திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு ஆதரவுடன் திருவாரூர் மாவட்டத்தில், பள்ளிகளில் பணியாற்றி வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தின் சோழா மத்திய நூலக கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி. குணசேகரன் வரவேற்றுப் பேசினார்.
வரவேற்பு உரையில் குணசேகரன் பேசியதாவது:
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போதைய அரசியல் அவசர தேவை இதனால் தான் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் இந்த கருத்தரங்கத்திற்கு அனுமதி அளித்து இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ஒவ்வொரு நாடும் முன்வரவேண்டும். புதுப்பிக்க தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்த வேண்டும். உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும். மாவட்ட அளவில் தாங்கள் சார்ந்து உள்ள பள்ளி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். திருவாரூர் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி துறையின் முதல்வர் பி.எஸ். வேல்முருகன் தலைமை வகித்தார்.
தலைமை உரையில் குறிப்பிட்டதாவது உலக நாடுகள் அனைத்திற்கும் இன்று மிகப் பெரிய சவாலாக இருப்பது காலநிலை மாற்றம் என்பதனால் ஏற்படும் பேரழிவுகள். இது மனித குலத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமே மிகப் பெரிய ஆபத்தாக முடியும். எனவே இதனை கட்டுப்படுத்த தேவையான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியுள்ளது. 1டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தாலே ஏராளமான பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். இது சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்ல உலக பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் எனவே இதற்கான விழிப்புணர்வு பெறும் வகையில் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது எனப் பேசினார். திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
தொடக்க உரையில் சுரேஷ் குமார் பேசுகையில் “திருவாரூர் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற பல செயல்திட்டங்களை நமது மாவட்ட பள்ளி மாணவர்களுக்காக தொடர்ந்து பல செயல்பாடுகளை செய்து வருகிறது. இன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் திட்ட அலுவலர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்”. என்று பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார். முன்னிலை உரையில் குறிப்பிட்டதாவது இக் காலகட்டத்தில் தேவையான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்த காலநிலை மாற்றம் என்பதாகும் தமிழ்நாடு அரசும் காலநிலை மாற்றத்தின் கடுமையான பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னேற்றகரமான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் 32 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன மாவட்டம் தோறும் பசுமை பள்ளிகள் என்ற புதிய திட்டம் செயல்பட தொடங்கி உள்ளது. எனவே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று பேசினார்.
பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செந்தில் குமார் மற்றும் பால சண்முகம் பொருள் அறிவியல் துறை உதவி பேராசிரியர் பீர் முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து காலநிலை மாற்றம் ஒர் அறிமுகம் என்கிற தலைப்பில் முனைவர் குணசேகரனும் சிஓபி 2027 மாநாடு மற்றும் அதன் விளைவுகள் குறித்து முனைவர் வேல்முருகனும் காலநிலை மாற்றத்தின் சட்டபூர்வ மற்றும் கொள்கை வளர்ச்சி நிலைகள் குறித்து முனைவர் பால சண்முகமும் பாரம்பரிய நெல் ரகங்களின் அவசியம் குறித்து டாக்டர் ரகுநாதனும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப் படும் பாட பிரிவுகள் விண்ணப்பிக்கும் முறைகள் அண்மைக் காலமாக சமுதாய கல்லூரி மூலமாக வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் ஆகியன குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. விழா நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் மேல் நிலை பள்ளிகளில் பணியாற்றும் 42 திட்ட அலுவலர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
—
செய்தி உதவி:
திரு. இராஜப்பா,
ஆசிரியர் – தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.