Home>>அரசியல்>>பணி நிரந்தரம் செய்யக்கூறி 6 வது நாளாக செவிலியர்கள் போராட்டம்.
அரசியல்

பணி நிரந்தரம் செய்யக்கூறி 6 வது நாளாக செவிலியர்கள் போராட்டம்.

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா். ஒப்பந்த காலத்துக்குப் பிறகு அவா்களில் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் நேற்று வள்ளுவர்கோட்டத்தில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 6-வது நாளாக இன்று சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500-க்கும்மேற்பட்ட செவிலியர்கள் தங்களதுகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது கர்ப்பிணி உட்பட 3 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
செவிலியர்களின் மிக நியாயமான போராட்டத்திற்கு ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீமான் நேரடியாகவே செவிலியர் போராட்டத்தில் பங்கு பெற்று அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூறி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது மக்கள் சேவைக்காக முன் வந்து வேலை பார்த்தவர்களை அரசு தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு பின்பு அவர்களுக்கு மாபெரும் நம்பிக்கை துரோகத்தை செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது செவிலியர்கள் 4000 பேரையும் பணி நிரந்தரம் செய்யக்கூறி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சியாக இருக்கும்பொழுது ஒரு நிலைப்பாடு அதுவே ஆளுங்கட்சியான பிறகு வேறு ஒரு நிலைப்பாடு என்பது தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது.
ஆளுங்க ஜியானதிமுக 2021 தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ள நீட் தேர்வு ரத்து,மாதாந்திர மின்கட்டணம்,பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், கனிம வளங்களை அரசே எடுத்து நடத்துதல், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ,35 லட்சம் பேருக்கு புதிய அரசு வேலைகள்,
கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைத்தல்,சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்,
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என
பல அத்தியாவசியமான விடயங்களை இன்னும் நிறைவேற்றாமல் வைத்திருப்பது போலவே இந்த செவிலியர்களின் பணி நிரந்தரத்தை ரத்து செய்திருப்பது வேதனைக்குரிய விடயம்.
ஏற்கனவே சம்பள விடயத்தில் ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இடையே பெரிய மாறுபாடுகள் இருக்கும் நிலையில் மேலும் அவர்களை வஞ்சிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உடனடியாக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசின் கடமையாகும்.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply