Home>>இலக்கியம்>>பேரா! என் பையனை விடுடா! – சிறுகதை
இலக்கியம்கதை

பேரா! என் பையனை விடுடா! – சிறுகதை

பேரா! என் பையனை விடுறா!!


“டேய்! இப்ப முடிவா என்னதான்டா சொல்ற. நானும் 5 வருசமா சொல்லிகிட்டே இருக்கேன். நீ கேட்டபாடு இல்ல. இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும் எனக்கு”.

“அப்பா! நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்.இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம். நான் இன்னும் செட்டில் ஆகணும். இன்னும் 2,3 வருசம் போகட்டும்”

“சொன்னா புரிஞ்சுக்கடா. உங்கம்மா இறந்து 5 வருசம் ஆச்சு. வீட்டுல பொம்பளன்னு யாருமே இல்ல. உங்கக்கா தீபாவளி, பொங்கல்ன்னு பண்டிகைக்கு மட்டும்தான் வந்து பாக்குறா… அவ மேலயும் தப்பு இல்ல. 300 km க்கு அப்பால இருக்கா. ரெண்டு புள்ளங்க வேற. கைக்குழந்தை வேற இருக்கு.இந்த நிலைமைல என் நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருடா. நீயே வருசம் ஒருவாட்டிதான் சிங்கப்பூரில இருந்து வர.நான் யார் துணையும் இல்லாமல் கஷ்டப்படுறேன். மருமக இருந்தா என்னை பாத்துக்குவா… அதுக்காகதாண்டா சொல்றேன்.”

“அப்பா!நீ தனியா இருக்கக்கூடாது ன்னுதான் வேலைக்காரி வச்சுட்டு போனா, நீ வர ஒவ்வொருத்தர்கிட்டையும் சண்டை போட்டு அனுப்பிச்சுடுற. நான் என்ன பண்ண”.

“எனக்கு வேலைக்காரி எல்லாம் வேணாம் எவளும் நான் சொல்றத கேட்க மாட்டேங்கிறா. எனக்கு வயசு 60 ஆச்சு. என்னை ஏதாவது பண்ணிட்டு வீட்டை கொள்ளை அடிச்சுட்டு போனா என்னடா பண்ணுவ.”

“உங்க கற்பனைக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதுப்பா. என்னால இதுக்கு மேல உங்களுக்கு உதவ முடியாது வேணும்னா சொல்லுங்க வேற வேலைக்காரி வைக்கிறேன். இல்லைன்னா நீங்களே சமைச்சு சாப்பிடுங்க. பக்கத்துல உள்ளவங்க கிட்ட சொல்லிட்டு போறேன். அவங்க உங்கள பாத்துக்குவாங்க. நான் இன்னைக்கு போனா இன்னும் ஆறு மாசம் கழிச்சு வர தீபாவளிக்கு தான் வருவேன். வேணும்னா அதுவரைக்கும் அக்கா வீட்டில் போய் தங்கிட்டு வாங்க”

“எனக்கு அங்க ஒத்து வந்தா இருக்க மாட்டேனா.. சின்ன வயசுல இருந்து இதே ஊர்ல, இதே வீட்டுல சுதந்திரமா வாழ்ந்து பழகிட்டேன்.எனக்கு வேற எங்கேயும் செட்டாக மாட்டேங்குது. நான் என் வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேன்”.

“அப்ப என்னாலயும் ஒண்ணும் பண்ண முடியாதுப்பா.உங்க இஷ்டத்துக்கெல்லாம் என்னால இப்ப கல்யாணம் பண்ண முடியாது.எனக்கு வயசு இப்ப 26 தானே ஆகுது.இன்னும் 2,3 வருஷம் போகட்டும்.அதுக்குள்ள நானும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவேன். அதுவரைக்கும் என்னைதொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்”.

இதுக்குப்பிறகு கொஞ்சம் ஆடித்தான் போனார் பெரியவர். இது அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே அடிக்கடி நடக்கிற விவாதம்தான். சிங்கப்பூர்ல இருந்து விடுமுறையில் வந்த பையன் இன்னைக்கு ஊருக்கு போகப்போறான். இருந்த ஒரு மாத காலமும் எவ்வளவோ மன்றாடி கேட்டு பாத்துட்டார் பெரியவர்.ஒண்ணும் வேலைக்காகல.

ஐந்து வருடம் முன்பு மனைவி இருந்த வரை அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ராஜா போல வாழ்ந்தார். அதற்காக அவர் மனைவி ராணி இல்லை. அவருக்கு சேவகம் செய்யும் பணியாள்தான். அவர் சொன்ன எல்லா கட்டளைக்கும் அடிபணிந்து போறதுதான் அவர் மனைவியின் வேலை. அந்தத் தலைமுறையில் பல ஆண்கள் அப்படித்தான் பெண்களை வைத்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பது ஒரு சம்பளம் வாங்காத வேலைக்காரிதான். உயிரோடு இருக்கும் வரை மனைவியின் அருமை பலருக்கு புரிவதில்லை. அது போலதான் நம்ம பெரியவரும் ரொம்பத் தாமதமாகவே அதை உணர்ந்தார். உணர்ந்தார் என்பதை விட பற்பல வேலைக்காரப் பெண்களால் உணர வைக்கப்பட்டார்.

மனைவியை வேலை வாங்குவது போலவே சம்பளத்திற்காக வேலை பார்க்கும் வேலைக்காரிகளையும் நடத்தினால் யார் தான் சும்மா இருப்பா??. சாப்பாட்டுல உப்பு அதிகமானாத் திட்டு .காரம் குறைஞ்சாத் திட்டு. கீழ தூசி கிடந்தா திட்டு. இப்படி எல்லா வேலைலயும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு திட்டிக் கிட்டே இருந்தால் யார்தான் பொறுத்துக்கிட்டு வேலை பார்ப்பார். கடந்த அஞ்சு வருடத்தில 7, 8 வேலைக்காரிகள் மாறியாச்சு. உண்மையிலேயே தவறு செய்தால் திட்டுவது என்பது வேறு .ஆனால் இவர் திட்ட வேண்டும் என்பதற்காகவே தவறை உருவாக்குவார். இப்படித்தான் ரொம்ப நாள் இவர் பண்ற இம்சை எல்லாம் தாங்கிக்கிட்டு வேலைப் பார்த்த ஒரு வேலைக்காரியை இவர் வேலையை விட்டு அனுப்பின விதம் இருக்கே…

பெரியவருக்கு வெண்டைக்காய் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதைத் தெரிந்து கொண்ட வேலைக்காரி ஒரு நாள் வெண்டைக்காய் வைத்து புளிக் குழம்பு வைத்தார். சாப்பிட்டுவிட்டு என்ன இது ஒரே முத்தலா இருக்கு வெண்டைக்காய் ஒழுங்கா பார்த்து வாங்கலயான்னு திட்டினார்.

சரின்னு அடுத்த நாள் மார்க்கெட்ல போய் நல்ல பிஞ்சு வெண்டைக்காயாக பார்த்து வாங்கிட்டு வந்து சமைத்துக் கொடுத்தார்.

என்னது சுண்டு விரல் சைஸ் தான் இருக்கு. இதெல்லாம் ஒரு வெண்டைக்காயா என்று மறுபடியும் திட்டினார்.
அதையும் பொறுத்துக் கொண்ட அந்த மகராசி அடுத்த நாள் ஒரு லென்ஸ் எடுத்துட்டு மார்க்கெட் போய் சிறுசும் இல்லாம பெருசும் இல்லாம நல்ல வெண்டைக்காயா எடுத்துட்டு வந்து சமைச்சு வச்சாங்க.

இந்த முறையாவது நம்மள பாராட்டுவார் நினைச்சா, கேட்டாரே ஒரு கேள்வி! தினம் வெண்டைக்காய் தானா வேற எந்த காயும் நீ சமைக்கவே மாட்டியான்னு.

வந்த கோவத்துல சட்டியோடு குழம்ப தூக்கி பெரியவர் தலையில கவுத்துட்டு போனது தான் மிச்சம். இப்படித்தான் வேலைக்காரிகளுக்கும் நம்ம பெரியவருக்கும் இடையே உறவுகள் இருந்தது. மகள் எத்தனையோ முறை இவரை கூப்பிடும் இவர் போவதாக இல்லை. அப்படியே போனாலும் ரெண்டு நாளைக்கு மேல இருக்க மாட்டார்.அவருக்கு அங்கே இருப்புக்கொள்ளாது. உடம்புக்கு எதாவது முடியலன்னா மட்டும் போவார். உடம்பு சரியானயுடன் கிளம்பி உடனே வந்து விடுவார்.

தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்ற மாதிரி இந்த கட்ட வெந்து மண்ணோடு மண்ணாக இதே ஊர்ல போனாலும் போகுமே தவிர,வேற எந்த ஊருக்கும் போகாதுன்னு ஒரு வைராக்கியத்தோடு வாழ்பவர்.

இந்த நிலையில் தான் விடுமுறைக்கு ஊருக்கு வந்த மகனிடம் இந்த முறை எப்படியும் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தேயாக வேண்டும் என்ற முடிவோடு ரொம்ப தீவிரமாகவே வாதித்துக்கொண்டிருந்தார்.

