Home>>இதர>>மிராக்கிள் இன் செல் நம்பர் 7 (துருக்கி)-விமர்சனம்
இதரதிரை விமர்சனம்

மிராக்கிள் இன் செல் நம்பர் 7 (துருக்கி)-விமர்சனம்

 

 

 

மிராக்கிள் இன் செல் எண். 7 ( துருக்கி : 7. Koğuştaki Mucize)

 

மனநலம் குன்றிய தந்தைக்கும் அவனுடைய மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை அடிப்படையாக கொண்ட படங்கள் பல உண்டு.அதில் ஹாலிவுட்டில் im sam படம் குறிப்பிடத்தகுந்தது.அதுதான் தமிழில் விக்ரமின் அபார நடிப்பில் தெய்வத்திருமகள்  என்று வந்தது .

 

இதுவும் ஏறக்குறைய அதே போல ஒரு படம் தான்.பொதுவாக கொரியன் படங்கள் ஆக்சன்,சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களுக்கு பிரசித்தி பெற்றவை. அதே நேரத்தில் அவர்கள் ரொம்ப அற்புதமான ஃபீல் குட் படங்களையும் எடுக்க கூடியவர்கள். அதற்குப் பெரும் உதாரணமாக 2013 ல் வெளி வந்த miracle at room no 7  படத்தைச் சொல்லலாம்.

 

அதே படத்தை தழுவி (சில முக்கிய மாற்றங்களோடு),2019 ல் துருக்கி மொழியில் வந்த படம் இது.

 

 மெஹ்மத் அடா ஆஸ்டெகின் இயக்கிய

 2019-ல் வெளிவந்த ஒரு உலகத்தரமான படம் இது.

 

படத்தின் தொடக்கத்தில் ,

 

 2004 ஆம் ஆண்டில், துருக்கியில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது என்ற செய்தி வெளிவருகிறது.

 

 அதற்கு முன் 1984ல்  “மெமோ கொயுஞ்சு”என்பவருக்குதான்  தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்தி சொல்லப்படுகிறது.அந்த செய்தியை கேட்கும் ஓவா  என்ற பெண்ணின் நினைவுகள் வாயிலாக கதை 1983க்கு  செல்கிறது. அங்கே,

 

ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் தந்தை, மெஹ்மத் “மெமோ” கொயுஞ்சு, தனது இளம் மகள் ஓவா மற்றும் அவரது தாயார் பாத்மாவுடன் ஒரு மலைப்பகுதியில் வசிக்கிறார். ஒரு சமயம் ஒரு  ​​உள்ளூர் ராணுவ அதிகாரியின் மகளுடன், ஓவா விரும்பும் ஒரு பையினால் அவர் சிறு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர், ஒரு சமயத்தில் அந்த சிறுமி  தற்செயலாக ஒரு குன்றிலிருந்து விழுந்து இறந்துவிடுகிறாள், மேலும் அவளைக் காப்பாற்ற மெமோவின் முயற்சிகள் ஒரு கொலைச் செயல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார், ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு ஒரு சாட்சியைக் கண்டதாக ஓவாவிடம் சிறைக்கு செல்லும் வழியில்  கூறுகிறார்.நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரி கொடுத்த அழுத்தத்தால் விரைவாக கொலைக் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறார்.

 .பின் சிறையில் செல் நம்பர் 7 க்கு அனுப்பப்படுகிறார்.

 

 அதன்பின் அங்கே நடக்கும் அதிசயங்களை எதிர்பாராத திருப்பங்களோடு சொல்வது தான் இந்த கதை.

 

ரொம்பவே உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட ஒரு படம்.படத்தின் முடிவுக்கு முன் வரும்  ஒரு காட்சியில்  தான் தூக்கிலிடப்பட  போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட மெமோ தன் மகள் ஓவா கிட்ட பேசும் அந்த காட்சி நம்மை உருக வைத்து விடும்.  தான் விரைவில் சாகப் போகிறோம் அதன் பின்  தன் மகளை யார் பார்த்துக் கொள்வார் என்று கவலையோடு அவர் அழும் காட்சி உண்மையிலேயே நம்மை துக்கத்தில்

ஆழ்த்தி விடும். இவர் எப்படியாவது விடுதலை அடைய வேண்டும் என்று அவர் மகள் போலவே நாமும் வேண்டும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

 

அதே போல படத்தின் முடிவின்

எதிர்பாராத திருப்பம் செம.ரொம்ப பொருத்தமான முடிவும் கூட. நிச்சயமாக யாரும் எதிர்பாராத ஒரு முடிவு. படத்தின் முதல் காட்சியை பார்த்த பின் இது போன்ற ஒரு முடிவை நம்மால் யூகிக்க முடியாது.

உண்மையிலேயே அந்த கொரியன் படத்தை விட இந்த பெயருக்கு மிகப் பொருத்தமாக அதிசயங்கள் நிகழும் ஒரு  ஒரு செல் நம்பர் 7 ஆக  இருப்பது போல் காட்டி இருப்பது சிறப்பு.

அந்த கொரியன் படத்தில் அந்த மகள் தன் தகப்பனை பார்க்க அவர் தங்கி இருக்கும் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் அதற்கு அந்த வார்டன் மற்றும் அந்த சிறைக் கைதிகள் உதவுவார்கள். இந்த ஒன்று மட்டுமே அந்த சிறையில் நடக்கும் அதிசயமாக இருக்கும்.ஆனால் இந்த துருக்கிய படத்தில் அதையும் தாண்டிய ஒரு பேரதிசயம் இந்த படத்தின் முடிவில் உள்ளது. அதேபோல அந்த குழந்தையை எப்படி ஒரு சிறைக்குள் கொண்டு செல்ல முடியும் என்பதை மிகத் தெளிவாக காட்டியிருப்பார்கள் இந்த துருக்கியப் படத்தில்.(கொரியன் படத்தில் அது கொஞ்சம் நெருடல் )

 

படத்தின் நாயகன் மற்றும்  அவர் மகளாக நடித்தவரும்  சரி ரொம்பவே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

 

ரொம்ப அற்புதமான நம் மனதை வருடும், நெகிழ வைக்கும் ஒரு படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தரமான உலகத் திரைப்படம்.

 

2019 ஆம் ஆண்டில் துருக்கிய திரையரங்குகளில் 5.3 மில்லியனுக்கும் அதிகமான சேர்க்கைகளுடன் அதிகம் பார்க்கப்பட்ட படம். இது Netflix இல் வெளியானதன் காரணமாக உலகளாவிய பார்வையாளர்களைப் பெற்றது , குறிப்பாக பிரான்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்காவில், இது தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply