Home>>அரசியல்>>மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள நல்லதண்ணீர் நீர்தேக்கத்தை (நம்மாழ்வார் ஏரி) மீட்க கோரியும், இனி அந்த நீர்த்தேக்கத்தில் மன்னார்குடி நகராட்சி தரப்பில் இருந்து எவ்விதமான கழிவுகளையும் கொட்டக்கூடாது என்று கோரிக்கையுடன் “நல்லதண்ணீர் நீர்தேக்க பாதுகாப்புக் குழுவினர்” மற்றும் அந்த நீர்தேக்கத்தின் அருகாமையில் உள்ள தெருவாசிகள் பேரணியாக சென்று மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் 17/10/2024 அன்று மனு கொடுத்து அங்குள்ள நீர்நிலையை காக்க கேட்டுக்கொண்டனர்.

இந்த பேரணியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கடிதங்கள் தங்கள் பார்வைக்கு…


மேலும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்கள். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்…


அனுப்புனர்:
நல்லதண்ணீர் நீர்தேக்க பாதுகாப்புக் குழு,
மன்னார்குடி.

தொடர்புக்கு:
ஒருங்கிணைப்பாளர்கள்,
இரா. ராசசேகரன் 9994006294,
ஏ. பார்த்திபன் 9443785952

பெறுநர்:
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

மன்னார்குடி நகர முழுமைக்கும் 1960-62 ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அன்றைய தமிழக முதல்வர் திரு. காமராஜ் காலத்தில் குடிநீர் தேக்கி மன்னார்குடி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் செய்த பழைய வாட்டர் டேங்க் (குடிநீர் குளம்) என்று அழைக்கப்பட்ட குளத்தில் தற்போது மன்னார்குடி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தூர்க முயற்சிக்கும் நகராட்சி நிர்வாகம் உடனே நிறுத்திட வேண்டும்.

இந்த குப்பை கொட்டும் இடத்தில் சுமார் 1200 பெண்கள் படிக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதோடு மனநலம் குன்றியோர் பள்ளியும் உள்ளது. இதில் சுமார் 70 பேர் படிக்கின்றனர். மற்றும் பெண்கள் தங்கும் விடுதியும், 100 மீட்டர் தூரத்தில் இதய மருத்துவமனையும், அரசு கல்லூரி ஆண்கள் தங்கும் விடுதியும், பென்லண்ட் மாடல் பள்ளியும், ஆரம்ப சுகாதார மகப்பேறு நிலையமும், மூன்று தனியார் பள்ளிகளும் உள்ளது. அதைச் சுற்றி பொதுமக்கள் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற அன்று குப்பையில் ஏற்பட்ட தீ ஒரு மாதத்திற்கு மேலாக புகை மண்டலமாக இருந்தது. காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனைகள் ஏற்படுத்தியது.

நகரத்தில் சேகரிக்கும் குப்பைகளை இங்கு கொட்டுவதால் தேங்கும் நீரில் வளரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் தாக்கும் அபாயமும், கழிவுநீர் குடிநீரோடு கலப்பதனால் டைபாய்டு, வயிற்றுப் போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.

குப்பைகளை எரிக்கும் போது வெளியாகும் டை-ஆக்சின் எனும் நச்சு புற்றுநோயை உண்டாக்கும். புகையை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள் கடும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாவார்கள். எந்த காரணங்களுக்காக இதற்கு முன் இருந்த இடத்தில் குப்பை கொட்டுவதை அப்பகுதி மக்கள் எதிர்த்தார்களோ அது எங்களுக்கும் பொருந்துமல்லவா? எனவே எங்கள் மீது கருணை கொண்டு எங்கள் பகுதியில் குப்பையைக் கொட்டாமல், ஊருக்கு வெளியே சேமித்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மன்னார்குடி நகராட்சியைக் கேட்டுக்கொள்கிறோம். புதிய நீராதாரங்களை உருவாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் பல இலட்சம் செலவில் ஒரு பொது அமைப்பு மறு சீரமைப்பு செய்த நம்மாழ்வார் ஏரி என்ற நீராதாரத்தை குப்பை மேடாக்க முயற்சிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேற்படி குப்பையை கொட்டுவதை நிறுத்தி எங்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


செய்தி உதவி:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply