Home>>திரை விமர்சனம்>>காந்தாரா விமர்சனம்

இந்திய அளவில் கன்னட சினிமாக்களுக்கு என்றுமே பெரிய அங்கீகாரம் இருந்ததில்லை. அந்த அளவுக்கு தான் அவர்கள் படங்களின் தரங்களும் இருந்தன பெரும்பாலும் வேறு மொழியில் பெரிய வெற்றி பெற்ற படங்களை தழுவியே அவர்கள் படம் எடுத்தார்கள். அதை முதன்முதலாக உடைத்து ஒரு கன்னட படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த படம் கேஜிஎப். கே ஜி எஃப் 1 தான் முதன்முதலாக உலக அளவில் 100 கோடி வசூல் செய்த கன்னட படம். பின் கே ஜி எஃப் 2 உலக அளவில் ஆயிரம் கோடி வசூல் செய்தது இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் செய்யாத சாதனை இது.
அதைத்தொடர்ந்து ஜேம்ஸ் ,777 சார்லி, விக்ராந்த் ரோனா போன்ற படங்கள் உலக அளவில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கன்னட சினிமாவுக்கான பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா என்ற படம் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் கன்னடத்தில் மட்டுமே பெரும் வெற்றி பெற்ற அந்த படம் தற்போது டப் செய்யப்பட்டு பல இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 15ஆம் தேதி தமிழில் வெளியாகியுள்ளது.

வெறும் 16 கோடி பொருட்செலவில் உருவான இந்த படம் உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு மாபெரும் வெற்றியைப்பெறும் அளவுக்கு அப்படி என்ன உலகத்தரம் வாய்ந்த படமா இது என நமக்குத்தோணலாம்.

உலகத்தரம் என்பது உள்ளூர் வாழ்வியலை உள்ளது உள்ளபடியே சிறப்பாக காட்டுவதுதான். அந்த வகையில் கர்நாடகாவில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அவர்கள் வழிபாட்டு முறையும் தத்ரூபமாக காட்டியுள்ளது இந்த காந்தாரா என்ற மாய வனம்.
நிம்மதி இல்லாத ஒரு ராஜா அந்த நிம்மதி பெறுவதற்காக தன் நிலங்களை கொடுத்து பழங்குடி மக்களின் தெய்வத்தை விலைக்கு வாங்குகிறார். அவருக்கு அந்த நிம்மதி கிடைக்கிறது ஆனால் அவர் பின்னால் வந்த சந்ததிகள் தங்கள் முன்னோர்கள் தானமாக கொடுத்த நிலங்களை பெற்றே ஆக வேண்டும் நோக்கில் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நிலம் கிடைத்ததா?? அல்லது அவர்கள் நிம்மதி தொலைந்ததா??என்பதே படத்தின் மையக்கரு.
தசாவதாரம் படத்தின் இறுதியில் கமல் சொல்வார் கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன். இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன்ன்னு.இந்த வார்த்தையை கமல் கிட்ட சொன்னவர் தொ.பரமசிவன் அவர்கள்.
அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற புத்தகம் மக்களின் தெய்வங்கள். மக்களின் வாழ்வியலோடு கலந்த குல தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், நடுகல் வழிபாடு போன்றவற்றை பற்றி விரிவாக அலசும் புத்தகம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அவர்களுக்கென்று பிரத்தியேகமான சில தெய்வ நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் உள்ளன.
அந்த நம்பிக்கை தான் அவர்களை நேர்வழிப்படுத்துகின்றன.அந்த தெய்வ நம்பிக்கை தான் ஒரே நேரத்தில் அநீதி இழைக்கும் மனிதர்களுக்கு பயமும் அவர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள பாமர மக்களுக்கு உத்வேகமும் அளிக்கிறது.

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் இந்த பழமொழி உண்மையா பொய்யோ அந்த நம்பிக்கை ஒன்றே மனிதர்களை சமநிலைப்படுத்துகிறது.
இதை ஒட்டியே சிவன் சொத்து குலநாசம்ன்னு ஏன் சொல்கிறார்கள் என்பதற்கான காரணமும் நமக்கு விளங்கும்.
அநீதி இழைப்பவர்களுக்கு எதைக் கண்டும் பயமில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள். இவ்ளோ ஏன் வெங்கடாஜலபதி போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கடவுள்களையும், சாய்பாபா போன்ற கார்ப்பரேட் சாமிகளையும் கூட நல்ல விலைக்கு வாங்கி விடுவார்கள். அதாவது உண்டியலில் காசை போட்டு தங்கள் பாவங்களை கழுவிக் கொள்கிறார்கள். வருடா வருடம் பாவக் கணக்குகளை தீர்த்துக் கொள்கிறார்களே தவிர திருந்துவதாக இல்லை.
அவர்களுக்கான ஒரே பயம் தெய்வ பயம்,.ஆம் நாட்டார் தெய்வங்கள் மற்றும் குல தெய்வங்கள் தான்.
நாட்டார் தெய்வங்கள் வெறும் கற்சிலையும் அல்ல.வெறும் பொம்மைகளும் அல்ல. கார்ப்பரேட் கடவுள்கள் போல பணக்காரர்களுக்கு சாதகமான கடவுளும் அல்ல. என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு உண்டியலில் காசு போட்டால் உங்களை மன்னிக்கும் அளவுக்கு பெருந்தன்மையான கடவுளும் அல்ல.

அவைகளுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். எளிய மக்களுக்கான நீதி மட்டுமே. அந்த நீதி தவறும்போது அந்த தெய்வம் உங்களை நிச்சயம் தண்டிக்கும். அதனால்தான் அவற்றை மக்களின் தெய்வங்கள் என்று தொ.பரமசிவம் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இந்த கருத்தை முன்வைத்துதான் இந்த காந்தாரா படம்எடுக்கப்பட்டுள்ளது.
பலவீனமான திரைக்கதை, பல லாஜிக் ஓட்டைகள் இவற்றையெல்லாம் மீறி இந்த படம் இன்று இந்தியா முழுவதும் வசூலில் சக்கை போடு போடுகிறது.

அதற்கு காரணம் ஒண்ணே ஒன்னு தான். எளிய மக்களின் தெய்வ நம்பிக்கையை அவர்களது வழிபாட்டை உள்ளது உள்ளபடி யதார்த்தமாக எடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் தெய்வ நம்பிக்கை என்பது மாறுபடும். நம் பகுதியில் ஒருவர் உடம்பில் சாமி வந்து அருள் வாக்கு சொல்லும் பழக்கம் காலங்காலமாக உண்டு.
அவை உண்மையா பொய்யா என்பதை விட அந்த அருள்வாக்கு தவறு செய்பவர்களுக்கு பயத்தையும், பாமர மக்களுக்கு நிம்மதியும் ,மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என்பதுதான் உண்மை.

அதேபோல கர்நாடகாவில் உள்ள ஒரு பழங்குடி மக்களுக்கான நம்பிக்கை இந்த பூத கோலா ஆட்டம். பரம்பரை பரம்பரையாக அதற்கென்று உள்ளவர்கள் அவர்கள் தெய்வ வேடத்தை அணிந்து கொண்டு மக்களுக்கு குறி சொல்கிறார்கள். எளிய மக்களின் நன்மையை கருதி தெய்வம் குறி சொல்கிறது. உண்மையிலேயே தெய்வம் சொல்லுகிறதா இல்ல அந்த மனிதன் தான் சொல்கிறாரா என்பதை நமக்கே புரியாத புதிராக அமைத்துள்ளதுதான் இந்த படத்தின் சிறப்பு.

உண்மைய சொல்ல வேண்டுமென்றால் இந்த அளவுக்கு எந்த ஒரு படத்திலும் இவ்வளவு சிறப்பாக இந்த விடயத்தை முன்வைத்து படமாக எடுத்ததே இல்லை எனலாம். முன்பு தமிழில் ஒரு படம் வந்தது “சின்னத்தாய்” அதில் கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மலை சாமியை பற்றி ஓரளவுக்கு எடுத்து இருப்பார்கள். ஆனால் இந்த காந்தாராவில் நம் உடல் மெய் சிலிர்க்கும் அளவுக்கு அசாதாரணமாக எடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக முதல் பத்து நிமிடம் மற்றும் கடைசி 15 நிமிடம் இந்த படம் ரொம்பவே அசாதாரணமாக உள்ளது.

இதுவரை காணாத புது திரை அனுபவமாக உள்ளது. படத்தை இயக்கி நடித்த ரிசப் ஷெட்டி கிளைமாக்ஸ்ல மிரட்டி இருக்கிறார். பிதாமகன் பட கிளைமாக்ஸ்க்கு பிறகு அப்படி ஒரு வெறித்தனமான நடிப்பு. பின்னி எடுத்திருக்கிறார். வெறியாட்டம் ஆடிருக்காரு.
பூதக்கோல ஆட்டத்தில் சாமி ஆடும் பொழுது அடிக்கடி சத்தமிடும் ஓ ஓ ஓ என்ற அந்த மரண ஓலம் நம்மை குலை நடுங்க வைக்கிறது.

இந்த ஒரு விடயத்திற்காகவே இந்த படத்தை தாராளமாக காணலாம்.

உண்மையிலேயே இந்த படத்தை பார்த்தவங்களுக்கு அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தா கூட கடவுள் இருந்தா நல்லாதான் இருக்கும்ன்னு தோணும் எண்ணத்தை இந்த படம் உருவாக்கி விடுகிறது.அதுதான் இந்த படத்தின் மாபெரும் வெற்றி.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply