Home>>திரை விமர்சனம்>>Chup -(இந்தி) -திரைப்பட விமர்சனம்
திரை விமர்சனம்

Chup -(இந்தி) -திரைப்பட விமர்சனம்

“Chup” (இந்தி)

உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த இந்தித் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர் குரு தத் அவர்கள்.இந்தி சினிமாவின் மாமேதை எனலாம்.
1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து ‘ஜால்’ படம் வெளிவந்தது. இவரது இயக்கத்தில் அடுத்து வெளிவந்த ‘பாஸ் (Bass)’ படத்தில் நடிகனாக அறிமுகமானார். இவரது ‘ஆர்-பார்’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்தும், இயக்கியும் நடித்தும் புகழ்பெற்றார்.
ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். 1957-ல் வெளிவந்து அபார வெற்றி பெற்ற ‘ப்யாஸா’ இவரது மாஸ்டர்பீஸ் என்று புகழப்பட்டது. இவரது திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 50-க்கும் குறைவான திரைப்படங்களையே தயாரித்தாலும் இவை பாலிவுட்டின் பொற்காலத் திரைப்படங்களாகக் கருதப்படுகின்றன.
இதில் இவர் இயக்கிய 1959 ல் வந்த kaagaz ke pool (காகிதப்பூக்கள்)என்ற படத்தை தனிப்பட்ட முறையில் இவரின் ஆக்சிறந்த படமாக கருதினார்.அப்படி ஒரு கனவுகளோடு அந்த படத்தை எடுத்தார்.ஆனால் அந்த படத்தை பாலிவுட் விமர்சகர்கள் கடித்துக் குதறி எடுத்தார்கள். காலத்தை மீறிய சிந்தனையோடு எடுக்கப்பட்ட அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இது குரு தத் அவர்களை மனதளவில் பெருமளவு பாதித்தது. அதன்பின் அவர் படம் இயக்குவதையே நிறுத்திவிட்டார். வசூல் ரீதியாக அந்தப் படம் தந்த தோல்வியை விட விமர்சன ரீதியான தோல்வி அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.அதீத மன உளைச்சல் காரணமாக காகிதப்பூக்கள் படம் வெளியான ஐந்தாவது வருடத்தில் ஆல்கஹாலில் தூக்க மாத்திரை கலந்து தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு கலைஞன், அநியாயமாக தன் 39ம் வயதிலேயே தன்னை மாய்த்துக் கொண்டார்.
ஆனால் அவரின் அந்த அற்புதமான முயற்சிக்கு காலம் பதில் சொல்லியது. 1980களில் அவரின் “காகஸ் கே பூல்” படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இன்று வரை இந்தி சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் டைம் நாளிதழ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இதழ்கள் தனித்தனியே,
1923 முதல் 2005 வரை வெளியிட்ட உலகின் தலை சிறந்த 100 படங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்றே படங்கள் அதில் இடம் பெற்றன.இவரது ‘ப்யாஸா’ மற்றும் ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படங்கள் மற்றும் தமிழில் நாயகன்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த kaagaz ke pool படம் அதற்குரிய சரியான அங்கீகாரத்தை பிற்பாடு அடைந்தது.

2012 ம் ஆண்டு CNN வெளியிட்ட ஆசியாவின் தலை சிறந்த 25 நடிகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார். அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் ஒரே நேரத்தில் தலைசிறந்த நடிகராகவும் , இயக்குனராகவும் விளங்கிய முதல் கலைஞன் அவர்தான்.
இப்படிப்பட்ட ஒரு மகத்தான கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் இந்த chup படத்தை இயக்குனர் பால்கி அவர்கள் எடுத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டியாக வேண்டும். இந்த படத்தை பார்த்த பிறகு நிச்சயம் குரு தத் என்ற மகா கலைஞனை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.குறிப்பாக திரை ஆர்வலர்கள் அகிரா குரோசேவா ,சத்ய ஜித்ரே போன்றவர்களை எப்படி கொண்டாடுவார்களோ அந்த அளவுக்கு கொண்டாடப்பட வேண்டியவர் “குரு தத்”
இப்போது படத்தின் விமர்சனத்திற்கு செல்லலாம்.
குரு தத் அவர்களை தன் ஆதர்சன நாயகனாக கொண்ட அவரின் தீவிர ரசிகர் ஒருவன் சினிமா மீது ஆர்வம் கொண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையின் அகோரங்களை,துன்பங்களை அடிப்படையாக வைத்து குருதத் படம் போலவே ஒரு சிறப்பான தரமான படத்தை கொடுக்கிறார்.அந்த படத்தின் பெயர் “chup” (shut up).
ஆனால் அந்த படத்தை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் பாலிவுட் திரை விமர்சகர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். இதனால் படம் தோல்வி அடைகிறது. அதன் பின் அவர் மனநலம் பாதிக்கப்படுகிறார். அவர் யாரைப் பார்த்து சினிமா எடுக்க விரும்பினாரோ அவரைப் போலவே தன் வாழ்க்கை அமைந்து விட்டதை உணர்கிறார். அதன்பின் அவர் தன் ஆதர்சன நாயகன் குருதத் போலவே தன் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் அதைவிட விபரீதமான ஒரு முடிவை எடுக்கிறார். நல்ல படத்தை தவறாக விமர்சனம் செய்பவர்களை கொடூரமாக கொலை செய்கிறார். அவர்கள் எப்படி எல்லாம் அந்த விமர்சனத்தை எழுதுகிறார்களோ அதே பாணியில் அவர்களை ரசித்துக் கொல்கிறார். உதாரணமாக இந்த படம் தயவு தாட்சயன்யம் இல்லாமல் பல இடங்களில் தாறுமாறாக வெட்டித் தள்ள வேண்டும் என்று ஒருவர் விமர்சனத்தை படித்துவிட்டு அதை எழுதியவரை அதே போல தாறுமாறாக வெட்டிக் கொல்கிறார். இதற்கிடையில் ஒரு மோசமான படத்தை நல்லா இருக்குன்னு எழுதியவரையும் போட்டுத்தள்ளுகிறார். யார் கொலைகாரன் என்பது புரியாமல் மண்டை குழம்பி நிற்கும் காவல்துறை, இவரை பிடிக்க ஒரு பொறியை வைக்கின்றனர். அந்தப் பொறி இவருடைய காதலி. சினிமா மீது அதிக காதல் கொண்ட கொலைகாரனின் காதலியை வேண்டுமென்றே ஒரு நல்ல படத்துக்கு தவறான விமர்சனம் எழுத வைக்கிறார்கள். அதன் பின் என்ன ஆனது காதலியை விட்டு வைத்தாரா ??இல்லை மன்னித்து விட்டாரா?
அதே நேரத்தில் அவர் எடுத்த அந்த chup என்ற படமானது kaagaz ke pool போல மீண்டும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அவருக்கு அங்கீகாரம் கிடைத்ததா??என்பதையெல்லாம் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.
படம் என்னமோ ஒரு வழக்கமான கிரைம் திரில்லர் படம் தான்.ஆனால் குற்றம் நடக்கும் களம் ரொம்பவே புதுசு நம்ம ஊர் ப்ளூ சட்டை மாறன் மாதிரி பாலிவுட்டில் யாரோ பச்சை சட்டை இருக்கார் போல. அந்தக் கோபத்தில் எடுக்கப்பட்ட படம் போலத்தான் இருக்கிறது.
இருந்தாலும் இதில் குருதத் அவர்கள் வாழ்க்கையை இணைத்தது ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது. அதேபோல படத்தின் பின்னணிசையில் குருதத் படங்களின் பாடல்களை இழைய விட்டது ரொம்பவே மனதுக்கு இதமாயிருக்கு. குறிப்பாக கதாநாயகன் தன் காதலியை சந்திக்கும் முதல் காட்சியில் பின்ணனியில் இசைக்கப்படும் பியாசா படத்தில் வரும் ஜானே கியா துனே ககி என்ற பாடல். அந்த பாடலுக்கு ஏற்கனவே நான் ரொம்ப ரசிகன். ரொம்ப அழகான பாடல். இதில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல குருதத் பிறந்த நாளும் தன் காதலின் பிறந்த நாளும் ஒரே நாளில் வருகிறது. காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு பூங்கொத்தை காதலிக்கு பரிசாக வழங்குகிறார். Kaagaaz ke pool ( காகித ப்பூக்கள்) படத்தை அங்கே நினைவூட்டுகிறார் பால்கி.
ஒரு சினிமாவுக்குள் சினிமாவை பற்றிய கதை என்பது பல வந்துள்ளன. அவற்றில் இது மிகச் சிறந்த முயற்சி என்று சொல்லலாம். பொதுவாக ஒரு செண்டிமெண்ட் இருக்கும் சினிமாக்குள்ள சினிமா என்பது போல எடுத்தால் அந்த படம் வெற்றி பெறாது என்று. காகஸ் கே பூல் படத்திலிருந்து தான் இந்த செண்டிமெண்ட் ஆரம்பித்தது. அதுவும் அப்படித்தான். சினிமாவுக்குள் சினிமா சம்பந்தப்பட்ட படம். ஆனால் இந்த chup படம் அதை உடைத்து விட்டது எனலாம்.ஆம் இது வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் விமர்சனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்காக நாம் ஒருவரை கொலை செய்வது என்பதும் , விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தம் உயிரை போக்கிக் கொள்வதும் இரண்டுமே தவறான செயல் தான். குரு தத் அவர்கள் அந்த தவறைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்று இந்திய சினிமாவின் தரம் எங்கேயோ சென்று இருக்கும். ஈரானிய ,ஜப்பானிய ,கொரிய படங்களைப்போல இந்திய சினிமாவுக்கும் பல உலக அங்கீகாரங்கள் கிடைத்திருக்கும். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அவர் இழப்பு.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply