மிஸ்டர்.பீன் மோசடி.பாகிஸ்தானை “பழி தீர்த்த ஜிம்பாப்வே”
உலககோப்பை ஜூரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. 8 வது உலகக்கோப்பை போட்டித்தொடர் மழைகளுக்கு நடுவே நடைபெற்று வருகிறது.
16 அணிகளுடன் தொடங்கிய போட்டிகள் தற்போது 12 அணிகளுடன் நடந்து வருகிறது.
ஒவ்வொரு உலக்கோப்பை போட்டிகளைப்போல,இந்த உலகக்கோப்பையிலும் வழக்கம் போல பல அதிர்ச்சித்தோல்விகள் அரேங்கறிய வண்ணம் உள்ளது.
அதிர்ச்சித்தோல்வி என்றால் அனுபவம் இல்லாத அணிகள் அனுபவம் வாய்ந்த வலுவான நிலையில் இருக்கும் அணிகளை தோற்கடிப்பது.
தகுதிசுற்றுப்போட்டியில் நமீபியா அணி இந்த வருட ஆசியா சாம்பியன் அணியான இலங்கையை அலறவிட்டது.
ஸ்காட்லாந்து & அயர்லாந்து அணிகள் 2 முறை t 20 உலக்கோப்பையை வென்ற அதிரடி சூரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை பெட்டிப்பாம்பாய் அடக்கின.இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமலே சென்று விட்டது. இது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு மட்டுமல்லாமல்,
அதே அயர்லாந்து அணி “நாங்கள்தான் கோப்பையை வெல்லும் அணி” என மார்தட்டிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து கொட்டும் கனமழையின் உதவியுடன் வீழ்த்தியது.
இதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்து இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது என்னவென்றால்,
விராட் கோலியின் மரண அடியில் இருந்து மீளாத முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே பதம் பார்த்ததுதான்.
யாரும் எதிர்பார்க்காத நம்பமுடியாத வெற்றி இது.
இந்த வெற்றியில் பழி வாங்கும் படலம் ஒன்றும் இருக்கிறது. சுவாரசியமான அந்த தகவலை பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பாகிஸ்தானுக்கும் ஜிம்பாப்வேவுக்கும் அப்படி என்ன பழிவாங்கும் படலம்?
பாகிஸ்தான் – இந்தியா என்றால் சரி. ஜிம்பாப்வே கூட பாகிஸ்தானுக்கு என்ன பகை என்று கேட்கும் மக்களுக்கான செய்தி இது.
இப்போட்டிக்காக பயிற்சிகளை துவங்கிய பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்களை அந்நாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதை பார்த்த ஒரு ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர் “ஒருமுறை உலகப் புகழ்பெற்ற மிஸ்டர். பீன் எனப்படும் மிஸ்டர் பீன் ரோவனை காட்டுவதாக எங்களுக்கு சத்தியம் செய்து ஏமாற்றியதை நாங்கள் மறக்க மாட்டோம். அதற்கு நாளைய போட்டியில் பதிலடி கொடுப்போம். வேண்டுமானால் மழை வந்து காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்தது வைரலானது. அவரது கருத்தால் 2016இல் நடந்த பெரிய துரோகமும் அம்பலமாகியது.
2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மிஸ்டர் பீன் எனப்படும் ரோவன் அட்கின்ஷனை அனுப்புவதாக உறுதியளித்த பாகிஸ்தான் அவரைப் போலவே இருக்கும் தங்களது நாட்டைச் சேர்ந்த முகமது ஆசிப் எனப்படும் போலி மிஸ்டர் பீனை அனுப்பியது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ரோவன் அட்கின்ஷன் போலவே இருந்ததால் அவரை உண்மையான மிஸ்டர் பீன் என்று நம்பிய ஜிம்பாப்வே மக்கள் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து கதாநாயகனாக கொண்டாடினார்கள்.
அத்துடன் ஜிம்பாப்வே அரசும் அவருக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்து சாலையில் பவனி வர வைத்து கொண்டாடியதுடன் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிகப்படியான பணத்தையும் கொடுத்தது.
ஆரம்பத்தில் பாகிஸ்தானின் இந்த மோசடி தெரியாத நிலையில் ,நாட்கள் செல்ல செல்ல சமூக வலைதளங்களின் வாயிலாக அவர் உண்மையான மிஸ்டர்.பீன் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஜிம்பாப்வே மக்கள் அப்போது முதலே பாகிஸ்தான் மீது ரொம்ப காட்டத்துடன் இருந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இந்த உண்மையை அம்பலப்படுத்திய நிலையில் அதற்காக மன்னிக்குமாறு சில பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலளித்திருந்தனர்.
இருப்பினும் இந்த விவகாரம் வெகுவாக பரவிய நிலையில் அந்த ரசிகர் சவால் விடுத்தது போலவே இறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஜிம்பாப்வே வெற்றியை பதிவு செய்த போது அந்நாட்டில் இருந்த மக்கள் அதை துள்ளி குதித்துக் கொண்டாடிய காணொலியை அந்நாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது.
மொத்தத்தில் இப்படி ஒரு வேலையை செய்ததற்கு 6 வருடங்கள் கழித்து தோல்வியை பரிசாக பெற்ற பாகிஸ்தானை வீரேந்திர சேவாக் உட்பட முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் கிண்டலடித்து வருகின்றனர்..
கடைசியாக ஜிம்பாப்வே ஜனாதிபதி “தம்புட்ஜோ மனங்கங்வா” தனது ட்விட்டரில் ஜிம்பாப்வே வெற்றியை பாராட்டி அடுத்த முறையாவது உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என்று பாகிஸ்தானை வெளிப்படையாகவே விமர்சித்தார்.
அதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ” உண்மையான MR. Bean எங்களிடம் இல்லை. ஆனால் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் கிரிக்கெட் போட்டியில் உங்களை வீழ்த்துவோம் என்று கூறியுள்ளார்”
இனி எத்தனை முறை ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தான் வீழ்த்தினாலும் முக்கியமான உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வாய்ப்பே பறிபோகும் நிலையில் ஜிம்பாப்வேயிடம் பெற்ற தோல்வி அவர்களை வாழ்நாள் முழுக்க மறக்க வைக்காது எனலாம்.
அதே நேரத்தில் மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் ஜிம்பாப்வே நாடு முதன்முதலாக ஒரு டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் போன்ற பெரிய ஜாம்பவான் அணியை வீழ்த்தியது நிச்சயம் அவர்களுக்கு வரலாற்று சாதனை தான். அந்த அளவுக்கு மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள் . வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடு ஆடியது போல் இருந்தது .
யார் கண்டார் 2003ல் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கென்யா அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது போல , இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு நேரலாம். அதற்காக தற்போதே அவர்களுக்கு நம் வாழ்த்துகளை உலக கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வோம். அதற்கான முழுத் தகுதி அவர்களிடம் இருக்கிறது.
-ஆனந்த் ரெய்னா &
செந்தில் பக்கிரிசாமி