Home>>கட்டுரைகள்>>மலரின் விழிகள் – “பூவிழி வாசலிலே 1987”
கட்டுரைகள்கலைதிரை விமர்சனம்திரைத்துறை

மலரின் விழிகள் – “பூவிழி வாசலிலே 1987”

ஒரு முற்பகலில், வீட்டை சோதனையிடும்போது, வீட்டின் முன் மரத்தடியில் மண் இளகியிருக்க, கொலையாளி, பென்னியின் அம்மாவைக் கொன்று அங்கு புதைத்திருப்பானோ என்று சந்தேகம் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு தோண்டச் சொல்கிறார். மண் வெட்டியின் “சக்…சக்” என்ற சத்தம். பின்னணியில் காகம் கரையும் ஒலி. வாசல் படிகளில் உட்கார்ந்து எல்லோரும் தோண்டும் இடத்தை பார்த்தவாறு காத்திருக்கிறார்கள்.
1987-ல், பதினைந்து வயதில், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, பார்த்துக் கொண்டிருந்த ”பூவிழி வாசலிலே” திரைப்படத்தின் ஒரு காட்சி இது. அந்தக் காலத்தில் அது மாதிரியான ஒரு காட்சியைப் பார்க்கும்போது மனதின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று இந்தக் காலத்திய 2000 கிட்ஸ் நண்பர்களுக்கு விவரிப்பது கடினம்.
இந்தக் காட்சி மட்டுமல்ல, வேணு கொலை செய்யப்படும் முதல் காட்சியின் நிதானம், ரகுவரனின் புன்னகை, பாபு ஆண்டனியின் மௌனம், டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் ரஞ்சித்தை பென்னி பார்க்கும்போது பின்னணியில் ஒலிக்கும் ராஜாவின் இசை, வில்லன்கள் வரும்போதெல்லாம் வரும் ராஜாவின் தபேலாவும், வீணை இசையும்…படம், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் பார்த்தபோது எத்தனை புதிதாய் இருந்தது?
ஆனந்த்தையும் (ரகுவரன்), ரஞ்சித்தையும் (பாபு ஆண்டனி), பென்னியையும் (பேபி சுஜிதா), பேபி சுஜிதாவின் கண்களையும், முக வெளிப்பாடுகளையும், படத்தில் ராஜாவின் பின்னணி இசையையும், ஜேசுதாஸின் குரலில் “சின்னச் சின்ன ரோஜாப் பூவே” மற்றும் “ஒரு கிளியின் தனிமையிலே” பாடல்களையும் என்னால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா என்ன?.
***
அப்போது நான் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். விடுதி என்றால் தனித்தனி அறைகள் கொண்ட விடுதி அல்ல. எங்களின் உடைகள் மற்றும் பொருட்கள் வைத்திருந்த ட்ரங்க் பெட்டிகள் ஒரு அறையில் இருக்கும். சாப்பாடு வராண்டாவில் வரிசையாக உட்கார வைத்து பரிமாறப்படும். இரவு, பள்ளிக்குள் மெயின் பிளாக்கில் எங்கு வேண்டுமென்றாலும் தூங்கிக் கொள்ளலாம்.
விடுதியில் இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, டிவியும் டெக்கும் கொண்டு வந்து படம் போடுவார்கள். விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் இருந்த கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மேடையில் டிவியை வைத்து வெட்டவெளியில் உட்கார்ந்துதான் படம் பார்ப்போம். அப்போது அது ஒரு ”திறந்த வெளி திரையரங்கம்”. படம் போடும் நாட்களிலெல்லாம் விடுதி உற்சாகத்தில் தளும்பும். ஒவ்வொரு முறையும் இரண்டு படம். விடுதியின் வார்டன் ராதாகிருஷ்ணன் சார் மீது எனக்கு மிகப் பெரும் மரியாதையும் அன்பும் உண்டு. என் ஆங்கில வாசிப்பையும், எழுத்தையும் மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியவர்.
அன்றும் இரண்டு படங்கள். இரவுணவிற்கு முன்பு, முதல் படம் ஜேம்ஸ் பாண்டின் “The Spy Who Loved Me”. அதன்பின் இரவுணவு பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும். சாப்பிடும்போது, நானும் அருகில் உட்கார்ந்திருந்த நண்பன் பாரதியும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நாயகியைப் பற்றி கிளுகிளுப்பாய் கிசுகிசுத்துக் கொண்டோம். இரவுணவு முடித்தபின் இரண்டாம் படம் “பூவிழி வாசலிலே”.
எனக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தை விட “பூவிழி வாசலிலே”தான் மனதிற்குள் ஒட்டிக்கொண்டது. கூடவே ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை என்னுடன் படித்த ஜீவா எனும் என் நெருங்கிய தோழியின் ஞாபகங்களையும் கிளறிவிட்டது. எட்டாம் வகுப்பு வரை நான் கிராமத்தில் கோ-எட்டில் தான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிற்கு நான் திருமங்கலம் பி.கே.என்னிற்கு வந்தபோது, ஜீவா படிக்க அப்பாவுடன் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
ஜீவா ஒரு சிறந்த ”கதை சொல்லி”. பார்க்கும் படங்களையெல்லாம், ஒரு காட்சி விடாது, கதையை சுவாரஸ்யமாய், அந்த மைக்கண்கள் விரிய, விரல்களின் அபிநயத்தோடு அழகாய் சொல்வதில் கைதேர்ந்தவர். ஒருமுறை, விருதுநகரில் “விதி” படம் பார்த்துவிட்டு வந்து, ஏதோ ஒரு நோட் புக் வாங்க ஜீவா வீட்டிற்குப் போயிருந்த என்னை, ஜீவாவின் அம்மா சாப்பிடச் சொல்ல, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ”விதி” படத்தின் கதையை எதிரில் உட்கார்ந்து சொன்னார். “விதி” போன்ற ஒரு படத்தின் கதையை எனக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என்று இப்போது நினைத்தாலும் புன்னகை எழுகிறது.
“பூவிழி வாசலிலே” படம் பார்த்து முடித்ததும் மனது ஏனோ ஜீவா-வை நினைத்து ஏங்கிக் கொண்டது. ”உன்னோட கூட உட்கார்ந்து பாத்திருந்தா எப்படி இருந்திருக்கும் ஜீவாம்மா?” என்று மனதுக்குள் ஜீவாவிடம் சொல்லிக் கொண்டேன்.
“Poovizhi Vasalile” – “பூவிழி வாசலிலே” (1987 Indian – Tamil)
– வெங்கி
(vengadesh srinivasagam)

Leave a Reply