Home>>அரசியல்>>மலக்குழி மரணங்களின் துயரங்கள் பற்றிய ஒரு “விட்னஸ்”
அரசியல்திரை விமர்சனம்

மலக்குழி மரணங்களின் துயரங்கள் பற்றிய ஒரு “விட்னஸ்”

“விட்னஸ்”

மலக்குழியில் மரணிக்கும் மனிதர்கள்!-

இந்த ஆண்டு தொடக்கத்தில்(ஜனவரி 2022) செழியன் ஜானகிராமன் என்பவர் மலக்குழிக்கில் மரணிக்கும் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுகட்டுரைஎழுதி இருந்தார்.அதன் விவரம்,

சமீபத்தில் ஒரே வாரத்தில் சென்னையை ஒட்டி மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்பொழுது இறந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த மரணங்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை…?

ஜனவரி 15-ல் கதிரவன் ஈஞ்சம்பாக்கத்தில் இறந்துள்ளார். ஜனவரி 19-ல் ராஜேஷ், ஏழுமலை இருவரும் தாம்பரம் வரதராஜபுரத்தில் இறந்துள்ளனர். இந்த மூவருக்கும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 30 சுத்திகரிப்பு தொழிலாளிகள் இதுபோல் இறந்துள்ளனர். ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்பொழுதுதான் இறந்துள்ளனர் என்று இவற்றை எளிதாக கடந்து செல்ல முடியாது. காரணம், கையால் மலக்கழிவு அகற்றும் துப்புரவுத் தொழில் தடைச் சட்டம் 2013 (The Manual Scavenging Prohibition Act 2013) இவர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டம் மனிதர்களை மலக்கழிவு, கழிவு நீர் தொட்டி, பாதாளசாக்கடை போன்றவற்றின் அடைப்பை நீக்கப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப்பயன்படுத்தினால் சட்டப்படி தண்டனை உண்டு என்று கூறுகிறது. ஆனால் இப்படி ஒரு சட்டம் உள்ளது என்று பலருக்கும் தெரியாது. அதை தெரியவைக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அரசு இந்த சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல் இவற்றை நடைமுறை படுத்துவதும் இல்லை என்பதுதான் உண்மை.

இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின், பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இறந்தவர்களின் துணைவியர்கள் பேச முடியாமல், துக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் அமர்ந்து இருந்தனர். அதனால் SKA(Safi Karmachari andolan) அமைப்பை சேர்ந்த தேசிய மைய குழு உறுப்பினர் தீப்தி சுகுமார் மற்றும் தமிழ்நாடு மாநில கன்வீனர் சாமுவேல் வேளாங்கண்ணி இந்த மக்களின் துயரங்களை விவரித்தனர்.
சட்டம் மிகத் தெளிவாக இந்த வேலைகளுக்கு மனிதர்களை ஈடுபடுத்த கூடாது என்று சொல்லியும் இவர்களை ஈடுபடுத்தும் வழக்கம் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இறப்பு சம்பவம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 5 வருடத்தில் 55 நபர்கள் கழிவு நீர் தொட்டியில் இறந்து உள்ளனர். அதற்காக போடப்பட்ட FIRல் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. ஏன் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் குற்றப் பத்திரிகையை கூட இவர்கள் மீது தாக்கல் செய்தது இல்லை. இப்படி அரசு செயல்பட்டால் இந்த மனிதர்கள் தொடர்ந்து இறப்பது தொடரவே செய்யும். அவைதான் இதுவரை நடந்தும் உள்ளது.
இறக்கும் மனிதர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் பணமும், ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது ஆனால் பலருக்கு 10 லட்சம் பணம் சென்று சேரவில்லை. அரசு வேலை என்பது நினைத்து பார்க்கவும் முடியாத நிலைதான் உள்ளது. அரசு தமிழ்நாட்டில் இதுபோல் மனிதர்கள் இல்லை, அனைவரும் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர் என்று கூறுகிறது. ஆனால் நாங்கள் எடுத்த சர்வே படி 3000 தொழிலாளர்கள் இந்த வேலையில் உள்ளனர். எங்களால் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுக்க முடியவில்லை. முடிந்தவரை எடுத்ததில் 3000 தொழிலாளர்கள் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அரசு, தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்தால் உண்மையான எண்ணிக்கை தெரியவரும். அரசு சர்வே எடுப்பதில்லை காரணம், ”அப்படிப்பட்டவர்களே தமிழ்நாட்டில் இல்லை” என்று சொல்லும் அரசு எப்படி இந்த சர்வே எடுக்கும்.

இது போல இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் கருணைத் தொகை அரசு அறித்து உள்ளது. ஆனால், அதை பெறுவதும் அவ்வளவு சுலபமில்லை என சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் அனைத்தும் ஒரே குரலில் சொல்வது ஒருவரின் இறப்பிற்கு 10 லட்சம் ஈடாகுமா? உயிருடன் இருந்தால் எங்கள் குடும்பம் கடைசிவரை நிம்மதியாக இந்த சமூகத்தில் வாழ்ந்து இருக்கும். கணவனை இழந்த மனைவி எப்படி இந்த 10 லட்சத்தை வைத்து கொண்டு குழந்தைகளை படிக்கவைத்து காப்பாற்ற முடியும். அரசு இந்த தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். பலருக்கு இந்த தொகையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மலக்கழிவு அகற்றும் வேலைகளுக்கு மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டம் இருப்பது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பும் உள்ளது. SKA அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி கழிவுகள் அகற்றும் துப்புரவுத் செய்பவர்களை அதிலிருந்து விடுவித்து மறுவாழ்வுக்காக ஒரு முறை பண உதவியும் செய்ய வேண்டும்.துப்புரவு இல்லாத கண்ணியமான மாற்று வேலையையும், கல்வி, வீட்டு வசதி, ஓய்வு ஊதியம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்து உள்ளது. ஆனால் அரசு சட்டத்தையும் நடைமுறை படுத்தவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பையையும் பொருட்படுத்தவில்லை.

2018-19 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அவர்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு எடுத்தது. கடந்த 3 வருடங்களில் 30 நபர்கள் இந்த வேலையில் ஈடுபட்டு இறந்து உள்ளனர். ஆனால் இந்த 30 நபர்கள் அரசு எடுத்த கணக்கெடுப்பில் வரவில்லை. அவர்களை அரசு அந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இப்படிதான் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. சென்னை உயர்நிதீமன்றம் கடந்த நவம்பர் 2021ல் கழிவு நீர்தொட்டியில் இறப்புவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவது போதுமானதாக இல்லை அவற்றை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் சட்டம், உச்சநீதிமன்றம், உயர்நிதிமன்றம் இவ்வளவு சொல்லியும் அரசு எந்த நடவடியையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்த வேலையில் ஈடுபடும் 95 சதவிகிதம் மனிதர்கள் SC மற்றும் ST பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களின் குரல் இந்த சமூகத்தில் சிறிதும் எடுபடுவதில்லை. இன்று மீடியா இருப்பதால் இத்தகையை இறப்பு ஓரளவு வெளியே தெரிகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக இவர்கள் இறந்து வருகிறார்கள். இயற்கையான வகையிலன்றி, கழிவு நீர் தொட்டியில் இறங்குவதன் மூலமான இறப்பு என்பது ஒருபோதும் ஏற்கதக்கதல்ல.

அரசு உடனடியாக இவர்கள் பிரச்னையில் தலையிட்டு தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு தொழிலாளர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்று கணக்கீடு எடுக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும். இந்த சட்டத்தை பற்றி அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். ரூ10 லட்சம் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவர்களும் இந்த சமூகத்தில் கவுரமாக வாழ வழிவகை செய்து தர வேண்டும். அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்து உள்ளனர்.
கழிவு நீர் அகற்ற அதற்கான நவீன உபகாரணங்களை அரசு வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, நகராட்சி ஊழியர்களை எவ்வளவு அழைத்தும் வருவதில்லை என்பதால் உடனடியாக இவர்களை அழைத்து சுத்தம் செய்ய வைக்கிறர்கள்,பொதுமக்கள். இந்த வேலைகளுக்கான உபகரணங்கள் எப்போதோ புழக்கத்தில் வந்துவிட்டன.. ஆனால் அவற்றை அரசாங்கம் போதுமான அளவுக்கு வாங்காமல் போவதால் அவற்றில் இறங்கி சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. எந்த மனிதனும் மலக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது. நவீன உபகரணங்களை கொண்டு சுத்தம் செய்யும் முறை எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வர வேண்டும். இத்தகையை இறப்பிற்கு குடியிருப்புவாசிகள் மட்டும் பொறுப்பாகிவிட முடியாது. நம் அனைவரையும் உள்ளடக்கிய இந்த சமூகமும், அரசாங்கமும் பொறுப்பாகும்.
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

இந்த கருத்தை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்பட்ட முதல் படமாக விட்னஸ் படம் வந்துள்ளது. அரசாங்கம் நினைத்தால் இந்த மலக்குழி மரணங்களை உடனே தடுத்து நிறுத்தி விட முடியும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள் அதற்கு என்ன காரணம் என்பதையும் இந்த படத்தில் விளக்கி இருக்கிறார்கள்.
கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாத ஒரு ஆவணப்படம் போல தான் இந்த படம் நகர்கிறது. ஆனாலும் ஒரு முக்கியமான கருத்தை நேர்மையாக எடுத்து வைத்தற்காக இந்த படத்தை பாராட்டியாக வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த மலக்குழி மரணங்கள் அதிகமாக நிகழ்கிறது என்பது வேதனையான விஷயம்.

மலக்குழிக்குள் உள்ள அடைப்பை சுத்தம் செய்ய உதவும் எத்தனையோ ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பாண்டிகூட் 2.0 – மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் ரோபோக்களும் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் முழுமையாக நடைமுறை படுத்தாமல் வைத்திருப்பது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

தூய்மையா… சுதந்திரமா எது முதலில் என்றால், எனது முதல் தேர்வு தூய்மைதான்!’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால் அழுக்கு, சுத்தம் என்ற இரண்டு சொற்களுக்கிடையே அன்றாடம் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள்.

அந்த வகையில் மக்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இந்த “விட்னஸ்”.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply