Home>>அரசியல்>>தமிழ்நாடு மக்களை புறக்கணிக்கும் கிருட்டிணகிரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு மக்களை புறக்கணிக்கும் கிருட்டிணகிரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், வேலைக்கு ஆள்சேர்ப்பில் தமிழ்நாடு மக்களை புறக்கணிப்பதைக் கண்டித்து தமிழ் மைந்தர் மன்றமும் நாம் தமிழர் கட்சியும் அடுத்தடுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.

சென்ற வாரத்தில் பணியாளர் சேர்ப்பில் தமிழ்நாடு மக்களுக்கு 90% வழங்கவும், கிருட்டிணகிரி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கவும், வயது மற்றும் கல்வித்தகுதிகளில் தளர்வுகளும் ஆண் இளையோர்களுக்கும் வாய்ப்புகள் கேட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிறுவன அதிகாரிகளிடம் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தியிருந்தோம்.

இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்ற அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இன்று ஒசூர் அருகிலுள்ள கூத்தனப் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள டாடா நிறுவன வாயிலில் மேற்கூறிய கோரிக்கைகளோடு வடமாநில தொழிலாளர்களை திருப்பியனுப்ப வேண்டியும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அறிவிப்பு வெளியானதில் இருந்து கிருட்டிணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் காவல்துறையின் தொடர்ச்சியான உசாவலுக்கும் கண்காணிப்பிற்கும் உள்ளானார்கள். வீட்டோடு முடக்கும் நடவடிக்கைகளும் எடுத்தனர்.

மறுபுறம் பொறுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் அடிப்படையில் ஆலை வாயிலில் நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாளர்கள் சென்றனர்.

கிருட்டிணகிரி மண்டல செயலாளர் கரு. பிரபாகரன் தலைமையில் பலரோடு தமிழ் மைந்தர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் செம்பரிதி யும் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியோடு தமிழ் மைந்தர் மன்ற பொறுப்பாளர்கள் நடவரசன் அமிர்தம், தோழர் வேலாயுதம், தோழர் சரவணன் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிப்பதாகவும் டாடா நிறுவனத்தோடு பேசுவதாகவும் கூடுதலாக அரசிற்கும் இக்கோரிக்கையில் ஒத்த கருத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள மண்ணின் மக்களுக்கான வேலை உரிமை பாதுகாப்புக்கான போராட்டம் தமிழ்நாடு அளவில் விரிவடைய வேண்டும்.

தமிழ்நாடு இளைஞர்கள் சற்றேறக்குறைய ஒரு கோடி பேர் கல்விக்கேற்ற வேலையில்லாது திண்டாடி வருகின்றனர். தூய்மைப் பணியாளர் தேர்விற்கு பொறியியல் பட்டம் பெற்றவர்களும் நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதியான, தமிழ்நாடு வேலை 75% தமிழர்களுக்கே என்பதை முதற்கட்டமாக உடனடியாக சட்டமாக்க வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மண்ணின் மக்களின் வேலை உரிமைப் பாதுகாப்பு சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்.

இதற்கான தொடர் முயற்சிகளை தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கங்களும் கட்சிகளும் எடுக்க வேண்டும்.


செய்தி உதவி:
திரு. நடவரசன் அமிர்தம்.

Leave a Reply