மக்கள் நல்வாழ்வு துறையின் செயலாளராக சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் ஆக பொறுப்பேற்றதில் இருந்து அந்த துறையில் தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை வேகமாக செய்து வருகிறார். மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைத்து விட்டார். தற்போது நூறு ஆண்டுகளுக்கு மேல் லட்சக்கணக்கான மன நோயாளிகளை குணப்படுத்திய கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளில் மும்மராக இருக்கிறார்.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தை NGOவிடம் ஒப்படைத்து விட்டால் பின் அரசு எதற்கு? The Precent Organisational set up is not capable of handling the transformational chat that is required at IMH. தற்போது உள்ள அரசு கட்டமைப்பால் மனநல காப்பகத்திற்க்கு தேவைப்படும் மாற்றத்திற்கான நிலையை கையாள முடியவில்லை எனவே தனியார் தொண்டு நிறுவனத்திடம் Corporate Social responsibility நிதி மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பாகத்தை நிர்வகிக்க முயல்கிறது.
அரசு நிர்வாகத்தை இதை விட எந்த அதிகாரியும் கேவலப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் எத்தனையோ திறமை வாய்ந்த அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். கரை படியாத , திறமையான மருத்துவர்களை கொண்டு மனநல காப்பக கட்டமைப்பை மாற்ற முடியாதா? இதை அரசு செய்ய முடியாதா? அரசுக்கு அந்த தகுதி இல்லையா? கார்ப்பரேட் நிறுவனத்தின் CSR நிதி மற்றும் NGO மூலம் தான் இதை செய்ய முடியும் என்றால் அரசு எதற்கு??
தமிழ்நாட்டில் உள்ள அரசின் எல்லா செயல்பாடுகளையும் கார்ப்பரேட் நிறுவன மூலம் செயல்படும் NGOவிடம் கொடுத்துவிட்டு போய் விடுங்கள். அரசு செயலற்று நிற்கிறது. அரசு அதிகாரிகள் திறமை இல்லாதவர்கள் என இந்த கடிதத்தில் உள்ள அந்த வார்த்தை சொல்கிறது. மருத்துவம் மனித வாழ்வின் முக்கியமான ஒன்று. அதை தனியார் வசம் ஒப்படைத்தால் வியாபார நோக்கமாகிவிடும்.
மருத்துவ சுகாதாரத்தை எப்போதும் அரசிடம் தான் இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். வெனிசுலா நாட்டில் கல்வியும், மருத்துவமும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு தனியாருக்கு வேலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மகத்தான பணியை செய்து முடித்தவர் அந்த நாட்டின் அதிபராக கியூஸ் சாவேஸ். திராவிட மாடல் என பெயருக்கு மட்டும் சொல்லிக்கொண்டு கார்ப்பரேட் மாடலாக மாறி இருப்பது தான் திமுக ஆட்சியின் அவலம்.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உடனே இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி மருத்துவர். பூரண சந்திரிகா, மருத்துவர். அமலோற்பவநாதன், மருத்துவர். மணிவேலன் உட்பட திறமையான மருத்துவர்களை கொண்டு தற்போது உள்ள அரசு மனநலம் காப்பக கட்டமைப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தனியார் வசம் ஒப்படைக்கும் பொறுப்பை கைவிட்டு, அரசே போதுமான நிதியை ஒதுக்கி உலகத்தரத்தில் அதன் சேவையை கொண்டு செல்ல கண்காணிப்புக் குழுவை அரசு உருவாக்க வேண்டும்.