திருஅருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளிக்குள் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
சன்மார்க்க அன்பர்களின் அறம் சார்ந்த இக்கோரிக்கையை பல்வேறு கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் பார்வதிபுரம் பொதுமக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.
இவ்வளவு எதிர்ப்புகளுக்கும் இடையே நாளை 17-02-2024 வடலூர் பெருவெளிக்குள் பன்னாட்டு மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சன்மார்க்க நெறிக்கும் வள்ளலார் சொன்ன விதிமுறைகளுக்கும் எதிரானது. தமிழ்நாடு அரசு செய்யும் அத்துமீறல். இது கண்டிக்கதக்கது.
பெருவெளி என்பது பெரிய திடல் என்ற பொருளில் புரிந்துக்கொள்ள கூடாது. வள்ளல் பெருமானார் திரு அருட்பா ஆறாம் திருமுறையில் பதி விளக்கம் பகுதியில் கூறி இருக்கும் திருப்பாடல்களை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் உண்மை நமக்கு புரியும்.
இந்த உலகம் இந்த பேரண்டம் யாவும் வெளிகளால் சூழ்ந்து இருப்பது. அதில் இயற்கை உண்மையாய் இருப்பதே அருட்பெருஞ்சோதி என்கிற இறை தத்துவம்.
ஆறாம் திருமுறை பாடல்களில் பெருமானார் பூதவெளி, உபவெளி, அடிவெளி, பகுதிவெளி, தற்பரவெளி, சிற்பரவெளி, பரவெளி, பாராபரவெளி, சுத்தவெளி, சிவவெளி, அருள்வெளி, இயற்கை உண்மைவெளி என முப்பதுக்கும் மேற்பட்ட வெளிகளை கூறுகிறார்.
இப்படி எல்லாவெளிகளையும் கடந்து இயற்கை உண்மை வெளியாய் அருட்பெருவெளியில் இறை விளங்குகிறது. இதன் தத்துவம் தான் பெருவெளிக்குள் சத்தியஞானசபை.
இதனால் பெருவெளிக்குள் கட்டிடங்கள் அமைக்க கூடாது. பெருவெளியாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றோம்.
வடலூர் பெருவெளியில் அமைந்துள்ள சத்திய ஞான சபையின் விளக்கத்தை அறியாமல் அரசு நடந்து கொள்வது மிகுந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது.
வள்ளலார் சொன்ன விதிகளை மீறி மாற்றாக செய்யப்பட்ட செயல் யாவும் வீபரிதமாய் மாறி போனதை உலகம் அறியும்.
சத்தியஞானசபை முன் போடப்பட்ட பந்தல் தீ பற்றி ஏறிந்தததும் சத்தியஞானசபை மற்றும் தர்மசாலையில் விதிமுறைகளை மீறி நடந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். தற்சமயம் அடிக்கல் நாட்டு நிகழ்வை ரத்து செய்ய வேண்டும். வேறொரு இடத்தில் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மதிக்காமல் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைத்தே தீருவோம் என்றால் சத்தியஞான சபையில் விதி மீறல் நடைப்பெற்றபோது வள்ளலார் கூறிய வாய்மொழியையே முன்மொழிகின்றேன்.
“சொல்லிவிட்டேன் இனி வருவதற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அனுபவியுங்கள்”.
—
தோழமையுடன்,
வே. சுப்ரமணியசிவா,
வள்ளலார் ஆய்வாளர்.
16-02-2024