Home>>இந்தியா>>கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக!
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவணிகம்

கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக!

“கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஜவுளித்தொழிலை பாதுகாத்திடுக!” என சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தல்!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு கூட்டம் இன்று (நவம்பர் 24) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு…

பருத்தி நூல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளி தொழில் துறை சார்ந்த அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்பிரச்சனையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருப்பூரில் நவம்பர் 26ஆம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இதர வர்த்தக, வியாபார நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. பல லட்சம் பேரின் வேலைவாய்ப்புக்கு ஆதாரமான ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடைபெறும் இந்த போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

பருத்தி நூல் விலை கடந்த நவம்பர் 1ஆம் தேதி கிலோவுக்கு ரூ.50 என்ற அளவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறை கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், இதைச் சார்ந்த சமூகப் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நூல் விலை உயர்வைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காமல் போனால், பஞ்சு, நூல் வர்த்தகத்தில் ஈடுபடும் மிகப்பெரும் முன்பேர வர்த்தக நிறுவனங்கள், பதுக்கல்காரர்கள் வரக்கூடிய மாதங்களில் நூல் விலையை இன்னும் கடுமையாக அதிகரிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது.

இது ஜவுளித் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மேலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான, நல்ல விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யவும், நூற்பாலைகளுக்கு உரிய விலையில் பஞ்சு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் இந்திய பருத்திக் கழகத்தின் (சிசிஐ) மூலம் பருத்தி கொள்முதல் செய்து நேரடியாக நூற்பாலைகளுக்கு விநியோகம் செய்ய முன்வருவதோடு, தேவையான நிதியை பருத்திக் கழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிடவும் முன்வர வேண்டும். நெருக்கடியான இந்த நேரத்தில் பஞ்சு ஏற்றுமதி செய்வதை முழுமையாகத் தடை செய்வதோடு, செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தும் நோக்கத்தில் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் ஏற்றுமதி பின்னலாடை மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொழிலையும், விசைத்தறி, கைத்தறி ஜவுளித் தொழிலையும் பாதுகாக்க, ஒன்றிய அரசு உரிய தலையீடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் அதற்கான கோரிக்கiயை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், தமிழக ஜவுளித் தொழில் துறையின் நீடித்த, சீரான வளர்ச்சிக்கு உதவும் வகையில், ‘தமிழ்நாடு பருத்திக் கழகம்’ என்ற தனி நிறுவனத்தை தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்).

Leave a Reply