இது மாதிரி பலமுறை வாதம் செய்தும் இறுதியில் தோல்விதான் அடைவார். இந்த முறையும் அவர் ராஜதந்திரங்கள் எதுவும் அவர் மகனிடம் பலிக்கவில்லை. தோல்வியை நோக்கி சென்றவர் இறுதியாக திடீரென பிரம்மாஸ்திரம் ஒன்றை எடுத்தார்.

“தம்பி!இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும். ஒன்னு நீ கல்யாணம் பண்றியா இல்ல நான் பண்ணவா “ன்னு வாய் வரை வந்ததை சற்று மென்னு முழுங்கினார்.

ஆனால்,

காதலுக்கு மரியாதை படம் கிளைமாக்ஸ்ல ஷாலினி அம்மா சொல்ற மாதிரி,

“பண்ணிக்கோங்களேன்!யார் உங்களை வேணாம்ன்னு சொன்னா!என்னை ஆளை விட்டா சரி”ன்னு பையன் சொன்ன உடனே பெரியவருக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

ஆனால் சொன்னதை செஞ்சுட்டார்.ஆறே மாசத்துல கணவனை இழந்த ஒரு 45 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்டார்.

இன்றோடு 9 வருடங்கள் ஆகிறது.ஒரு மகனையும் பெற்றெடுத்து விட்டார். அவனுக்கு வயது 7. அப்படிப்பட்ட இந்த பெரியவரோடு பழகும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த கதையெல்லாம் அவர்தான் என்கிட்ட சொன்னாரு. கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. இப்பவே இவருக்கு 70 வயசு ஆயிடுச்சு. பையனுக்கோ வயசு வெறும் ஏழு தான். இன்னும் எத்தனை நாளைக்கு இவர் உயிரோட இருப்பார் எப்படி மகனை வளர்ப்பார். ஆனால் அதை அவரிடம் எப்படி கேட்க, ஒரு தீபாவளித் திருநாளில் அவரது மொத்த குடும்பமும் அங்கே சூழ்ந்து இருக்க, அவரது மகன் மற்றும் பேரன்,பேத்திகள் ஒன்றாக மகிழ்ந்திருக்கும் வேளையில்.

நான் இதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வழக்கத்துக்கு மாறாக பெரியவர் மனைவி அவரைக் கரித்துக் கொண்டிருந்தார்.

“வயசு 70 ஆவது. பிரஷர் வேற 180 இருக்கு. சாப்பாட்டுல உப்பு காரத்தை குறைக்கிறதும் இல்லை. இறைச்சி சாப்பாட்டையும் விடுவதும் இல்லை. உங்களுக்கு இறைச்சி கறி போதும். ஏற்கனவே நிறைய தின்னுட்டீங்க”

” இட்லிக்கு கறிக்குழம்பு நல்லா இருக்கும்டி. இன்னும் கொஞ்சம் போடுடி” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தார்.
பரவால்லை எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறிட்டாருன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அனுபவமே சிறந்த பாடம்ன்னு சும்மாவா சொன்னாங்க.

இவர் இப்படியே சந்தோசமா இன்னும் 30 ,40 வருஷம் வாழனும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். அவர் பிள்ளை பெரியவனாகும் வயது மட்டுமாவது அவர் உயிரோடு இருக்கணும்னு மனதார விரும்பினேன்.

“தம்பி! இவ எப்ப பார்த்தாலும் சிடு சிடுன்னே இருக்காப்பா. கொஞ்சம் ஆசா பாசமா இருந்தா இன்னொரு குழந்தை தயார் பண்ணலாம்னு பார்த்தேன். அதுக்கு ஒன்னும் ஒத்துழைக்க மாட்டேங்கிறாப்பா”ன்னு என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டுட்டே சொன்னார்.

நான் இன்னும் என்னை மனதில் வைத்தே அடுத்தவரை எடை போடுகிறேன் என்ற தவறை உணர்ந்தேன். கடந்து போன நேற்றையும் இன்னும் வராத நாளையும் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இன்று மட்டுமே நிச்சயம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு கணப்பொழுதையும் மகிழ்ச்சியாக வாழும் இவர் எனக்கு ஒரு வாழ்வியல் பாடமாகவே தெரிந்தார்.
“டேய் !டேய்! என் பையன விடுடா பேரப் பயலே. அவன் உனக்கு மாமாடா. அவன அடிக்காதடா. என் புள்ள மேல கை வைத்த நடக்கிறதே வேற. சொல்லிப்ட்டேன்!”.

அப்படி அவர் செல்லமாக மகனோடும், பேரனோடும் விளையாடிய அந்தத் தருணத்தில் இலக்கணங்கள் வகுக்கப்பட்ட நம் வாழ்வியல் நெறிமுறைகளை மீறிய பல அழகியல்கள் இன்னும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன என்பதை உணர்ந்தேன்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply