Home>>அரசியல்>>தூய்மை பணியாளர்கள் பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர வாழ்க்கை தரம் மாறவில்லை.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தூய்மை பணியாளர்கள் பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர வாழ்க்கை தரம் மாறவில்லை.

தூய்மை பணியாளர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதினாலோ, அவர்களுக்கு உணவு பரிமாறுவதினாலோ, தேநீர், பிஸ்கட், பண் வாங்கி கொடுப்பதினாலோ அவர்கள் பிரச்சினைகள் தீர போவதில்லை. 40 ஆண்டுகள் அவர்களின் உழைப்பை சுரண்டி, மிகக் கேவலமாக நடத்தி இருக்கிறது இரண்டு திராவிட கட்சிகளும். காவல்துறை துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்ல சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் நாங்கள் நடத்திய போராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எதற்கும் மசியாத அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எல்லாம் தாரை வார்ப்பதில் மட்டும் குறி.
2005 காலக்கட்டத்தில் நிரந்தர துப்புரவு பணியாளர்களாக 17000 பேர் இருந்தனர். அப்போது சென்னை மக்கள் தொகை சுமார் 55 லட்சம் பேர். இப்போது சென்னையில் சுமார் 88 லட்சம் மக்கள் தொகை ஆகும். எத்தனை தூய்மை பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையில் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தனியார் மூலம் 22,461 பேரும், அரசு மூலம் 15, 053 பேரும் ஆக மொத்தம் 37, 514 தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி பணி புரிகிறார்கள்.

2018ல் சங்கங்கள் குற்றச்சாட்டு படி 26,000 பேர் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுவது தான் பெரிய கொடுமை. அதில் நிரந்தர தொழிலாளர்கள் மிகக் குறைவே. 2023ம் ஆண்டில் M/s. Urabaser மற்றும் M/s. chennai Enviro என்ற தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து தூய்மை பணியாளர்களின் உழைப்பை சுரண்டி வருகிறது திராவிட மாதிரி அரசு. 2018ல் ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் கம்பெனிக்கு ஒப்பந்தம் விட்டு, சரியாக துப்புரவு பணி செய்யாமல், தூய்மை பணியாளர்களின் கொடுமைக்கு ஆளாகினர். அந்த தனியார் கம்பெனி பல ஊழல்களில் ஈடுபட்டது. அந்த கம்பெனி டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி பிரிட்டிஷ் காலத்தில் இங்கிலாந்துக்கு பிறகு உருவாக்கப்பட்ட பழமையான , 2வது மாநகராட்சி ஆகும். இந்த நாட்டை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர அவர்களின் வாழ்க்கை தரம் மாறவில்லை. அவர்களை இந்த அரசும் கண்ணியமாக நடத்தவில்லை. இரவு, பகலாக உழைக்கும் உழைப்பாளிகள் ரத்தத்தை அட்டை பூச்சி போல சென்னை மாநகராட்சியும், அரசும் உறிஞ்சி கொண்டிருக்கிறது. பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்பது கேள்விக்குறிதான்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எத்தனை பேரை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்தது என்றால் பதில் இல்லை. அதிமுகவும் பெருசா ஒன்றையும் கிழிக்கவில்லை. எவரையும் நிரந்தரம் செய்யவில்லை. 22,461 பேர் தனியார் மூலம் பணி அமர்த்தப்பட்டு தூய்மை பணியில் ஈடுபடுகிறார்கள் எனில் இது தான் இந்த ஆட்சியாளர்களின் இலட்சணம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளின் குறைந்த பட்ச ஊதியம் மாறுபடுகிறது. நீலகிரி , ஊட்டி போன்ற நகரங்களில் அதிகாலை குளிரிலும் தூய்மை பணியாளர்கள் சமூக பாதுகாப்பு இல்லாமல் பணி செய்கிறார்கள்.

