Home>>இதர>>மன்னையின் மைந்தர்களின் நம்மாழ்வார் புகழஞ்சலி-30.12.2022
இதரசமூக பணிமன்னார்குடி

மன்னையின் மைந்தர்களின் நம்மாழ்வார் புகழஞ்சலி-30.12.2022

நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்(30.12.2022)

விவசாயம் என்பது தொழில் அல்ல,அது வாழ்வியல்!
நிலம் என்பது தொழிற்சாலையும் அல்ல! தாய் தன் பிள்ளைக்கு உணவூட்டுவது எப்படி
ஒரு தொழிலாக முடியும்!
நீரை பூமியில் தேடாதே! வானத்தில் தேடு!
இயற்கையோடு வாழ வேண்டும்.
இயற்கை விவசாயத்தை முன்னேடுக்க வேண்டும்!
நஞ்சில்லா உணவு வேண்டும்.
அடி மண்ணுக்கு!
தண்டு மாட்டுக்கு!
நுனி நமக்கு !

ஒரு நாள்..!!
இந்த அரசுமுறை நம்மை அடிமையாக்கும். இந்த கலாச்சாரம் நம்மை விபச்சாரியாக்கும். இந்த மொழிப்பிழை நம்மை ஊமையாக்கும். இந்த கல்விமுறை நம்மை முட்டாளாக்கும். இந்த உணவுமுறை நம்மை ஊனமாக்கும் .இந்த உடை நம்மை நிர்வாணமாக்கும்.
இந்த இருப்பிடம் நம் சமாதியாகும் .இந்த தொழில்முறை நம்மை தினக்கூலியாக்கும்.இந்த விவசாயமுறை நம்மை நஞ்சாக்கும். இந்த உறவுமுறை நம்மை அனாதயாக்கும்…எதற்காக இந்த வாழ்க்கைமுறை…?
“என்றோ ஒருநாள், ஏதோ ஒரு காரணத்திற்கு, எங்கிருந்தோ வருகின்ற உணவு நின்றுபோகலாம். வாகனங்கள் நிறுத்தப்படலாம். கப்பல்கள் மிதப்பதையும், விமானங்கள் பறப்பதையும் கூட நிறுத்தலாம். அதனால் உனக்கான உணவை நீயே உற்பத்தி செய்ய பழகிக்கொள்! ”
சுருக்கமாகச் சொல்வதானால் “பறக்காத (மெதப்புல திரியாத என்பர்), தரையில நில்லு”. இப்படியும் கொள்ளலாம்.
எப்பேர்ப்பட்ட தத்துவங்கள் இவை!!
மானிட வாழ்வின் யதார்த்தத்தையும், ஆரோக்கியத்தையும் மிக எளிதாக விளக்கிய தத்துவ ஞானி நம்மாழ்வார் அவர்கள்!

புத்திசாலித்தனம் என்பது நமது கருத்தை அடுத்தவருக்கு எந்த அளவு எளிமையாக புரிய வைக்கிறோம் என்பதை பொறுத்துதான் அளவிடப்படுகிறது. அந்த வகையில் நம்மாழ்வார் ஒரு மகா ஞானி!
பூமி வெப்பமயமாதல் என்பதை பல விஞ்ஞானிகள் பலவாறு நமக்கு உணர்த்தி இருப்பார்கள். ஆனால் அதையே பூமி சூடாச்சு என்று அவர் விளக்கி இருக்கும் விதம் ஒரு பாமர மனிதனுக்கும் புரியும் படி இருக்கும். பூமிக்கு மேலே பசுமைக்குடில் வாயுமண்டலம் உள்ளது. கரியமில வாயு தான் அந்த பசுமைக் குடில் வாயு. அதாவது கார்பன் டை ஆக்சைடு. இது பூமியை சுற்றி ஒரு போர்வை போல படிந்து இருக்கிறது. அதனால்தான் பூமியில் வெப்பமானது சீராக உள்ளது இல்லையெனில் சூரியனிலிருந்து ஒரு வெப்பமானது பூமியில் பட்டு பிரதிபலித்து நேராக மேலே பூமியை விட்டு வெகு தூரத்தில் சென்று விடும். அப்படி ஆகும் பட்சத்தில் பூமி ஆனது வெப்பமின்றி உறைந்து விடும். அதை தடுக்க தான் ஒரு குளிரை கட்டுப்படுத்தும் போர்வை போல பசுமை குடில் வாயு படர்ந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் வாகனப் பெருக்கம் தொழிற்சாலைகள், மரங்களை அழித்தல், மலைகளை அழித்தல் மூலம் பூமியில் கார்பன்-டை-ஆக்சைடு மிக அதிகமாகி பூமி வெப்பம் அதிகமாகின்றது. அதாவது குளிருக்கு ஒரு போர்வை போர்த்தலாம். மூன்று நான்கு போர்வைகளைப் போர்த்தினால் நம் உடம்பு வேர்ப்பது போல பூமிக்கு இப்ப வேர்க்குது. இதைத்தான் நம்மாழ்வார் மிக எளிதாக பூமி சூடாச்சு என்று அழகாக விளக்குகிறார்.

