Home>>அரசியல்>>மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்! – முதல்வர் ஸ்டாலின் உரை.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்! – முதல்வர் ஸ்டாலின் உரை.

செங்கல்பட்டு,செப்.19- மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கோலாகல எழுச்சியுடன் துவங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 வது தமிழ் மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக திங்களன்று (செப்.19) மாலை 6 மணிக்கு மறைமலைநகர் நகராட்சி திடலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் பொது மாநாடு நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் பா.சு.பாரதிஅண்ணா வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டு பேருரையாற்றினார்.

சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் வி.முரளிதரன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மறைமலை நகராட்சித் தலைவர் சண்முகம், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் உரையாற்றினர். வரவேற்பு குழு பொருளாளர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உரை:

சென்னை: திமுக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, புதிதாக ஒன்று கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச்சர்கள் அல்ல யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மறைமலைநகரில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4வது தமிழ் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் துறைகளை நான் பிரித்துக் கொடுத்தேன். ஆனால், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையைப் பொறுத்தவரையில், தலைவர் கலைஞரைப் போல நானே வைத்துக் கொண்டேன். நகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் சென்று வர ஆணையும் வழங்கப்பட்டது. யூடிடி கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30,909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கவும், பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தடையற்ற சூழல்களை அமைக்க சமவாய்ப்புக் கொள்கை அனைத்துத் தனியார் தொழிற்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 2 மாநில விருதுகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 790 கட்டடங்களில் ரூ.4 கோடியே 74 லட்சம் செலவிலும், 200 சுற்றுலா இடங்களில் ரூ. 1 கோடியே 20 லட்சம் செலவிலும் தடையற்ற சுழல் அமைக்க தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்புகளில் குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளில் 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை தனிச் சிறப்பு நேர்வாக தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில ஆட்சேர்ப்பு பணியகம், மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கென 2021-2022ம் நிதியாண்டில் ரூ. 813 கோடியே 63 லட்சம் அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பாக பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 2022-23 நிதியாண்டில் ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் 6 ஆண்டு காலத்திற்கு ரூ.1,702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம்., பி.சி.ஏ பாடங்கள் படிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலகச் சிந்தனையற்றோர் மற்றும் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள் முதற்கட்டமாக திருப்பூர், கோயம்புத்தர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உயர்மட்டக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இவை எல்லாம் பதினைந்தே மாதத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய நலத்திட்டங்கள் இவர்களுக்காக மட்டும் கடந்த பதினைந்து மாதத்தில் 759 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் முகத்தில் இன்றைக்கு மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். திமுக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புதிதாக ஒன்று கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

நான்கு முதலமைச்சர்கள் அல்ல யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது, நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை, அதை நான் மறந்து விடவும் மாட்டேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். நம்பிக்கையோடு இருங்கள், நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கண்காட்சி:
முன்னதாக, சங்கம் துவங்கப்பட்டதிலிருந்து மாற்றுத்திற னாளிகள் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். முன்னதாக, செங்கை போர்ப்பறை கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.

Leave a Reply