Home>>இதர>>கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பணம் பெறப்பட்டதா???
இதர

கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பணம் பெறப்பட்டதா???

ஆளுநர் மாளிகையில் யூ.பி.எஸ்.சி. மாணவர்களிடம் பேசிய திரு. ஆர். என். ரவி, கூடங்குளம் அணுஉலைப் போராட்டம் ஒரு வெளிநாட்டுச் சதி என்றும், அந்தப் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது என்றும் கருத்துத் தெரிவித்திருப்பதாக அறிகிறேன். உறுதிப்படுத்தப்பட்டச் செய்திக்காகக் காத்திருக்கிறேன்.

இவர் தன்னுடைய இந்த அபாண்டமானக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வைத்திருக்கிறாரா? அப்படியானால், அவற்றை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். தரவுகள் எதுவும் இல்லாமல் வழக்கம்போல வாய்க்கு வந்தபடி பேசினாரென்றால், உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையென்றால் போராடும் மக்கள் சார்பாக இவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதற்கு ஆவன அனைத்தும் செய்வேன்.

ஓர் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப் பொறுப்பற்ற விதத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், இவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுநர் மாளிகையில ரகசியமாக சந்தித்த அந்த முதலாளிகள் பணம் கொடுத்தார்களோ என்று எங்களாலும் சொல்ல முடியும். நாங்கள் பொறுப்பானவர்கள் என்பதாலும், திரு. ரவி வகிக்கும் பதவி மதிப்புமிக்கது என்பதாலும் நாங்கள் அவதூறு பரப்பவில்லை.

திரு. ரவியின் கூற்றுப்படி, “ரிஷிகளும், வேதங்களும் உருவாக்கிய நாட்டில்” இப்படிப்பட்ட தரமற்ற, தகுதியற்ற நபர்கள் ஆளுநர்களாக இருப்பதும், அவர்கள் வாய்க்குவந்தபடிப் பேசுவதும் கேவலமானது.


திரு. சுப. உதயகுமாரன்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
ஏப்ரல் 6, 2023.

Leave a Reply