந்தித்து உரிய கூலியை தொழிலாளர்களுக்கு வழங்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் கணக்குபார்க்கனும் அது இது என்று தாமதபடுத்தினர்.
பிறகு கணக்கை பிறகு பார்க்கலாம் வருடபிறப்புக்கு ஆளுக்கு ஆறுமரக்கால் நெல் கொடுங்கள் என் என்று கேட்டார்கள். மேலாளரோ தாமாக எதுவும் செய்ய முடியாது எனவும் பண்ணை முதலாளியை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு மன்னார்குடி சென்று முதலாளியை சந்தித்துவிட்டு வந்து பண்ணையார் ‘கூலி கொடுக்க கூடாது’ என்று சொல்லிவிட்டார் என்று கூறி கூலி கேட்ட தொழிலாளர்களை விரட்டினார்
ஒருவருடம் ஓடாய் உழைத்துவிட்டு வருட முடிவில் கூலி கேட்டால் கொடுக்க மறுப்பதால் களப்பால் குப்புசாமி கடுமையாக கோபம் கொண்டு களப்பால் சிங்காரு, களப்பால் கட்டாரு, கோட்டூர் ராஜூ, வாலிஓடை ராஜகோபாலன் போன்றவர்களோடு பைங்காட்டூர் விவசாயிகளையும் அழைத்துகொண்டு ஆலாத்தூர் கிராமத்திற்குள் அத்துமீறி புகுந்து பண்ணையில் உள்ள நெல்சேரை ( நெல் பட்டரை) அறுத்து உரிய கூலியை பண்ணை முதலாளி அனுமதி இல்லாமலே அளந்து கட்டி மாட்டுவண்டியில் ஏற்றி எடையூர் சங்கேந்திக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த சம்பவம் பல நூறுஏக்கர் முதலாளியான குன்னியூர் சாம்பசிவ அய்யருக்கு இது கவுரவ குறைச்சலாக பட்டதால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தில் உள்ள தொழிளார்களை நங்கபள்ளத்தில் இருந்து அடியாட்கள் வைத்து விவசாய தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவினார். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பண்ணையாரின் எடுபிடி அல்லக்கைகளான கோவிந்தசாமி மற்றும் காமாட்சி என்பவனும் குலமாணிக்கத்திலிருந்து திருக்களர் வழியாக கூட்டு வண்டியில் அன்றைய காலகட்ட ஆடம்பரமாக வரும்போது களப்பால் குப்புசாமி மற்றும் அந்த பகுதியில் உள்ள சங்கத்தினர் இவர்களை அடித்து உதைத்து வேட்டியை உருவி கோவணத்தோடு ஓட விட்டனர். வண்டியின் நுகத்தடி இருமுனை பூட்டாங்கயிரும் குப்புவின் கைகளில் சாட்டயாக மாறியது. பண்ணியையாரின் அடியாட்களை துண்ட காணும் துணிய காணும் என ஓட விட்டனர்.
இதே போல ஆலாத்தூரில் 1948 ஆண்டில் குன்னியூர் சாம்பசிவ அய்யர் ராமநாதபுரம் பகுதிகளில் இருந்தும் அணைக்காட்டில் இருந்தும் அடியாட்களை வரவழைத்து தங்க வைத்து விவசாய தொழிலாளர் மீது வன்முறை ஏவினார். அடியாட்களை கண்டு பின் வாங்காமல் விவசாய தொழிலாளர்கள் திருப்பி தாக்கினர். இவ்வாறாக பண்ணையாரின் அடியாட்களுக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இடையே நடந்ந மோதலில் பண்ணையாரின் அடியாட்கள் இரண்டு பேர் கொல்லபட்டனர்.
இந்த ஆலாத்தூர் கொலை வழக்கு தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த களப்பால் குப்புசாமி முதல் குற்றவாளியாக ஆக்கபட்டு கைது செய்யப்பட்டார். இவரோடு ஆலாத்தூர் குஞ்சி, கதிர்வேல், பி.ராமையன், நந்திமாங்குடி சாமியப்பப்பன், ஆண்டாங்கரை வி.பொன்னுசாமி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்க விசாரித்த தஞ்சை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் தோழர் களப்பால் குப்புசாமிக்கு தூக்குதண்டனை விதித்ததோடு திருச்சி மத்திய சிறையில் “கண்டம்” எனப்படும் தனிமை கொட்டடியில் சங்கிலியால் கட்டி வைத்து சித்திரவதை செய்தனர்.
களப்பால் குப்புவுக்கு விதிக்கபட்ட தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரியும் விடுதலை செய்யக்கோரியும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் போராட்டம் வெடித்தது, கோட்டூர், களப்பால், நாணலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் காவல் துறையையும் பண்ணையார்களின் அடியாட்களை திருப்பி தாக்கினர்.. மக்கள் நெருக்கடியால் ஒரு வேளை குப்பு விடுதலை செய்யபட்டால் என்ன செய்வது அஞ்சிய பண்ணையார்கள் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி மத்திய சிறையில் தோழர் குப்பு விஷமிட்டு கொல்லப்பட்டார்.
குப்புவை வெல்ல முடியவில்லை ஆனால் வாழ வேண்டிய வயதில் அவரை கொன்றார்கள். அதுவும் சுதந்திர இந்தியாவில் ஆயிரமாயிரம் கனவுகளோடு சுதந்திர காற்றை சுவாசிக்க கனவு கண்ட 35 வயது புரட்சியாளனின் கனவு நினைவாக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.
—
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.