திருச்சி மாநகரம் உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10203, 10405, 10519 ஆகிய மூன்று கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் மாலை வேளையில் பொதுமக்கள் கூடியிருந்த உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடையின் பாரில் மது அருந்திய நபர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சரண்ராஜ் (வயது 25) என்பவர் கொடூரமாக குத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலே இரவு 9 மணிக்கு மீண்டும் மூன்று டாஸ்மாக் கடைகளும் காவல்துறை உதவியுடன் திறக்கப்பட்டது வேதனையளிக்கிறது.
இதை தொடர்ந்து மூன்று மதுபான கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
—
செய்தி உதவி:
K.A. இப்ராகிம்.
செய்தி சேகரிப்பு:
தோழர் லெனின்பாபு காத்தவராயன்,
திருத்துறைப்பூண்டி.