Paltu janvar(வீட்டு விலங்கு).மலையாளம்.
பகத் பாசில் தயாரிப்பு என்ற உடனே இந்த படத்தின் மீது ஒரு ஆர்வம் வந்தது. அந்த அளவுக்கு சினிமாவை நேசிப்பவர் அவர். அவர் தேர்வு செய்யும் ஒவ்வொரு படமும் தரமாகத்தான் இருக்கும்.அந்த வகையில் வினய் தாமஸ் ,அனீஸ் அஞ்சலி எழுத்தில் சங்கீத் பி.ராஜன் இயக்கத்தில் கடந்த ஓணம் விடுமுறையில் திரையரங்களில் வந்து வெற்றி பெற்ற படம் தான் paltu janwar.
தற்போது hot star ott தளத்தில் வந்துள்ளது.
வீட்டு விலங்காக இருந்த போதிலும் ஒரு மாட்டுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உன்னதமான உறவை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த படம்.
விருப்பமே இல்லாமல் கால்நடைகள் அதிகம் உள்ள ஒரு கிராமத்தின் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு அதிகாரியாக(livestock’s officer) படத்தின் கதாநாயகன் சேர்கிறார். தனக்கு மிகவும் பிடித்த அனிமேஷன் துறையில் தொழில் செய்து நட்டமடைந்து பின் அந்த நட்டத்தை சரி கட்ட தன் அப்பாவின் இறப்பால் நல்வாய்ப்பாக இந்த வேலை கிடைக்கிறது. ஆனாலும் அந்த வேலையும் மற்றும் அந்த சூழலும் அவருக்கு பிடிக்கவில்லை. கால்நடை மருத்துவரின் கெடுபிடி, அதன் பின்னே உள்ள அரசியல் இதனால் அவர் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். அதனால் வேலையை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இருந்தும் ஏதோ கடமைக்கு வேலை செய்கிறார்.இந்த நிலையில் அந்த கிராமத்தில் மாடு வளர்க்கும் டேவிஸ் என்பவர் மாட்டு தொழுவம் கட்ட வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க அது அவருக்கு கிடைக்காமலே போகிறது. அந்தப் பழியும் இவர் மீது அநியாயமாக விழுகிறது. அதே நேரத்தில் தேனீ கடித்து மருத்துவதற்காக வந்த ஒரு காவல்துறை நாயும் இவரது வைத்தியத்தால் உயிரிழந்து விடுகிறது. அந்த நேரத்தில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தினால் வேறு வழியேயின்றி அவர் அறிவுரையின் பெயரில் செயல்பட்டு வைத்தியம் பார்க்கப் போய் நாய் இறப்பிற்கு காரணமாகிறார். அதனால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நிலையில் டேவிஸ்ன் மாடு உடல்நிலை சரியில்லாமல் ஒரு மலை உச்சியில் விழுந்து கிடக்கிறது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் யாரும் இல்லாத காரணத்தினால் டேவிஸ் வலுக்கட்டாயமாக இவர் உதவியைத் தேடிச்செல்கிறார். பின் என்ன ஆனது என்பதை ஆச்சரியப்படும் வகையில் படம் எடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக மலையாள படங்களை பார்க்கும் பொழுது லொகேஷன் என்னும் இடம் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். இது நான் எப்போதும் மலையாள படங்களை பார்த்து வியந்ததுண்டு. இந்தப் படத்திலும் லொகேஷன் என்பது மிக மிக இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக கால்நடை மருத்துவமனை ,அதிகாரிகள் தங்குமிடம், ஊர் மக்கள் வசிக்கும் வீடுகள், மாட்டுக் கொட்டகை, அந்த மாடானது விழுந்து கிடக்கும் இடம் அங்கே மக்கள் செல்லும் பாதை என படம் பார்க்கும் நம்மை அந்த மக்களின் வாழ்வியலோடு உண்மையாகவே கலக்க வைக்கிறது.
அதேபோல படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு இயல்பாக உள்ளது. கால்நடை மருத்துவர் ,பாதிரியார் ,வார்டு உறுப்பினர், சாராயம் காய்ச்சுபவர், மாடு வளர்ப்பவர், தொலைபேசியில் மூலம் மட்டுமே உதவி செய்யும் அந்த பெண் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதை விட்டு அகலாமல் மனதுக்கு மிக நெருக்கமாக உள்ளன.
அதேபோல படத்தின் மையக்கருவான மாட்டுக்கும் மனிதருக்கும் உள்ள உறவு, சமீபத்தில் கி ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபாலபுரத்து மக்கள் நாவலை படித்த பொழுது அதில் மாடுகளைப் பற்றி அவ்வளவு விரிவாக எழுதி இருப்பார் கோவில் மாடு எப்படி உருவாகிறது, மாடு வளர்ப்பது எப்படி, மாடு பிடிப்பது எப்படி, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது எப்படின்னு மாடுகளைப் பற்றி மிக அழகாக விவரித்துயிருப்பார்.
இந்தப் படத்திலும் மாடு பிரசவிப்பதை துல்லியமாக காட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கே வியப்பாக இருக்கிறது . வேறு எந்த படத்திலும் நான் இவ்வளவு துல்லியமாக பார்த்ததில்லை. ஒரே நேரத்தில் டேவிஸ்ன் மகளும் அவர் வளர்க்கும் மாடும் கர்ப்பமாக இருப்பதும் இரண்டு பேரையும் அவர் ஒன்றாக கருதுவதும் நெகிழ்வான தருணங்கள். மாட்டிற்கு என்ன பிரச்சனை என்றே தெரியாமல் அவர் தவிக்கும் தவிப்பு இறுதியில் மாடு பிழைத்துக் கொண்ட போதும், கிடாரிக்கன்று பிரசவிக்கும் போதும் அவர் அடையும் அந்த அளவில்லா மகிழ்ச்சியை நாமும் அடைய முடிகிறது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி.
எப்படி தான் மலையாள திரை யுலகம் இப்படி தொடர்ந்து மகா அற்புதமான படங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கதையே இல்லை ,என்ன கதையை படமாய் எடுப்பது என்று இங்கே நாம் பிதற்றிக் கொண்டிருக்கும் வேளையில் கதை வேறு எங்கும் இல்லை. அது நம்மிடையேதான் இருக்கிறது. அது நம் வாழ்வியலோடு கலந்துயிருக் கிறது. கொஞ்சம் நம் சமூகத்தை ஊன்றி கவனித்தால் போதும் என மீண்டும் மீண்டும் மலையாளத் திரையுலகம் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது. இதை சொல்லிச்சொல்லி எனக்கே போரடிச்சுப் போச்சு. அங்கே கதை எழுதுபவரே படத்தை இயக்க வேண்டிய அவசியம் இல்லை, கதை ஒருத்தர் எழுதுகிறார் இயக்கம் வேறொருவர் செய்கிறார். கதை எழுதுவதும் ஒரு படத்தை இயக்குவதும் வெவ்வேறான தனித்திறமைகள் இரண்டு திறமைகளும் ஒருவருக்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை முதலில் அனைத்துத்திரை யுலகமும் உணர வேண்டும். எழுத்தாளர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் அங்கே நல்ல கலை பிறக்காது. கேரளாவில் எழுத்தாளர்கள் கதாநாயகர்கள் போல கொண்டாடப்படுகிறார்கள். அதனால் தான் அங்கே பிறக்கும் கலை அற்புதமாக உள்ளது.
வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. நிச்சயமாக அவர்களை நெகிழ வைக்கும் படம்.அதே நேரத்தில்,
சமீபத்தில் காந்தாரா என்ற ஒரு கன்னட படம் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. இந்த படத்திற்கு பின் கர்நாடகாவில் குலதெய்வ வழிபாடு அதிகமாகி விட்டது என்கிறார்கள். அதேபோல இந்த படம் மாடுகளின் மீது பரிட்சயம் இல்லாதவர்களுக்கு கூட பரிவையும், பாசத்தையும் ஏற்படுத்தும் படி எடுத்திருக்கிறார்கள். .
போற்றுதலுக்குரியப் படம்.🙏🙏
-மன்னை செந்தில் பக்கிரிசாமி