Home>>அரசியல்>>சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

பாமக தலைமை நிலைய பதிவு:


பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்! அரசு செயலாளர்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பாலங்கள், பக்கவாட்டு சுவர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சுவர்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட 7 துறைகளின் செயலாளர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர், தெற்கு தொடர்வண்டித் துறையின் பொது மேலாளர் ஆகியோருக்கு இது தொடர்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்:

பெறுநர்:
1. திரு. வெ. இறையன்பு அவர்கள்,
தலைமைச் செயலாளர்
தமிழக அரசு, தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009

2. திரு. பிரதீப் யாதவ் அவர்கள்,
முதன்மை செயலாளர்,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

3. திரு குமார் ஜெயந்த் அவர்கள்,
முதன்மை செயலாளர்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

4. மருத்துவர். மணிவாசன் அவர்கள்,
முதன்மை செயலாளர்,
பொதுப்பணித்துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

5. திருமதி. காகர்லா உஷா அவர்கள்,
முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

6. முனைவர் டி. கார்த்திகேயன் அவர்கள்,
முதன்மை செயலாளர், உயர்கல்வித் துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

7. திரு குமார் ஜெயந்த் அவர்கள்,
முதன்மை செயலாளர், வருவாய்த் துறை
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

8. திருமதி அல்கா உபாத்யாயா அவர்கள்,
தலைவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்,
ஜி 5-6, செக்டார் 10, துவாரகா, புதுதில்லி – 110 075

9. திரு. பி.ஜி. மால்யா அவர்கள்,
பொது மேலாளர் (பொறுப்பு), தெற்கு தொடர்வண்டித் துறை
தலைமை அலுவலகம், பூந்தமல்லி நெடுஞ்சாலை,
பூங்கா நகர், சென்னை – 600 003

அன்புடையீர்….

வணக்கம்!

பொருள்: தேசிய, மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அகற்றுதல் மற்றும் அழகுபடுத்துதல் – தொடர்பாக

நெடுஞ்சாலைகள் எனப்படுபவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கக் கூடியவை. அவற்றையும் கடந்து ஒரு மாநிலம் அல்லது நாடு எந்த அளவுக்கு அழகியலுடனும், ஒழுங்குடனும் பராமரிக்கப்படுகிறது என்பதை உலகிற்கு காட்டும் காலக்கண்ணாடிகள் தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆகும். ஆனால், நெடுஞ்சாலைகளையும், பிற அரசுக் கட்டிடங்களையும் அழகியலுடன் பராமரிப்பதில் நாம் வெற்றி பெறவில்லை என்பது தான் உண்மை.

சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்குடன் பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களின் சுவர்களில் விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகரத்தின் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. நமது கலாச்சாரத்தை பிற மாநிலத்தவருக்கும், பிற நாட்டவருக்கும் தெரிவிக்கும் வகையில் வரையப்படும் சுவர் ஓவியங்கள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன. அதேபோல், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் காரணமாக, சாலைகளின் அழகைக் கெடுத்த பதாகைகளுக்கும் கிட்டத்தட்ட முடிவுகட்டப்பட்டு விட்டது.

ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களை விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் சீரழிக்கும் கலாச்சாரத்திற்கு மட்டும் இன்னும் முடிவுகட்டப்படவில்லை. சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள்…. அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கட்சிகளுடன் போட்டி போடும் வகையில் திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை அருவருக்கத் தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்றாலும், சென்னையிலிருந்து பெங்களூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் சென்றாலும் வாகனங்களில் பயணிக்கும் போது சாலைகளின் ஓரங்களில் உள்ள இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை. மாறாக, சாலைகளில் இரு ஓரங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளிலும், தொடர்வண்டிப் பாதைகளின் மீதும் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரங்களும், சுவரொட்டிகளும் ரசனையைக் கெடுக்கின்றன.

நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் பல நேரங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. பல நேரங்களில் சாலைகளின் வழிகாட்டு பலகைகளை மறைத்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவை தேவையற்ற விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. இவை தடுக்கப்படாவிட்டால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்.

பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களை அனுமதிக்கக்கூடாது என்று பல தருணங்களில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எச்சரித்த பிறகும் இவை தொடருவது தான் வேதனை ஆகும். பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வதையும், சுவரொட்டிகள் ஒட்டுவதையும் தடுக்கும் வகையில் 1959-ஆம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தவெளிப்பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டம் (Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அரசு சுவர்களில் விளம்பரம் செய்வோருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், இத்தகைய சட்டவிரோத விளம்பரம் செய்வது இந்த சட்டத்தை பயன்படுத்தி தடுக்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை.

இது தொடர்பான வழக்கை 13.06.2016 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யப்படுவது தொடர்ந்தால் அதை செய்தவர்கள் மீதும், அதை தடுக்கத் தவறியவர்கள் மீதும் வழக்கமான சட்டத்தின்படி 3 மாத சிறை தண்டனை விதிக்கப் படுவது மட்டுமின்றி, கூடுதலாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அதற்கான தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கும் சில காலத்திற்கு பிறகு பயனில்லை.

இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை கடந்த 08.03.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனுமதிக்கவே முடியாது என்றும், இவற்றை அதிகாரிகள் தடுத்தே ஆக வேண்டும் என்றும் கடுமையாக கூறியது. ஆனால், அதன்பிறகும் இத்தகைய அத்துமீறல்கள் தொடர்கின்றன; எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் இத்தகைய சட்டவிரோத விளம்பரங்கள் தொடருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகள், தொடர்வண்டி பாலங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு திறந்தவெளிப்பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டத்தை பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தொடர்வண்டித்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அந்த இரு துறைகளும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

தமிழ்நாடு அரசும் மற்ற அமைப்புகளும் நினைத்தால், இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களைத் தடுக்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் தடை செய்யும் தமிழ்நாட்டு அரசால் மற்ற தருணங்களில் இத்தகைய விளம்பரங்களை தடுக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. சாலைகளின் அழகையும், அரசு கட்டிடங்களின் அழகையும் பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் அரசுத் துறைகளின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

அதை உணர்ந்து தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் தமிழக அரசு, தமிழக அரசுத் துறைகள், தொடர்வண்டித்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக அழித்து விட்டு, அந்த இடங்களை அழகுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், பொது இடங்களைக் கெடுக்கும் விளம்பரங்களை அகற்ற நீதிமன்றங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!


தங்கள்,
மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

Leave a Reply