Home>>அரசியல்>>நவம்பர் 1.”தமிழ்நாடு நாள்”
அரசியல்

நவம்பர் 1.”தமிழ்நாடு நாள்”

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ்”
அதாவது கல் என்பது மலையைக் குறிக்கும் குறிஞ்சித்திணை.மண் என்பது முல்லை,மருத நிலத்தை குறிக்கும். எனவே குறிஞ்சித்திணைத் தோன்றி முல்லை மருதம் தோன்றுவதற்கு முன் தமிழ் மொழி தோன்றிவிட்டது என்கிறார்கள்.
தமிழ் மொழியும் தமிழர்களும் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனபோதிலும் , இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா என்ற ஒரு ஒன்றியம் உருவான பிறகு அதில் தமிழர்கள் பெரும்பாலும் வாழக்கூடிய நிலப்பகுதியை தமிழர் நாடு தமிழ்நாடு என நாம் அங்கீகாரம் பெற்றது 1956 ம் ஆண்டு நவம்பர் 1. அன்றுதான். தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று மொழிவாரி மாநிலங்கள் உருவான நாள்.
தமிழ்நாடு மாநிலம் பிரிக்கும் பொழுது வடக்கெல்லை சென்னையும், தெற்கெல்லை கன்னியாகுமரியும் தமிழ்நாட்டோடு இணைக்க அரும்பாடுபட்டனர்.
வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார்.
மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வட எல்லைப் பகுதிக்கு புகை வண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றியதாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை ம.பொ.சி. பெற்றார்.

திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே போல தெற்கு எல்லை கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்தபொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்..
இப்படியாக பல தியாகத்தில் தான் இன்று நாம் இருக்கும் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு உருவாகியுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டம் போல தமிழக எல்லை மீட்பு போராட்டங்களும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் கெடு வாய்ப்பாக அந்த வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. நம் பாட புத்தகங்களில் அவசியம் இடம்பெற வேண்டிய இந்த வரலாறுகள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்ளது.
எனவே தமிழர்களாகிய நாம் அவர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தமிழருக்கென்று ஒரு நிலம் என நமக்கான ஒரு மாநிலம் உருவான இந்த நாளை “தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதில்” பெருமிதம் கொள்வோம்.அதே நேரத்தில் ,
அன்றே
துளு நாட்டை
தமிழர்நாட்டோடு
இணைத்திருந்தால்
இன்று காவிரி நீருக்கு
கையேந்த தேவையில்லை.
தமிழர்களுக்கான தெளிவான
அரசியல் இல்லாததன் விளைவு
நல்ல வாய்ப்பினை தவறவிட்டோம்.
கர்நாடக
எல்லையில்
காவிரி நீர் பிடிப்பு
பகுதிகளை இழந்தோம்…
ஆந்திர
எல்லையில்
கிருஷ்ணா நதியின்
வழித்தடத்தை இழந்தோம்…
கேரள
எல்லையில்
முல்லைப் பெரியாறு
உரிமைகளை இழந்தோம்…
நேற்றைய
அரசியல் சூழலில்
இளந்தலைமுறைக்கு
இந்த வரலாறு தெரியாமல்
மழுங்கடிக்கப்பட்டிருந்தோம் .
தமிழ்நாடு ,தமிழ்நாடு நாள் மூலம் மீண்டெழுகிறோம்…
(தமிழ்நாடு – தமிழ்+நாடு) தமிழை நாடுங்கள், தமிழை நேசியுங்கள், தமிழை விரும்புங்கள் என்பதே இதன் பொருள்.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக 76 நாள் உண்ணாவிரதமிருந்து தன் உயிர்நீத்த ஐயா சங்கரலிங்கனார் அவர்களை இந்நாளில் நினைவுகூருவோம்.
இந்த மண்,
எந்த தொழில்நுட்பமும் இல்லாத அக்காலத்தில் வேகமாக ஓடும் நீரைத் தடுத்து கல்லணைக் கட்டிய கரிகாலன் மண்.

இன்றளவும் உலகமே பிரமமிக்கும் வானளாவிய உயர்ந்து வானை பிளக்கும் சிறப்புமிக்க பெருவுடையார் கோவிலை கட்டிய ராசராசனை ஈன்ற மண்!

கடல் பல கடந்து படை பல கட்டி சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,கம்போடியா போன்ற பல நாடுகளையும்,வடக்கே படையெடுத்து சென்று கங்கையையும் கொண்டுவந்து சோழபுரத்தில் ஆலயம் தந்த கடாரம் கொண்டான் ராசேந்திரன் மண்!

வீரமங்கை வேலுநாச்சியார், மாபெரும் வீர மன்னர்கள் மருது சகோதரர்கள் வாழ்ந்து சிறந்த மண்!
சோழநாடு சோறுடைத்தது எனும் நெற்களஞ்சியம் இந்த மண்ணில் தான்!
அழகுமுத்துக்கோன்,பூலித்தேவன்,வெள்ளையத்தேவன்,தீரன் சின்னமலை,வன்னிக்காலடி,ஒண்டிவீரன் போன்றோர் களமாடிய மண்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக போராடிய அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் மண்!
தன் கவியால்,எழுத்தால் தமிழை மேலும் வளர்த்து என் இனத்துக்கு சுதந்திர போராட்டத்தை ஊட்டிய பைந்தமிழ் புலவன் பாரதியையும், பாரதிதாசனையும் ஈன்ற மண்!
தமிழ்நூல்களை திரட்டி தமிழுக்குபெருங்கொடை தந்த உவேசாமிநாத ஐயர் மண்.
வெள்ளையரை எதிர்த்து சுதேசி இயக்கத்தை தொடங்கி கப்பலோட்டியத் தமிழன் செக்கிலுத்த செம்மல் வ.ஊ.சி மண்!
பல ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்விக்கண் கொடுத்த படிக்காத மேதை காமராசர் பிறந்த மண்!
தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள் என்ற எங்க ஐயா.முத்துராமலிங்கதேவரின் மண்!
கக்கன்,சிங்காரவேலர் மற்றும் ஜீவானந்தம் போன்ற எண்ணற்ற ஆகச்சிறந்த தலைவர்கள் வாழ்ந்த மண்!

இப்படி சொல்லிலடங்கா எண்ணற்ற சிறப்புகளையும்,கட்டிடக்கலைகளையும், புலவர்களையும்,வீரதீர மாமன்னர்களையும்,தலைவர்களையும் உரிதாக்கியது நம் தமிழ்நாடு…

உலகில் பல்வேறு நாடுகளில் நம் இனம் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆணிவேர் கிளர்த்தெழுந்தது நம் தமிழ்நாட்டு மண்ணிலிருந்து தானே!
திறவுகோல் வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

Leave a Reply