மிகவும் கடினமான வாழ்வை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு எளிமையாக்கி உள்ளார். இன்னும் வியப்பாக உள்ளது.
“எங்கு சோளம் விளைந்ததோ,
எங்கு கம்பு விளைந்ததோ,
எங்கு வரகு விளைந்ததோ,
எங்கு கேழ்வரகு விளைந்ததோ,
எங்கு குதிரைவாலி விளைந்ததோ,
எங்கு சாமை விளைந்ததோ,
எங்கு தினை விளைந்ததோ,
எங்கு காடைக்கன்னி விளைந்ததோ, எங்கு தட்டைப்பயறு விளைந்ததோ,
எங்கு கொள்ளு விளைந்ததோ,
எங்கு எள்ளு விளைந்ததோ,
எங்கு உளுந்து விளைந்ததோ,
எங்கு பயிர்கள் விளைந்ததோ
அந்த நிலம் தான் இன்று தரிசாகக் கிடக்கிறது.
இதற்கு காரணம் அரசாங்கம் தான்!
ஏனென்றால், அரசு திட்டம் போட்டுச் சொல்லியது, “அரிசிதான் தின்ன வேண்டும். கோதுமை தான் தின்ன வேண்டும். வேறொன்றும் தின்னக் கூடாது” என்று.
அதன் விளைவு தான் இங்கு நிகழ்ந்த விபரீதங்கள் அத்தனையும்.
ஒன்று, இந்த அரசாங்கத்தை மாற்றி யோசிக்க வைக்க வேண்டும்.
இல்லையென்றால், நாம் வேறு மாதிரி யோசிக்க வேண்டும். ஒருவேளை, இந்த இரண்டுமே சேர்ந்துவிட்டால் ‘வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்!’”
இதனால் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அவரை அழைப்பது மிகையாகாது. இன்று சுற்றுப்புற சூழல் மீது நாம் காட்டும் ,ஆர்வம் சிறுதானிய உணவுகளின் பெருக்கம், இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம், மண்ணை மலடாக்கும் திட்டங்களை எதிர்த்தும், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் திட்டங்களை எதிர்த்தும் இன்று எண்ணற்றோர் போராட முன்வந்துள்ளனர் என்றால் அதற்கெல்லாம் விதை போட்டது அவர்களுக்குள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது நம்மாழ்வார்தான் என்று சொல்லலாம்.
அவர் எதையும் வெறும் பேச்சோடு நிறுத்தியதில்லை. செயலில் செய்து காட்டிய ஒரு செயல் வீரர். பல போராட்டங்களில் கலந்து கொண்டு பலருக்கு முன்மாதிரியாக விளங்கினார் இயற்கை விவசாயம் என்றால் அதை அவரே செய்து காட்டி அதுல வெற்றியும் பெற்றார். செயற்கை உரங்கள் மூலம் தான் விளைச்சலைப் பெருக்க முடியும் என்பதை பொய்யாக்கினார். இப்படி நம் தமிழ் மண்ணுக்கான அவருடைய பங்களிப்பு என்பது அளவிட முடியாது.
இன்னும் சில காலம் நமக்காக அவர் இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் இன்னும் மறையவில்லை!
இருந்தாலும் அவரது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பின்பற்றும் எண்ணற்ற நம்மாழ்வார்கள் பெருகிக் கொண்டே வருகின்றனர் என்பதே அவரின் வெற்றியை சொல்கிறது. இன்று தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு போனாலும் அங்கே நம்மாழ்வார் படம் போட்டு ஒரு சிறுதானிய உணவகங்களை பார்க்க முடிகிறது. கார்ப்பரேட் அரசியலை கதிகலங்க வைத்தவர் அவர். அவர் சொன்ன கருத்துக்களை நம் வாழ்வியலோடு பின்பற்றுவது ஒன்றே உணவே நஞ்சாகிப் போன இந்த காலகட்டத்தில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு விமோசனம் ஆகும்.

ஐயா நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி 30.12.2022.
நம்மாழ்வார் ஐயா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அவரது ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலியில் மன்னார்குடி மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் இன்று உழவன் அங்காடியில் கடைபிடிக்க பட்டது.

ஐயாவின் உடல் மட்டும் தான் நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளது. சிந்தனை, செயல் வழியாக நம்முடன் தான் பயணிக்கிறார்.
நம்மாழ்வார் அவர்கள் சிந்தனை மூலம் என்றும் நம்மை ஆழ்வார்!!!

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply