Home>>இலக்கியம்>>கல்வியால் அழிந்த தமிழ்

நவீன உலகில் தமிழை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் நீங்கள் பேசினால், கைபேசி, கணினி தானாக அதனை எழுத்துகளாக மாற்றிவிடும். (VOICE TO TEXT). அதே போல், தமிழை உங்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை காரணம் கைபேசி, கணினி எழுத்துக்களை ஒலியாக மாற்றிவிடும். (TEXT TO VOICE).

உலகில் எந்த மொழியில் பேசினாலும் அதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துச் செவிகளுக்குக் கொடுக்கும் செவிப்பொறி (HEADPHONE) சாதனம் வந்துவிட்டது. அதே சாதனம் ஒலிமொழிபெயர்ப்பி (VOICE TRANSLATOR) நாம் தமிழ் மொழியில் பேசினால் அதனைக் கேட்பவர்கள் மொழியில் மாற்றிக் கொடுத்துவிடும்.
அப்படி என்றால் இங்கு அடிப்படை தேவை என்ன?

தமிழை படிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தமிழை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஆங்கிலம் ஹிந்தி போன்ற பிற மொழி எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆம், தமிழன் தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பிறர் தமிழில் பேசினால் அதனைக் கேட்டுப் புரிந்து கொள்ள தமிழனுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். புரிந்துகொள்ள, சிந்திக்க, உணர தனக்குள் மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் போதும். அதுவே இன்றைய தேவை.

இந்த நிலை என்பது, கல்விக்கூடங்கள் வருவதற்கு முன்பு தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து தமிழர்களின் நிலை. கல்வி அறிவு வராததற்கு முன் அதாவது கட்டமைக்கப்பட்ட கல்வி பள்ளிக்கூடம் போன்றவை வருவதற்கு முன்பு தமிழ் 100% உயிர்ப்போடு இருந்தது. ஆயிரம் வருடத்திற்கு முன்பு தமிழ் முழுமையாக இருந்தது. ஆனால் கல்வி அறிவு சதவீதம் பெருக பெருக வாழ்வியலில் தமிழ் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.
தமிழை முழுமையாகக் கற்றறிந்த தமிழ் சான்றோர்கள் சில சதவீதம் இருந்தால் போதும் மற்ற தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கும் நிலை இருந்தால் போதும். அந்தத் தொல்காப்பிய நிலை இன்று இருந்தால் போதும்.

இந்தக் கருத்துகளை ஒரு தமிழறிஞசரால், தமிழ் ஆசிரியரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை நான் நன்கு அறிவேன். இருந்தும் இந்தப் பார்வையை முன் வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழை வாழ வைக்கக் கல்வியில் மட்டும் தமிழ் இருந்து பயனில்லை. பண்பாட்டுத் தளத்தில் தமிழை உயிர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் பயிற்று மொழியாக இருப்பது எத்தனை அவசியமோ அதைப் போலப் பல மடங்கு அவசியமானது பயன்பாட்டு மொழியாக இருப்பது.

பயன்பாட்டு தளத்தில் தமிழை எப்படி மீண்டும் கொண்டு வருவது. தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தில் உட்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழை அலுவல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும்.
அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை நாமே நம்மைச் சுற்றி இருக்கும் தளங்களிலிருந்து தொடங்கலாம். பெரு நிறுவனங்கள் வாயிலாகத் தொடக்கத்தில் செய்ய இயலாது. ஆனால் சிறுசிறு தொழில் புரியும் அனைவரிடத்திலும் அந்தத் தொழிலைத் தமிழில் கையால வழிவகை செய்திடல் வேண்டும்.

உதாரணமாக ஒரு நகலகம் அதன் பெயர் பலகை முதல் அங்கு நடக்கும் அனைத்து செயல்பாட்டின் சொற்களையும் தமிழில் அச்சிட்டுச் சுவரில் ஒட்டி இருத்தல் வேண்டும் உதாரணமாகப் பிரிண்ட் – அச்சி, ஜெராக்ஸ் – நகல், டைப்பிங் – தட்டச்சு. அப்படி செய்தால் காலப்போக்கில் அவை நடைமுறைக்கு வரும்.
உங்களால் முடிந்தால் உங்கள் துறை சார்ந்த சொற்களைத் தமிழில், அச்சிட்டு உங்கள் கடைகளில் பட்டறையில் அலுவலகத்தில் வைக்கவும்.


தமிழன் திரு இங்கர்சால்,
நார்வே.

Leave a Reply