நம்மாழ்வார் வேளாண்மை வழியைப் பின்பற்றி தற்சார்பு வாழ்வியல் இயற்கை வேளாண்மையைச் சத்தியமங்கலம் அருகே வெற்றிகரமாக செயல்படுத்தி வந்த உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள், 47 அகவை இளமையில் 24.02.2024 அன்று மாரடைப்பால் திடீரென்று காலமான செய்தி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எடுத்துக்காட்டான இயற்கை வேளாண்மையும், வாழ்வியலும் கொண்ட பெருமக்களுக்குப் பேரிழப்பு!
இயற்கை வேளாண்மையை இலாபத்துடன் செய்ய முடியாது என்று நிலவிவந்த அச்சத்தைத் தகர்த்து, இலாபத்துடன் வெற்றிகரமாகச் செய்து வந்தார் உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள்! அதில் வந்த வருவாயைத் தற்சார்பு வாழ்வியலுக்காகத் தொண்டு செய்யும் அமைப்புகளுக்கும், நலிவுற்ற அன்பர்களுக்கும் உதவி வந்தார்.
“நம்மாழ்வாரின் ஆலம் விழுதுகள்” என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து நிறுவி, அதன் வழி பொது நலச் செயல்பாடுகளை – நலிவுற்ற அன்பர்களுக்கான உதவித் திட்டங்களை செய்து வந்தார்.
உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்களின் திடீர் மறைவுக்குப் பெருந்துயரத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து பெருந்துயரில் ஆழ்ந்துள்ள இல்லத்தார்க்கும், அன்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
ஐயா. பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்