ஒன்றிய அரசு சுவட்ச் பாரத் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதாவது தெருவில் எந்த குப்பையும் இல்லாத இடத்தில் ஒரு பிரபல நடிகர், நடிகையை வைத்து குப்பைகளை கூட்டி அள்ளுவது போல ஊடகங்களுக்கு படங்கள் கொடுப்பதற்கு மட்டும் பல கோடிகள் செலவு. இதில் சில கோடிகள் கொடுத்தால் அந்த மக்களின் வாழ்வாதாரம் முன்னேறி இருக்கும். கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடிக்க சென்னை மாநகராட்சி தூய்மை பணி முழுவதும் தனியார் வசமானது. எத்தனை தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு இன்றி நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசு ஒரு நிவாரணமும் வழங்கவில்லை.

வெறும் பேச்சளவில் சமூகநீதி பேசும் திமுக, அதிமுக தூய்மை பணியாளர்களை எந்த அளவில் நடத்துகிறது என்பதை புள்ளி விபரத்துடன் சொல்கிறேன் கேளுங்கள். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் முதல்வர் தான் இதற்கு முழு பொறுப்பு. காவல்துறையில் ஏறத்தாழ 1149 பேர் சுமார் 40 வருடங்களாக தூய்மை பணி செய்து வருகின்றனர். 2000 – 2005ம் ஆண்டில் ரூ.90 முதல் 900 வரை சம்பளம் பெற்றனர். டிஜிபி அலுவலகம், கமிஷனர் அலுவலகம், ராஜரெத்தினம் மைதானம், காவலர் பயிற்சி மையம் இப்படி பல காவல்துறை இடங்களில் இவர்கள் பணி செய்கிறார்கள்.

பல போராட்டங்களின் விளைவாக தற்போது ரூ.8000, 10000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் கூட நிரந்தரம் செய்யப்படவில்லை. 15 வருடத்திற்கு முன் 45 பேர் சென்னை உயர்நீதிமன்றம் அணுகி , எங்களுக்கு பணி நிரந்தரம், உழைப்புக்கு ஏற்ற சரியான ஊதியம் வேண்டும் என பெண்ணுரிமை இயக்கம் சார்பில் வழக்கு தொடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று 45 பேருக்கு நீதிமன்றம் முழு ஊதியம், நிரந்தர பணி வழங்க உத்தரவிட்டது. அதில் 4 பேருக்கு மட்டும் அரசு ஆணை வழங்கி ரூ.38000/- தற்போது ஊதியம் பெற்று வருகிறார்கள். பலர் பணி ஓய்வு பெற்று விட்டார்கள். ஓய்வு பெறும் போது கிடைத்த பணம் ரூ.10,000 மட்டுமே. தற்போது நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு, நீதிக்காக காத்து இருக்கிறார்கள் தூய்மை பணியாளர்கள்.

காவல்துறையில் துப்புரவு பணி செய்து ஓய்வுபெற்ற ரவனம்மா பேசும் போது, 2005ல் எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் போது மு.க. ஸ்டாலின் அவரிடம் எங்க பிரச்சினையை சொன்னபோது, நாங்க தான் ரூ 60ல் இருந்து ரூ.900மாக மாற்றினோம் என பெருமையாக பேசினார். இதைவிட கொடுமை வேற என்ன இருக்க முடியும்? அந்த காசில் அவங்க குடும்பம் நடத்த முடியுமா? இன்னைக்கும் அரசு கொடுத்து இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரூ.10,000/- வாடகையில் இருந்து வருகிறேன். நான் ஓய்வு பெறும் போது அரசு எனக்கு கொடுத்த ஊதியம் ரூ 10000 தான்.
காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெறும் போது ரொம்ப ராஜமரியாதை செய்து பிரியா விடை கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் தூய்மை பணியாளர்கள் ஓய்வு பெறும் போது ரூ.2 ஆயிரத்தை உரையில் போட்டு அனுப்புவார்கள். இது தான் 40 வருட உழைப்புக்கு அரசு கொடுக்கும் மரியாதையா? பணி நிரந்தரம் இல்லை, ஓய்வு ஊதியம் இல்லை. அந்த ரூ. 2 ஆயிரம் கூட எனக்கு கிடைக்கல.

