Home>>உடல்நலம்>>இந்திய இருமல் மருந்து மீது குற்றம்சாட்டும் உஸ்பெகிஸ்தான் அரசாங்கம்
uzbekistan-indian-cough-syrup-uzbekistan-blames-india-made-cough-syrup-for-children-deaths
உடல்நலம்உலகம்செய்திகள்

இந்திய இருமல் மருந்து மீது குற்றம்சாட்டும் உஸ்பெகிஸ்தான் அரசாங்கம்

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 Syrup இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த மருந்தை ஆய்வகத்தில் பரிசோதித்ததில் எதிலின் கிளைகோல் (ethylene glycol) என்ற நச்சுப்பொருள் மருந்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த மருத்து, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, வீட்டில் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று பெற்றோர்களாக இந்த மருந்தை வாங்கியிருக்க வேண்டும் இல்லையென்றால் மருந்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். குழந்தைகளுக்கான வழக்கமான டோஸை விட இந்த மருத்தை அதிக டோஸ் கொடுத்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 2 முதல் 7 நாட்கள் வரை அன்றாடம் 2.5 ml முதல் 5 ml அருந்தியுள்ளனர். அன்றாடம் மூன்று முதல் 4 முறை இந்த மருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருந்துக்கடைக்காரர்கள் பரிந்துரையின்படி பெற்றோர் இந்த மருந்தினை குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இருந்து Doc-1 Max மருந்தை அரசு திரும்பப்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் அரசின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் வடக்கு மண்டலம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் காம்பியா குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய தகவலின்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து இந்திய மருந்துகள் குறித்து அச்சம் உருவானது.வளர்ந்து வரும் இந்திய மருத்துவ சந்தையை முடக்கும் முயற்சி என்ற கருத்தும் நிலவி வருகிறது .

எது எப்படியோ மருத்துவமும் , கல்வியும் வியாபாரமாகி போன இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அறமற்ற வணிகம் மனிதகுலத்தை வீழ்ச்சியை நோக்கியே இட்டுச்செல்லும்.

பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் . எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வை தேடிப்போகாமல் கொஞ்சம் நிதானமாய் குழந்தைகள் சளி இருமல் காய்ச்சல் போன்ற உடல்நகுறைவுக்கு முடிந்தவரை பின்விளைவு இல்லாத இயற்கை மருத்துவம் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் கைக்கொள்ள வேண்டும் .

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
மொன்றியல் , கனடா

Leave a Reply