பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது – மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம்
தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா?
ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
—
திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.