Home>>திரை விமர்சனம்>>நண்பகல் நேரத்து மயக்கம் -விமர்சனம்
திரை விமர்சனம்

நண்பகல் நேரத்து மயக்கம் -விமர்சனம்

நண்பகல் நேரத்து மயக்கம்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
திருக்குறள்.
ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.
இந்த ஒற்றைத் திருக்குறள் தான் இந்த ஒட்டு மொத்த படத்தின் கதையையும் விளக்குகிறது.

உறக்கத்தில் இருக்கும் மனிதன் கண் விழிப்பதே ஒரு புதிய பிறப்புதான். அப்படியொரு நன்பகல் நேரத்து உறக்கத்தில் இருந்து விழித்து புதிதாக பிறந்த ஒரு மனிதனின் கதை.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் சமீபகால பல படங்கள் ஏதோ பெரிதாக என்னை கவரும்படி இல்லை. பீஷ்ம பருவம் என்ற ஒரு படம் பார்க்கும் படி இருந்தது.
இந்த படத்தின் மூலம் அவர் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார். மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகர் இப்போது நான்காவது முறைக்கும் குறி வைத்துள்ளார்.
படத்தில் இயக்குனர் லிஜொ ஜோஸ் என்ற போதே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அங்கமாலி டைரீஸ்,ஈ மா யூ ஜல்லிக்கட்டு போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர். அதிலும் ஈமாயூ மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற படங்களை பார்த்து ரொம்பவே வியந்திருக்கிறேன்.
அதே வியப்பை இந்த நண்பகல் நேரத்தில் மயக்கமும் நமக்கு கொடுத்திருக்கிறது என்பது அவருடைய தொடர்ச்சியான திறமையை காட்டுகிறது.
இந்த படத்தை மலையாளப் படம் என்று சொல்வதா அல்லது தமிழ்ப் படம் என்று சொல்வதா என்ற குழப்பம் ஏற்படும் வகையில் மலையாளம் தமிழ் கலந்த ஒரு படமாக தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக தான் வந்திருக்கிறது.
ஜாதி மதம் இனம் மொழி கடந்து சக மனிதனை நேசிப்பது என்பது மிக அவசியமானது. அப்படி இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கு காலமே ஒரு வாய்ப்பை கொடுத்து அதை உணர வைக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் தமிழ் உணவை, தமிழ்ப் பாடல்களை, தமிழ் கலாச்சாரத்தை வெறுக்கும் ஒரு மலையாளியை காலம் அவனை ஒரு நாள் ஒரு தமிழனாகவே வாழச் செய்கிறது.
எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் குறிப்பிட்டது போல இதை மறுபிறவி என்று சொல்வதா அல்லது காலம் ஏற்படுத்தி கொடுத்த ஒரு வாய்ப்பு என்று சொல்வதா அல்லது பேய் ,பிசாசு வேலை என்று சொல்வதா என்று படம் முடிந்த பின்னும் நமக்கு புரியாமல் நமது யோசனைக்கே விட்டு விட்டார்கள். இந்த முடிவு பலருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஒரு முழுமையான ஒரு படத்தை பார்த்த திருப்தி இல்லாமல் போகலாம் ஆனாலும் இதுவே இந்த படத்திற்கு ஆகச்சிறந்த முடிவு என்பதை படம் முடிந்த பின் ஒரு நாள் முழுக்க யோசித்து பார்த்தால் புரியும்.

கதை என்று பார்த்தால் வேளாங்கண்ணிக்கு மலையாளக் குடும்பம் ஒன்று நண்பர்களோடு சென்று விட்டு மீண்டும் திரும்பும் வழியில் ஒரு நண்பகல் நேரத்தில் அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போடுகிறார்கள். அப்போ திடீரென உறக்கம் கலைந்த மம்முட்டி பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு திடீரென இறங்கி ஒரு சோளக்காட்டுக்குள் போகிறார்.ஏதோ இயற்கை உபாதைக்காக சொல்கிறார் என்று அனைவரும் நினைக்க, அவர் அங்குள்ள ஒரு கிராமத்துக்குள் செல்கிறார், அங்கு இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று அந்த வீட்டைச் சேர்ந்தவர் போலவே நடக்கிறார். அவர் நடை ,உடை, பாவனை மொழி எல்லாமே மாறி விடுகிறது.

