நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: மத்திய குழுவிடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் வலியுறுத்தல்.
<hr>
இன்று (15/10/2022) காவிரிப்படுகை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின், ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கான் தலைமையில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வருகை தந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான திரு. க.மாரிமுத்து அவர்கள் நேரில் சந்தித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என கோரிக்கை மனு அளித்து வலியுருத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து அவர்கள் தனது கோரிக்கை மனுவில் ‘காவிரிப்படுகை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும், குளிர்ந்த காற்று வீசுவதாலும் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல், ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் நெல்லின் ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.
மேலும் குழு உறுப்பினர்களாக உள்ள சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அலுவலர் சி.யுனஸ், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு பொது மேலாளர்கள் செந்தில், மகாலெட்சுமி அடங்கிய மத்திய குழுவினரிடம் விவசாயிகளின் நிலை கூறி வலியுறுத்தினார்.
—
செய்தி உதவி:
தோழர் கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.