திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்!
திருச்சி மாநகரம் தென்னூர் உழவர் சந்தை அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வக்பு வாரியத்திற்குச் சொந்தமான அன்னார் பாக் தர்கா மற்றும் அடக்க தலம் ஆகியவற்றை சமூக விரோதிகள் சிலர் இயந்திரம் மூலம் இடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தென்னூர் தர்கா இடிக்கப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த திமுக அரசின் அலட்சியப்போக்கு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
தர்கா அமைந்திருக்கக் கூடிய நிலம் தொடர்புடைய வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தர்காவை இடிப்பதற்கு திமுக அரசு எப்படி அனுமதித்தது? மத வழிபாட்டுத்தலங்களை உள்நோக்கத்துடன் அத்துமீறி இடிக்கும்போது மிகப்பெரிய பதற்றமும், கலவரமும் ஏற்படக்கூடும் என்பது திமுக அரசிற்கு தெரியாதா? மதக்கலவரம் ஏற்பட்டு மக்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் அதனை திமுக அரசால் திருப்பித்தர முடியுமா? பாசிச சக்திகள் தமிழ்நாட்டை எப்படியாவது ஆளத்துடிக்கும் சமகால ஆபத்தான சூழலில் திமுக அரசின் இத்தகைய அலட்சியப்போக்கு மதவாத சக்திகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துவிடாதா? இதையெல்லாம் திமுக அரசு சிறிதுகூட உணரவில்லையா?
ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தர்காவை அத்துமீறி இடித்தவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும், அரசு சார்பாக உடனடியாகப் புதிய தர்காவை கட்டித்தர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று மதக்கலவரத்தையும், தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தும் கொடுஞ்செயல்களை எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாதெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
—
திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.