அந்த கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த சுந்தரம் என்ற ஒரு நபராகவே வாழ்கிறார். அனைவருக்கும் குழப்பமாகவே இருக்கிறது. பேருந்தில் அவருக்காக காத்திருந்தவர்கள் அவரைத் தேடி அந்த கிராமத்துக்கு வருகிறார்கள். ஆனால் மம்முட்டி அவரது மனைவி குழந்தையை கூட எதுவும் தெரியாது போல நடக்கிறார். இனத்தால் மலையாளி ஆகவும் மதத்தால் கிறிஸ்தவராகவும் இருக்கும் ஜேம்ஸ் என்னும் மலையாளி திடீரென ஒரே நாளில் தமிழனாகவும், இந்துவாகவும் மாறியது அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அது மட்டுமல்ல ஜேம்ஸ்க்கு குடிப்பழக்கம் கிடையாது. சுந்தரம் குடிக்கிறார். ஜேம்ஸ் சர்க்கரையை அதிகம் விரும்ப மாட்டார். சுந்தரம் நிறைய சர்க்கரையை விரும்புகிறார் .ஜேம்ஸ்க்கு தமிழ் தெரியவே தெரியாது. சுந்தரம் தமிழ் மட்டும் தான் பேசுகிறார். இது எப்படி சாத்தியம் என்று அவர்கள் வியப்பது போலவே பார்வையாளர்கள் நாமும் வியக்கும் அளவுக்கு காட்சி அமைப்புகள் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. மிக மிக மெதுவாக ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதையை கூட நம்மால் ஆழ்ந்து ரசிக்கும்படி காட்சி யமைப்புகள் இயக்கம் ஒளிப்பதிவு இசை அமைந்துள்ளது.
படத்தில் பின்னணி இசை பற்றி பேசியாக வேண்டும். பெரும்பாலான பின்னணி இசை அங்கே தொலைக்காட்சியில் ஓடும் பழைய படங்களின் வசனங்கள், எங்கேயாவது கேட்கும் பழைய தமிழ்ப் பாடல்கள் இவைகள் தான் படத்தின் பெரும்பாலும் இசையாக உள்ளன.குறிப்பாக ரத்தக்கண்ணீர் படத்தில் வசனங்களை பின்னணிசையில் மிக சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே அதன் இசை என்னை வெகுவாக கவர்ந்தது. அதற்கான நியாயத்தை படத்தில் செய்துள்ளனர்.
வழக்கமான எல்லா மலையாளப் படங்களைப் போலவே படத்தில் நடித்த அத்தனை பேருமே அவ்வளவு இயல்பாகவும்,அற்புதமாகவும் நடித்துள்ளனர்.
யாரோ ஒருவர் தன் வீட்டுக்குள் வந்து புழங்குவதை பார்க்கும் சுந்தரத்தின் மனைவி(ரம்யா பாண்டியன்) ஒன்றுமே புரியாமல் , என்ன சொல்லுவதென்றே தெரியாமல் ஒரு வியப்பிலேயே படம் முழுக்க இருப்பார்.

