1. அறிவிப்பு வெளியிட்டு ஒருமாத காலமாகும் சூழலில் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்காதது ஏன்..?
2. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, வெறும் விளம்பரத்திற்கான அறிவிப்பா..? ஏமாற்று நாடகமா..?
ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்தாண்டு (2023) டிசம்பர் 18ம் தேதி முதல் லிட்டருக்கு 3.00 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், பசும்பால் ஒரு லிட்டர் 35.00 ரூபாயிலிருந்து 38.00 ரூபாயாகவும், எருமைப்பால் ஒரு லிட்டர் 44.00 ரூபாயிலிருந்து 47.00 ரூபாயாகவும் உயரும், இதனால் சுமார் 4லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பலன் பெறுவார்கள் என கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அதனை பால் கொள்முதல் விலை உயர்வாகவும், இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் திமுக அரசு தான் ஓராண்டில் பால் கொள்முதல் விலையை அதிகபட்சமாக (2022 நவம்பர் 3.00 ரூபாய், 2023 டிசம்பர் 3.00 ரூபாய் ஆகமொத்தம் 6.00 ரூபாய்) உயர்த்தி வழங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமின்றி ஆளுங்கட்சி தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் சித்தரிக்கப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டது.
அச்சமயம் அரசின் அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறியை உணவாக கொடுத்தது போன்றதாகும் என்றாலும் கூட, இந்த ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவிற்கு உதவும் என்பதால் லிட்டருக்கு 3.00ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்றதோடு அரசு வழங்குவதாக கூறியது ஊக்கத்தொகை தானே தவிர ஆளுங்கட்சி சார்பில் பரப்பப்பட்டு, சித்தரிக்கப்பட்டு வருவது போல் கொள்முதல் விலை உயர்வல்ல என்பதையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுவது போல் ஓராண்டில் பால் கொள்முதல் விலையை அதிகபட்சமாக உயர்த்தி வழங்கியது திமுக அரசல்ல என்பதையும், திமுக அரசு 14மாதங்களில் தான் ஊக்கத்தொகை அறிவிப்போடு சேர்த்து லிட்டருக்கு 6.00 ரூபாய் மட்டுமே உயர்த்திள்ளதாகவும், அதிமுக அரசு மட்டும் தான் ஓராண்டிற்குள் (2014ம் ஆண்டு ஜனவரி 3.00 ரூபாய், நவம்பர் 5.00ரூபாய் என 10மாதங்களில் 8.00 ரூபாய்) அதிகபட்சமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது என்பதையும் சுட்டிக் காட்டியது.
அத்துடன் ஊக்கத்தொகை என்பது எந்த நேரத்திலும் திரும்பப் பெறப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என்பதால் அதனை கொள்முதல் விலை உயர்வாக அறிவிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எடுத்துரைத்ததோடு, ஒருவேளை பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிரந்தரமாக தொடருமானால் தமிழ்நாடு அரசு வழங்குவதாக கூறிய ஊக்கத்தொகையை கர்நாடகா, கேரளா மாநிலங்களைப் போல பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இந்த சூழலில் அரசு வழங்குவதாக அறிவித்த ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு முழுமையாக வழங்கிடாமல் இருப்பதற்காக கொள்முதல் விலையை கணக்கிடும் நடைமுறை அடிப்படையில் 4.3% கொழுப்பு சத்து, 8.2% திடசத்து கொண்ட பாலுக்கு மட்டுமே லிட்டருக்கு 3.00 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிடும் வகையிலும், அதனை விட குறைவான மொத்த சத்துகள் கொண்ட பாலுக்கு அதற்கேற்ற வகையில் குறைத்து வழங்கிடும் வகையில் பட்டியலிட்டு ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட பட்டியலால் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவு வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதை உணர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர் என்பதை அரசின் ஊக்கத்தொகை அறிவிப்பிற்கு பின்னரும் கூட கொஞ்சம் கூட ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிக்கவில்லை என்பதன் மூலம் உணர முடியும்.
ஏனெனில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை 4.3% கொழுப்பு சத்து, 8.2% திடசத்து கொண்ட பாலுக்கு மட்டுமே லிட்டருக்கு 3.00 ரூபாய் என்றால் அதை விட குறைவான சத்துகள் இருந்தால், உதாரணமாக பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் 4.0% + 8.0% சத்துகள் உள்ள பாலுக்கு ரூபாய் 2.88ம், 3.5% – 7 5% சத்துகள் உள்ள பாலுக்கு ரூபாய் 2.64 என சத்துகள் குறைவின் அடிப்படையில் ஊக்கத்தொகையும் படிப்படியாக குறைந்து கொண்டே போகும் போது அதனை எப்படி ஊக்கத்தொகையாக கருத முடியும்.? இதனால் அரசு அறிவித்த ஊக்கத்தொகை அறிவிப்பும், ஆவின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட பட்டியலும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதோடு, அரசின் அறிவிப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 3.00 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு அறிவித்து, ஆவின் நிர்வாக இயக்குனர் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாத காலம் ஆகும் சூழலில் நாளது தேதி வரை பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை தொடர்பாக அரசாணை எதுவும் வெளியிடப்படாததோடு, பால் உற்பத்தியாளர்கள் எவருக்கும் இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாததை வைத்து பார்க்கும் போது பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதற்காகவும், வெறும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டதோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
ஏற்கனவே ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில் அரசின் அறிவிப்பு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவும், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்களின் அறிவிப்பும் பால் உற்பத்தியாளர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து ஏமாற்றுவதற்காகவும், திமுக அரசைப் பற்றி மக்கள் பெருமையாக பேச வேண்டும் என்கிற விளம்பர நோக்கத்திற்காகவும் மட்டுமே வெளியிடப்பட்டது போல் தெரிவதால் இதற்கு “பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே ஆவினிற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் மனக்கவலையை போக்கும் விதமாக கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் லிட்டருக்கு 3.00 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையிட்டதாக கூறப்படும் உத்தரவு தொடர்பாக உடனடியாக அரசாணை வெளியிடுவதோடு, ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு சத்துக்கள் அடிப்படையில் இல்லாமல் லிட்டர் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கிடவும், அதனை சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் மட்டுமே நேரடியாக செலுத்தும் வகையில் உத்தரவிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
—
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
அலைபேசி:- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
12.01.2024 / பிற்பகல் 12.24மணி.