Home>>இதர>>வாழும்போதே கலைஞனை வாழ்த்தி விடு! போற்றி விடு!
இதரஇலக்கியம்கட்டுரைகள்கனடாமொழி

வாழும்போதே கலைஞனை வாழ்த்தி விடு! போற்றி விடு!

வாழும்போதே கலைஞனை வாழ்த்தி விடு! போற்றி விடு!

கடந்த சனிக்கிழமை மாலை கனடா மொன்றியல் திரு முருகன் கோவிலில் மதிப்பிற்குரிய “வீணை மைந்தன்” என்கிற ஐயா திரு கே.ரி சண்முகராஜா அவர்களின் பவள விழா நடைபெற்றது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்திருந்தாலும் இதுபோல ஒரு தரமான இலக்கிய நிகழ்வு மொன்றியலில் நடைபெறுவது மிகவும் பாராட்டுதற்குரியது.

பவள விழா நாயகன் மதிப்பிற்குரிய ஐயா வீணை மைந்தன் அவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் எழுத்தாளர், பேச்சாளர், விமர்சகர், ஊடகவியலாளர், நாடக வியலாளர், எளிமையான அன்புக்குரியவர் இப்படி எத்தனையோ விடயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு பெரிய ஆளுமை குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிக்காமல் குடத்திலிட்ட விளக்கு போல இத்தனை நாளும் இருந்தது அவருடைய தன்னடக்கத்தை என்றி வேறு எதுவும் பறைசாற்ற வில்லை.

கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து எழுத்து, பேச்சு, இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்களை ஒன்றிணைப்பது போன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது எவ்வளவு சவாலான விடயம் என்பது அதில் இருப்பவர்களுக்கு தெரியும், இத்தகைய ஒரு சவாலான விடயத்தை அன்றிலிருந்து இன்றுவரை கடந்த 40 ஆண்டுகளாக பாராட்டும் வகையில் தொடர்ந்து செய்து வருபவர் தான் வீணை மைந்தன் ஐயா.

சாதாரணமாக கூட்டத்தில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு ஒரு பெரிய ஆளுமையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டாலே அதை எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இலங்கை தொடங்கி இந்தியா ,பாரிஸ் ,லண்டன், பிரான்ஸ்,மலேசியா இன்று உலக வரைபடத்தில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள அத்தனை பெரிய ஆளுமைகளின் வாழ்த்துக்களை பெற்ற இம் மாமனிதர் இவ்வளவு அடக்கத்தோடு இருப்பது நாம் அவரிடம் இருந்து சுவீகரித்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பண்பு.

நமது எல்லோரின் அன்புக்குரிய கனடா நாட்டின் பிரதமர் அவருடைய கைப்பட எழுதிய வாழ்த்து மடல் கூட இவருக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்திருக்கிறது. அது நம் சமூகத்திற்கு கிடைத்த பெருமை.

இந்திய இலக்கிய பகுதிகளில் பெருமையாக கொண்டாடப்படும் வைரமுத்து அவர்களோடு பயணித்திருக்கிறார்.பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார். சிவாஜி வீட்டில் உணவருந்தி இருக்கிறார். சிவாஜிக்கு இவர் எழுதிய வாழ்த்துப்பா சிவாஜியின் வீட்டில் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.கலைஞர் கருணாநிதியின் வாழ்த்தை பெற்றவர்.

இத்தனை பெரிய ஆளுமையை கொண்டாட வேண்டும். அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இந்த “வீணை மைந்தன் 75” என வரலாற்றில் மிகப்பெரிய ஒரு பெருமையை சேர்த்திருக்கிறார்கள் இதனை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினர்.

“தொலைந்துபோன வசந்தங்கள்” என்று முதல் பகுதியையும் “வாழ்த்தும் வணக்கமும்” என்ற இரண்டாம் பகுதியும் “கவியின் காதல்” என்று ஆறு நாடகங்களை கொண்ட மூன்றாவது பகுதியையும் கொண்ட முத்தமிழ் நூலை வெளியிட்டு புலப்பெயர் தேசத்தில் தமிழுக்கு முத்தாரம் சூட்டியுள்ளார்.

” கனடா கலாச்சார சங்கம்”,கனடாவில் தமிழ் உணர்வுடன் முதன்முதலாக வெளியிடப்பட்ட “வீணைக்கொடி”என்ற இதழ் ,”கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்”போன்ற பல்வேறு ஆக்கமான அமைப்புகளையும் , முயற்சிகளையும் தொடங்கி வைத்த பெருமை இவரையே சேரும்.

இவரைப் பற்றி இப்படி எண்ணற்ற பிரமிக்கத்தக்க விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய 40 வருடகால பிரமிக்கத்தக்க இலக்கிய பணிகளை தெரிந்துகொள்ள இவருடைய “வீணை மைந்தன் 75” என்ற பவள விழா மலரை வாசியுங்கள்.

கலைஞனின் பார்வை எப்போதும் அசாத்தியமானது. அது கண்ணெதிரில் நடக்கும் நிகழ்வுகளை ஊடறுத்து உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து அதை தனது கலையின் மூலமாகவே வெளிப்படுத்துவதாக இருக்கும். அத்தகைய 75 வயது இளைஞரான வீணை மைந்தன் ஐயா அடுத்த தலைமுறைக்காக தன் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் பெற்ற தனது அனுபவங்களையும் நிச்சயமாக ஆழமாக பதிய வேண்டும் என்றும் இத்தருணத்தில் தாழ்மையோடு கேட்டுக் கொண்டு வாழ்க நின் புகழ்! வாழ்க தமிழ்மகனே! என வாழ்த்தி வணங்குவோம்!

இளவரசி இளங்கோவன்
மொன்றியல் , கனடா

Leave a Reply