Home>>அரசியல்>>ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக!
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக!

மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!!
பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, வழக்கறிஞர் கேசவன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் மற்றும் கட்சியின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தலைவர்கள் உயிரிழந்த ஸ்ரீமதியின் பெற்றோர்களையும், அவரது தரப்பு வழக்கறிஞர்களையும், அப்பகுதி மக்களையும் இன்று (27.7.2022) நேரடியாக சந்தித்து நிலைமைகள் மற்றும் விபரங்களை கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனையில் அடுத்த கட்டமாக தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று கள்ளக்குறிச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார். அச்சந்திப்பின் போது கொடுக்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக!
மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!!
பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!!
மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!!
என தமிழ்நாடு அரசிற்கு அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்


கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13.7.2022 அன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், மற்றவர்களிடம் விசாரித்த போது பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன. மாணவி மரணம் குறித்து 13.7.2022 அன்று காலை 6.30 மணிக்கு அவருடைய தாயாருக்கு தகவல் வந்துள்ளது. தாயாரும் மற்ற உறவினர்களும் சம்பவ நடந்த பள்ளிக்கு வருவதற்கு முன்பே, பள்ளி நிர்வாகம், ஸ்ரீமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைத்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பள்ளியில் உள்ள மற்றவர்களையும், சக மாணவிகளையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். மாடியிலிருந்து குதித்தாக கூறப்படும் சம்பந்தப்பட்ட இடத்தையும் காட்ட மறுத்துள்ளனர்.

இம்மரணம் குறித்து பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திய பிறகு 2022 ஜூலை 14 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த கூறாய்வு அறிக்கையில் அவரது மூக்கு, வலது தோள்பட்டை, வலது கரம் உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது ஆடைகளிலும் ரத்தக் கரைகள் இருந்துள்ளன. மேலும் வலதுபுற நெஞ்சுப் பகுதி மார்பகம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்களும் இருந்துள்ளன. இத்துடன் வலதுபுறம் உள்ள மார்பக எலும்புகூட்டில் பெரும்பாலான எலும்புகள் முறிந்து உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டும் அது வேலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி அணிந்திருந்த நகை அறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேற்கண்டவைகளை சீர்தூக்கி பார்க்கும் போது மாணவியின் மரணம் தற்கொலையாகவோ, 3வது மாடியிலிருந்து குதித்து இறந்துள்ளதாகவோ முடிவுக்கு வர முடியவில்லை. அம்மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும், மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

2022 ஜூலை 14 அன்று இத்தகைய தெளிவான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட, காவல்துறையினர் உரிய கோணத்தில் தனது விசாரணையை தொடராமலும், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட இதர நிர்வாகத்தினரை கைது செய்யாமலும் இருந்ததானது மாணவியின் மரணத்திற்கான காரணத்தை மறைப்பதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

தற்போது, இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிபிசிஐடி பாரபட்சமின்றி முழுமையான புலன் விசாரணை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணத்தையும், அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளையும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருகிற அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்துகிறோம். விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு மாறாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாணவியை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற பெற்றோருக்கு மற்றும் பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையானால் பள்ளிக்கு அனுப்பும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என கவலையும், அச்சமும் உள்ள பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திட வேண்டும். இவ்வழக்கில் மெத்தனமாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நான்கு நாட்கள் தாமதப்படுத்தியதன் விளைவாக பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் 17.7.2022 அன்று பள்ளியில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது குறித்த உண்மையான காரணத்தை முழுமையான புலன் விசாரணை மூலம் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். ஏற்பட்ட வன்முறை சம்பவமும் கூட மாணவியின் மரணத்திற்கான தடயங்களை அழிக்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளதா என்பதையும் காவல்துறை விசாரித்து உறுதிசெய்ய வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் பள்ளியில் நடந்த வன்முறை ஏற்புடையதல்ல. இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இச்சம்பவத்தை காரணம் காட்டி அப்பாவிகளையும், சம்பந்தமில்லாத மாணவர்களையும் கைது செய்கிற நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இப்பள்ளியில் பயின்றுவரும் 3500க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பள்ளியில் இருந்த மாணவ – மாணவியர்கள், ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களும் எரிந்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், ஆசிரியர்களின் சான்றிதழ்களும் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், அப்பகுதியில் தற்போது நீடித்து வரும் பதற்றத்தை தணிப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஆகஸ்ட் 5 கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 5, 2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Leave a Reply