படம் பார்க்கும் நமக்கு அது ரொம்ப ஆச்சரியத்தை கொடுக்கும். யாரோ ஒரு முகம் தெரியாத நபர் வீட்டுக்குள் வந்தால் எந்த பெண்ணாக இருந்தாலும் கத்தி ஊரை கூட்டுவார். இவர் என்ன இவ்வளவு அமைதியா இருக்கிறார் என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். ஆனால் அதற்கான விளக்கத்தை அவர் படத்தின் இறுதியில் கொடுப்பார். வந்த நபரின் நடை, பாவனை ,பேசும் விதம், பூங்குழலி என்ற தன் பெயரை சொல்லி அழைத்த விதம் எல்லாமே அவர் கணவரை நினைவு படுத்துவதாக இருந்தது என்று.
முதல் நாள் நண்பகல் நேரத்தில் ஜேம்ஸ்க்கு ஏற்பட்ட சுந்தர மயக்கம் அடுத்த நாள் நண்பகல் நேரத்தில் கலைகிறது. இந்த இடைப்பட்ட ஒரு நாள் தான் இந்தப் படமே.
ஆனால் சுந்தரமாக இருந்த மம்மூட்டி மீண்டும் ஜேம்சாக மாறும் போது பொதுவாக அனைவரும் நான் எப்படி இங்கே வந்தேன் என்ன ஆச்சு எனக்குன்னு இப்படி சில கேள்விகளை தான் வழக்கமா கேட்பார்கள். ஆனால் இதில் ஜேம்ஸ் க்கு எந்த குழப்பமும் கிடையாது .வாங்க போலாம் அப்படின்னு மலையாளத்தில் பேசிகிட்டே தன் மனைவியை அழைச்சிகிட்டு போய்டுவாரு. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்து விடும். ஆனால் சுந்தரத்தின் நாய் மட்டும் அவரை பின்தொடரும் படி படத்தை முடித்து இருப்பது பல கேள்விகளை,பல ஐயங்களை நம் முன்வைக்கிறது. ஜேம்ஸை விட்டு சுந்தரம் என்னும் விலகவில்லையோ என்று தான் தோணுகிறது.
இதற்கெல்லாம் ஒரே பதில் தான். காலம் ஜேம்ஸ்க்கு புகட்டிய பாடம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதுல ரொம்பவே நுணுக்கமான காட்சிகள் பல உள்ளன.
அதில் என்ன கவர்ந்த மிக முக்கியமான இரு காட்சிகள்,

1. தன் ஊரில் தன் கண்முன்னே தனக்கு தெரியாமல் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டிருப்பதும் ,நேற்றுதான் பார்த்தது போல இருந்த தனது முடி திருத்தும் நண்பர் இறந்த ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என்ற உண்மையை அறிந்த போதும், தன் அண்ணன் தன்னை வீட்டை விட்டு வெளியே போ என்று கத்துவதையும் கண்டு தனக்கு ஏதோ ஆயிற்று, நான் உண்மையிலேயே சுந்தரமா இல்லையா என்று ஜேம்சை சந்தேகப் பட வைக்கும் அந்த காட்சியைப் பற்றி எப்படி சிலாகிப்பது என்றே தெரியவில்லை. ரொம்பவே நுணுக்கமான காட்சி. அங்குதான் மலையாள சினிமா தனித்து நிற்கிறார்கள்.

2. ஒரு காட்சியில் அந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து ஜேம்சை ஊரை விட்டு விரட்ட முயற்சிகையில், இந்த மலையாளத்தான் எல்லாம் சேர்ந்து தமிழன் என்னை என் ஊரில் இருந்து என்னை விரட்ட பாக்குறாங்க.நீங்க எல்லாம் பாத்துட்டு சும்மா இருக்கீங்களே. இது என் ஊரு நான் தமிழன் ன்னு அவர் வெறியாட்டம் ஆடும் காட்சி அருமையோ அருமை. மம்முட்டி எவ்வளவு அபாரமான நடிகர் என்பதை உணர்த்தும்.

மம்முட்டியை தவிர வேற எந்த ஒரு மலையாள நடிகரும் இந்த படத்தை செய்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவருடைய தமிழ் உச்சரிப்பு, தமிழ்ப் படங்களை நன்றாக உள்வாங்கிய இயல்பு அதற்கு பெரிதும் உதவியுள்ளது.
குறிப்பாக கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த அந்த காட்சி பிண்ணனியில் ஒலியாக ஓடும் போது அந்தக் காட்சியை அப்படியே பிரதிபலித்து நடித்திருப்பார். இது மலையாள நடிகர்களுக்கு சாத்தியமே இல்லை. மம்முட்டி அந்த வகையில் தனித்துவமாக இருக்கிறார்.
ஒரு நல்ல உயர் தரமான படம் இந்த “நண்பகல் நேரத்து மயக்கம்”.
உறங்கி எழும் ஒவ்வொரு மனிதனும் ஒரு புது பிறப்பு தான்.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply