தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய பால்வளத்துறை அமைச்சகம் எதற்கு..?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களை தமிழக அரசும், தமிழக பால்வளத்துறையும் கண்காணிக்கவும், வரன்முறைபடுத்தவும் தவறியதால் முன்னணியில் உள்ள பால் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து பால் நிறுவனங்களும் தாங்கள் நினைத்த போதெல்லாம் பால் விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவதையும், கொள்முதல் விலையை மிகக் குறைந்த விலை கொடுத்து அடிமாட்டு விலைக்கு வாங்குவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன.
குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தற்போதைய நடப்பாண்டில் மட்டும் கடந்த பிப்ரவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதம் என 8மாதங்களில் மூன்று முறை “பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு” என்கிற பொய்யான காரணத்தைக் கூறி பால் மற்றும் தயிர் விற்பனை விலையை மூன்று முறையும் சேர்த்து லிட்டருக்கு பத்து ரூபாய்க்கும் மேல் தன்னிச்சையாக உயர்த்தின.
இந்த நிலையில் நடப்பாண்டில் மட்டும் நான்காவது முறையாக ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ், ஜெர்சி தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பாலுக்கான விற்பனை விலையை மீண்டும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்துவதாக தாங்கள் வழக்கமாக கூறுகின்ற பொய்யான காரணத்தையே இம்முறையும் மீண்டும் சுற்றறிக்கை வாயிலாக கூறி தன்னிச்சையாக பால் விலை உயர்வை அறிவித்துள்ளன. மேற்கண்ட முன்னணி நிறுவனங்களைப் பின்பற்றி மற்ற முன்னணி நிறுவனங்களும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் என அனைத்து தரப்பு தனியார் பால் நிறுவனங்களும் இன்னும் ஓரிரு நாட்களில் பால் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
தற்போது தமிழகத்திலோ அண்டை மாநிலமான ஆந்திராவிலோ பால் கொள்முதல் விலை உயர்விற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில் பால் கொள்முதல் விலை 1TS (FAT & SNF Total Solids) அதிகபட்சமாக ரூபாய் 2.90 என்கிற நிலையிலேயே (ஆவின் கொள்முதல் விலை 1TS ரூபாய் 2.66 FAT & SNF Total Solids) இருக்கும் போது தற்போது தங்களின் சுயலாபத்திற்காக பால் விற்பனை விலையை உயர்த்தியிருக்கும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வால் பால் சார்ந்த தேநீர், காபி உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பால் விற்பனை விலை உயர்வு செய்துள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் உடனடியாக அதனை திரும்பப் பெற வேண்டும் எனவும், தமிழக அரசு இம்முறையேனும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
கடந்த கால கொரோனா காலகட்டத்திற்கு சில மாதங்கள் முன் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6.00ரூபாய் வரை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள், கொரோனா நோய் பெருந்தொற்று காலகட்டத்தில் பால் விற்பனை சரிந்ததால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 18.00ரூபாய்க்கும் அதிகமாகவே குறைத்தன. ஆனால் அதன் பலனை நுகர்வோருக்கான பால் விற்பனை விலையில் குறைக்கவோ, பால் முகவர்களுக்கான லாபத் தொகையில் உயர்த்தி வழங்கவோ எந்த ஒரு தனியார் பால் நிறுவனம் முன்வரவில்லை என்பதால் பொதுமக்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் அதனால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இனி வருங்காலங்களில் இது போன்று நடைபெறா வண்ணம் தடுக்க விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும், தனியார் இயக்குகின்ற ஆட்டோ, பேருந்து கட்டணங்களையும் மட்டுமின்றி தமிழகத்தின் தினசரி பால் தேவையில் வெறும் 16% தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்வது போல், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் பொதுமக்களுக்கு 84% தேவைகளை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான அதிகபட்ச விலையையும் அரசே நிர்ணயம் செய்யக்கூடிய வகையில் ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி “பால் கொள்முதல் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம்” அமைக்க “தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்கிற கோரிக்கையை தமிழக முதல்வராகிய தங்களுக்கும், பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறை செயலாளர் ஆகியோருக்கும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியதோடு மட்டுமின்றி அச்சு, காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் அரசுக்கு கோரிக்கை முன் வைத்தோம். ஆனால் எங்களது நியாயமான நீண்ட கால கோரிக்கையை கடந்த கால அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது போல் செய்யாமல் திமுக அரசாவது மக்களுக்கான அரசாக இருந்து எங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் என எண்ணிய நிலையில் தங்கள் அரசும் கண்டு கொள்ளாதது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டில் 3வது முறையாக பால் விற்பனையை உயர்த்திய போது எங்களது கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “பால்வளத்துறை ஆவினை மட்டுமே கட்டுப்படுத்தும்”, “தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது” என அத்துறை அமைச்சரான திரு. சா.மு.நாசர் அவர்கள் ஊடகங்கள் முன் தெரிவித்தது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது” ஏனெனில் அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையோ அல்லது பள்ளி, கல்லூரி சார்ந்த துறைகளையோ கவனிக்கும் எந்த ஒரு அமைச்சரும் சம்பந்தப்பட்ட அந்த துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது என்றோ அல்லது அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இல்லை என்றோ பொதுவெளியில் ஆணித்தரமாக கூறியதாக செய்திகள் வெளியானது இல்லை எனும் போது பால்வளத்துறை அமைச்சரான திரு நாசர் அவர்கள் மட்டும் தனியார் பால் நிறுவனங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துக்களை ஊடகங்கள் முன் பதிவு செய்தது பால்வளத்துறையும், துறை சார்ந்த அமைச்சரான திரு. சா.