Home>>இந்தியா>>ஒலிமாசு எனும் பயங்கரம்! – பச்சைத் தமிழகம் கட்சி.
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

ஒலிமாசு எனும் பயங்கரம்! – பச்சைத் தமிழகம் கட்சி.

குமரி மாவட்டத்தில் ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
கிராமக் கோவில்கள் மற்றும் குடும்பக் கோவில்கள் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்திப் பாடல்கள் ஒலிபரப்புகிறார்கள். சில மசூதிகளிலும் மசூதிக்கு வெளியே பாடல்கள், பிரசங்கங்களை ஒலிபரப்புகிறார்கள். சக்திவாய்ந்த ஒலிப்பான்களை உயர்ந்த கோபுரங்களில், கம்பங்களில், மரங்களில் கட்டி, பெரும் சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்கின்றனர். இதனால் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன:

(1) வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
(2) பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியவில்லை.
(3) வீடுகளில், கடைகளில், தெருக்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியவில்லை.
(4) கைப்பேசியில்கூட யாரோடும் பேச இயலவில்லை.
(5) தொடர்ந்து ஒரு வாரம், பத்து நாட்கள் இப்படி ஒலி மாசுக்கு உள்ளாகும் போது, பெரும்பாலான மக்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
(6) ஏற்கனவே சிக்கலானதாக இருக்கும் சாலைப் போக்குவரத்து இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது. விபத்துக்கள் நடக்கின்றன.

ஒலிமாசைத் தடுத்து, மேற்படி பிரச்சினைகளை முறியடிக்க வேண்டிய காவல்துறையோ “எங்கோ நடக்கும் இழவு” என்று வாளாவிருக்கிறது.

ஒரு மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்ப வேண்டுமானால், ஆயிரம் நடைமுறைகளை வைத்துக்கொண்டு அல்லல்படுத்தும் காவல்துறை, இந்த இந்து, முசுலீம், கிறித்தவ பக்தகோடிகள் செய்யும் அலப்பரைகளைக் கண்டுகொள்வதே இல்லை.

முறைப்படி புகார் அளித்தாலும், புகார் கொடுத்தவரைக் காட்டிக்கொடுப்பதன்றி காவல்துறை வேறு எதுவும் செய்வதில்லை.

ஒலிமாசு பிரச்சினை இந்தியா முழுவதும் ஒரு பெரும் சிக்கலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மராட்டியத்தில் ராஜ் தாக்கரே இது ஓர் இசுலாமியர் பிரச்சினை என்பதுபோல சித்தரித்துக் கொண்டிருக்கிறார்.

குமரி மாவட்டத்தில் 1982-ஆம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஒலிபெருக்கி ஒலிமாசு பிரச்சினையிலிருந்துதான் தொடங்கியது.

அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழும் நெருக்கடிகள் மிகுந்த இந்தியா போன்ற நாட்டில் ஒலிமாசு பிரச்சினை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று.

முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வீடுகளுக்கு அருகே ஒலிமாசு நிகழாது, நிகழ விடமாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் துன்புறுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை, கண்டு கொள்வதுமில்லை.

ஒலிமாசு குறித்து தெளிவான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் காவல்துறை அமுல்படுத்துவதில்லை.

குமரி மாவட்டத்தில் இன்னொரு மதக்கலவரம் நடந்தால் அதுவும் ஒலிமாசு காரணத்தால்தான் நிகழும். இந்தியா முழுவதும் ஒலிமாசு சமூக அமைதியைக் கெடுக்கும்.

(1) சாதாரண நாட்களில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வளாகங்களுக்குள் மட்டுமே கேட்கும் வகையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பாடல்கள், பிரசங்கங்கள் ஒலிபரப்பப்பட வேண்டும்.
(2) திருவிழாக் காலங்களில் இரவும் பகலும் நேர வரையறை ஏதுமின்றி ஒலிமாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.
(3) கூம்புவடிவக் குழாய்க்கு பதிலாக அதைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்.
(3) வழிபாட்டுத் தலங்களில் ஓசை எழுப்புவதற்கும், விழாக்கள் கொண்டாடுவதற்கும் காவல்துறை அனுமதி பெறும் நடைமுறை கடினமாக அமல்படுத்தப்படவேண்டும்.


சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி.
மே 8, 2022.

Leave a Reply