“தன்மானமுள்ளவராக இருந்தால் ஆளுநர் பதவி விலக வேண்டும்” என ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கைவிடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தினைத் தொடக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “தமிழக அரசு வகுக்கும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும். அரசின் கொள்கை முடிவுகளை எதிரொலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும்” என திட்டவட்டமாகவும், தெளிவாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற முறையில் தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு வேண்டாத குளறுபடிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது, தன்னிச்சையாக ஒன்றிய அமைச்சர் ஒருவரை அழைத்து பேச வைத்திருக்கிறார். இதன் காரணமாக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அவ்விழாவைப் புறக்கணிக்க நேர்ந்த சூழ்நிலையில் துணைவேந்தர்களுக்கு முதலமைச்சர் கூறியுள்ள அறிவுரை காலத்திற்கு ஏற்றதாகும்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை, அவைகள் பின்பற்றவேண்டிய கல்விக் கொள்கை ஆகியவைக் குறித்த அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கே உண்டு. ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநருக்கு இருப்பது சனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதாகும். இந்த அடிப்படையில்தான் தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதுடன் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார்.
ஏற்கெனவே பா.ச.க. ஆட்சி செய்யும் குசராத் மாநிலத்திலும், வேறு சில மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு மட்டும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது மக்கள் அளித்தத் தீர்ப்பை மதிக்காதப் போக்காகும்.
வேந்தராக தொடர்வதற்கு ஆளுநருக்கு இருந்த அதிகாரத்தை அகற்றி அதை முதலமைச்சருக்கு வழங்கும் சட்டத்தை ஒரே மனதாக சட்டமன்றம் நிறைவேற்றி தனக்கு அனுப்பியவுடனே ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைக் கிடப்பில் போடுவதும், மீறி செயல்படுவதும் சட்டமன்ற மாண்புகளை மதிக்காத செயலாகும். தன்மானமுள்ளவராக இருந்தால் ஆளுநர் தனது பொறுப்பிலிருந்து விலகவேண்டும்.
—
திரு. பழ. நெடுமாறன்,
தலைவர்,
தமிழர் தேசிய முன்னணி.
—
செய்தி உதவி:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.