Home>>அரசியல்>>நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசியல்இந்தியாகாவல்துறைசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

“ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு திரு. தொல். திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தல்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட “நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்” கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தது. சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதைஇன்னும் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. ‘துப்பாக்கிச் சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது’ என்றும் ‘கலைந்து ஓடிய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள்’ என்றும், ‘இதில் உயர் போலிஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார்கள்’ என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஃபிரண்ட்லைன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இல்லாமல் இவ்வாறு அந்த ஆங்கில இதழ் இச்செய்தியை வெளியிட வாய்ப்பில்லை. அத்தகைய
நம்பகத் தன்மைக்குரிய ஒரு ஏடு என்பதால், அச்செய்தியைப் புறம்தள்ள இயலவில்லை.

எனவே, ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளவாறு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீதும் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. தொலைதூரத்திலிருந்து குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை கொண்டு சுட்டிருக்கிறார்கள் என்றும்; கலைந்து ஓடியவர்கள் மீது பின்னால் இருந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும் உடல் கூராய்வு அறிக்கையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சுடலைக்கண்ணு என்ற போலீஸ் கான்ஸ்டபிள் தொலைதூரத்தில் இருந்து சுடும் எஸ். எல். ஆர் துப்பாக்கியைக் கொண்டு பல பேரை சுட்டுக் கொலை செய்திருப்பதை ஆணையம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதுபோலவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன் தனது பாதுகாவலர் ஸ்டாலின் என்பவரின் கைத்துப்பாக்கியை எடுத்து 25 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றிருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த உருப்படியான முயற்சியையும் செய்யவில்லை என்பதையும் ஆணையம் சுட்டிக் காட்டி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறது. சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொண்ட சேகர், கண்ணன் மற்றும் சந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்த எளிதாக அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ள ஆணையம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்கள் சிலருக்கும் இருந்த நெருக்கமான உறவே இத்தகைய படுகொலை நடப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது என ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. அந்த அம்சம் குறித்து விசாரணை ஆணையம் ஏதும் தெரிவித்திருக்கிறதா என்பதைத் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்.

தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும். அது தொடர்பான அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தாமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.


திரு. தொல். திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.


செய்தி உதவி:
திரு. நடவரசன் அமிர்தம்.

Leave a Reply