சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க உயர்கல்வித்துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. பணியாளர்களின் உரிமைகளை பறித்து அவர்களை கொத்தடிமைகளாக்கும் புதிய நியமன முறை கண்டிக்கத்தக்கதாகும்.
இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலையில் 421 பேர் தினக்கூலி பணியாளர்களாக 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக, அவர்களை பணி நீக்கம் செய்து விட்டு, அதே எண்ணிக்கையிலான ஊழியர்களை தனியார் மனிதசக்தி நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்று கடந்த 28.02.2022 அன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 264-ஆவது சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நான், “பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதா?” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன் பயனாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால், சென்னையில் கடந்த மே 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தற்காலிக பணியாளர்கள் குத்தகை அடிப்படையில், தனியார் மனிதசக்தி நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் தான் தான் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதியம் மனித சக்தி நிறுவனங்கள் மூலமாகத் தான் வழங்கப்பட வேண்டும்’’ என்று உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் வலியுறுத்தினார். இதே கருத்தை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வி செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
அதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் தாங்கள் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 205 பேரும் இம்மாத இறுதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதே முறையில் மற்ற பல்கலைக்கழகங்களிலும் தற்காலிக பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலை.களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் தகுதி குறைந்தவர்கள் அல்ல… திறமை மிக்கவர்கள். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பத்தாண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இவர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணி நீக்கப்பட்டால் அவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்து விடும்.
அவுட்சோர்சிங் என்பது பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாளர்களுக்கான ஊதியத்தை அவுட்சோர்சிங் நிறுவனம் பெற்றுக் கொள்ளும். ஆனால், அந்த ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்காது; அதில் பாதிக்கும் குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப்படும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவர். கடந்த ஆட்சியில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடுமையாக எதிர்த்தார். அப்படிப்பட்ட ஒரு முறையை அவரது ஆட்சியிலேயே பல்கலை.கள் திணிப்பது நியாயமல்ல.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும்; அதனால் தங்களின் வாழ்வில் வசந்தம் பிறக்கும் என்று தான் அரசுத்துறைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை சிதைப்பது மட்டுமின்றி, வாழ்வாதாரத்தையும் பறிக்கும் செயலில் உயர்கல்வித்துறை ஈடுபடக்கூடாது.
எனவே, பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை குறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் நியமனங்கள் செய்யப்படாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாகவே அறிவிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்.
—
மருத்துவர் இராமதாசு,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்.