மாரியம்மானு ஒருவர் காவல்துறையில் துப்புரவு பணி செஞ்சாங்க. கோவிட் அப்போ இறந்து போயிட்டாங்க. மேல் அதிகாரி கிட்ட அவங்களுக்கு ஏன் உதவி பண்ணலைன்னு கேள்வி கேட்டேன். அதற்கு பழி வாங்கும் விதமாக நான் ஓய்வு பெறும் போது ரூ 2 ஆயிரத்தை கூட தராமல், நீ தானே கேள்வி கேட்ட ஆளு, உனக்கு காசு இல்ல போனு சொல்லி அனுப்பிட்டார். இப்போ சிறுநீரக செயலிழப்புடன் தினமும் டையாலிசஸ் பண்ணிட்டு சிரமப்படுகிறேன் என கண்ணீரோடு பேசினார் ரவனம்மா. இது தான் பல தூய்மை பணியாளர்களின் நிலை.

இந்த அரசு தூய்மைபணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கபட்டு, கொள்ளை லாபம் பார்க்கிறது பன்னாட்டு நிறுவனம். தூய்மை பணியாளர்கள் தினமும் சாவுகிறார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க சட்டம் சொல்கிறது. அதை நடைமுறைப்படுத்த அரசு மறுக்கிறது. எல்லாம் உழைப்புச் சுரண்டல். எத்தனை போராட்டங்களை தூய்மை பணியாளர்கள் முன் எடுத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டதா திமுக அரசு? மலக்குழியில் எத்தனை மரணங்கள்? அவர்களின் குடும்பங்களுக்கு எத்தனை பேருக்கு இழப்பீட்டை அரசு கொடுத்தது?

மனித கழிவுகளை மனிதனே அள்ள உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தடை போட்டும், விசவாயு தாக்கி இறப்போர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடுகள் சரியாக கிடைத்த பாடில்லை. ஒரு நாள் தூய்மை பணியாளர்கள் இந்த நாட்டை சுத்தம் செய்யவில்லை எனில் நாடு நாறி போய்விடும். இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்களை நடத்தும் விதம் படு மோசம். அவர்களுக்கு என்ன சமூக பாதுகாப்புகளை இந்த அரசுகள் உறுதி செய்திருக்கிறது?? தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கிற பணத்தை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க எது உங்களை தடுக்கிறது? அந்த தனியார் நிறுவனம் எவ்வளவு ஊழல் செய்தது என்பதை உங்களால் வெள்ளை அறிக்கையாக கொடுக்க முடியுமா?

இன்று அவர்களுடன் விருந்து சாப்பிடுகிறார் முதல்வர். துணை முதல்வர் உதயநிதி அவர்களோ தேநீர், பிஸ்கட் கொடுத்து போட்டோ எடுத்து கொள்கிறார். எல்லாம் மகிழ்ச்சி தான். ஆனால் தூய்மை பணியை தனியார் வசம் கொடுப்பதை நிறுத்துங்கள். சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துங்கள். அது மட்டும் தான் அவர்களின் உழைப்பை அங்கீகருக்கும். விருந்து, தேநீர், பிஸ்கட், புகழாரம் எல்லாம் போஸ் கொடுத்து, விளம்பரத்துக்கு மட்டும் தான் பயன்படும் முதல்வரே? சமூகநீதி அரசு என்பது அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சமூகத்தில் சம உரிமையுடன், கண்ணியமாக வாழ வைப்பது. இதை எப்போது செய்வீர்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே??


கட்டுரை,
திரு. யா. அருள்,
எழுத்தாளர்,
சென்னை.

Leave a Reply