மு.நாசர் அவர்களும் தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்களோ..? என்கிற சந்தேகத்தை எங்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை பால்வளத்துறையில் உள்ள தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் தமிழகத்தில் அந்த துறைக்கு என்று தனியாக ஒரு அமைச்சகமும், அமைச்சரும் எதற்கு..?, 84% மக்கள் தனியார் நிறுவனங்களுடைய பாலினையே வாங்கி பயன்படுத்தும் நிலையில் இருக்கும் போது 16% மக்கள் பயன்படுத்தும் ஆவினை மட்டும் நிர்வகிக்க பால்வளத்துறையின் பெயரால் ஒரு அமைச்சரும், அவருக்கு உதவியாளர்கள், அத்துறைக்கு என எண்ணற்ற அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாத ஊதியம், போக்குவரத்து வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது எல்லாம் அரசுக்கு வீண் செலவும், தேவையற்ற நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்பதாலும், ஆவினில் ஏற்கனவே எண்ணற்ற அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்கள் உழைப்பில் வரும் வருமானத்திலிருந்து மாத ஊதியம், சிறப்பு சலுகைகள் எல்லாம் பெற்றுக் கொண்டிருக்கும் போது தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த இயலாத செயலற்ற துறையாக இருக்கும் பால்வளத்துறையை கலைத்து விட்டு, அத்துறை சார்ந்த அமைச்சரையும் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறும் அதன் பிறகு பால்வளத்துறையை “ஆவின் நலத்துறை” என பெயர் மாற்றம் செய்யுமாறும் தங்களை தாழ்மையுடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தமிழகத்தின் மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், கோவை, தேனி, வேலூர், நெல்லை, தூத்துக்குடி நாகர்கோவில் உள்ளிட்ட 27 ஆவின் ஒன்றியங்களில் பால் கொள்முதலை 40% முதல் 50% குறைக்க வேண்டும் என மேல்மட்டத்தில் இருந்து அதிகாரிகள் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பால் கொள்முதலை குறைத்துள்ளதால் பால் வரத்து மிகக் கடுமையாக குறைந்துள்ளது. அதனால் பால் வரத்து குறைந்துள்ளதை காரணமாக வைத்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான ஒன்றியங்களில் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனையை முற்றிலுமாக நிறுத்துமாறு அந்தந்த ஒன்றிய பொது மேலாளர்களுக்கு நிர்வாக இயக்குனர் தரப்பில் இருந்து உத்தரவு போடப்பட்டுள்ளதாக கூறி கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் உள்ள ஆவின் ஒன்றியங்களில் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது., இணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னையில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனை 30% அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மற்ற ஒன்றியங்களிலும் கூட பால் வரத்து குறைவின் காரணமாக நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளும் தட்டுப்பாடாகவே விநியோகம் செய்யப்படுவதால் தமிழக முழுவதிலும் ஒட்டுமொத்தமாக ஆவின் பால் பாக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை சார்ந்த அமைச்சரான திரு. நாசர் அவர்களோ தனக்கு எதுவுமே தெரியாதது போல் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாக அறிக்கை விட்டுக் கொண்டும், ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வுகள் எனும் பெயரில் இனிப்புகளை கிண்டிக் கொண்டும் பொழுதை கழித்து வருகிறார்.
எனவே ஆவினில் தற்போது நிலவும் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய பால் நிறுத்தப் போராட்டம், கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி வழங்குவதும், அதற்கேற்றாற் போல் ஆவின் பால் விற்பனை விலையையும் மாற்றி அமைப்பதோடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா அரசுகள் அந்தந்த மாநில பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்ற பாலுக்கு லிட்டருக்கு 5.00ரூபாய் மானியம் வழங்குவதைப் போல ஆவின் கொள்முதல் செய்கின்ற பாலுக்கு குறைந்தபட்சம் லிட்டருக்கு 5.00ரூபாய் மானியம் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் எனவும், பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான லாபத் தொகையை லிட்டருக்கு 5.00ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், ஆவின் இணையத்திலும், ஒரு சில மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களிலும் அளவு கடந்து தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளுக்கு காரணமாக உள்ள “WSD” எனப்படும் மொத்த விநியோகஸ்தர்களை ரத்து செய்துவிட்டு மற்ற ஒன்றியங்களில் உள்ளதைப் போன்று பால் முகவர்களோடு நேரடியான வர்த்தக தொடர்புகளை வழங்கிடவும் ஆவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தற்போதைய துறை சார்ந்த அமைச்சரை உடனடியாக மாற்றம் செய்து அந்த இடத்திற்கு தகுதியானவரை நியமிக்க வேண்டும் எனவும், பால்வளத்துறையில் உள்ள தனியார் பால் நிறுவனங்களை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது எனும்பட்சத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி மாநில உரிமையை காத்திடுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலத்தின் சார்பில் தங்களை தாழ்மையுடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
—
திரு. சு.ஆ.பொன்னுசாமி,
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி:- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
16.10.2022